×

பழனியில் ஜூன் அல்லது ஜூலையில் 2 நாள் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு: அமைச்சர் பி.கே.சேகர்பாபு தகவல்

சென்னை: பழனியில் ஜூன் அல்லது ஜூலை மாதத்தில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு 2 நாட்கள் நடைபெற உள்ளது என அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்துள்ளார். சென்னை இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் 45,477 கோயில் பணியாளர்களுக்கான கட்டணமில்லா முழு உடற்பரிசோதனைத் திட்டத்தினை தொடங்கி வைக்கும் வகையில் முதற்கட்டமாக சென்னையில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு இன்று தொடங்கி வைத்தார். பின்னர் அமைச்சர் சேகர்பாபு நிருபர்களிடம் கூறியதாவது: இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகக் கட்டுப்பாட்டிலுள்ள கோயில்களில் பணிபுரியும் அர்ச்சகர்கள் மற்றும் பணியாளர்களின் நலனை பாதுகாத்திடும் வகையில் அர்ச்சகர் மற்றும் பணியாளர்களுக்கு புத்தாடைகள் மற்றும் சீருடைகள், பொங்கல் கொடை, குடியிருப்புகள், ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம், ஓய்வுபெற்ற அர்ச்சகர்கள் மற்றும் பணியாளர்களுக்கு பொங்கல் கொடை போன்ற பல்வேறு முனைப்பான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு அவர்களின் நலன் பேணப்பட்டு வருகிறது.

மேலும், தமிழ்நாடு முதல்வர் ஆட்சி பொறுப்பேற்றவுடன் கடந்த ஆட்சி அமைக்கப்படாமல் இருந்த இந்து சமய அறநிலையத்துறை ஆலோசனைக் குழுவினை அமைத்து, அதன் உறுப்பினர்களாக ஆதீன பெருமக்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் நியமனம் செய்யப்பட்டனர். 2022ம் ஆண்டு ஜனவரி மாதம் இக்குழுவின் முதல் கூட்டமும், அதனைத் தொடர்ந்து கடந்த மாதம் இரண்டாவது கூட்டமும் நடைபெற்றது. அக்கூட்டத்தில், தமிழ் கடவுளான முருகப்பெருமானின் புகழுக்கு புகழ் சேர்க்கின்ற வண்ணம் உலகெங்கும் இருக்கின்ற முருகர் பக்தர்கள் ஒன்றுகூடி பல முக்கிய நிகழ்வுகளை மேற்கொள்ளும் வகையில் பழனியில் ஜூன் அல்லது ஜூலை அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு 2 நாட்கள் நடத்தப்படும், 45,477 கோயில் பணியாளர்களுக்கு ஆண்டிற்கு ஒருமுறை கட்டணமில்லா முழு உடற்பரிசோதனை திட்டத்தை செயல்படுத்தப்படும் உள்ளிட்ட 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

இந்த ஆலோசனைக்குழு தீர்மானங்களை நிறைவேற்றிடும் வகையில் இன்று 45,477 கோயில் பணியாளர்களுக்கு கட்டணமில்லா முழு உடற்பரிசோதனைத் திட்டம் சென்னை அப்பல்லோ மருத்துவமனை மூலம் நடத்தப்படுகிறது. முதற்கட்டமாக சென்னை மண்டலம் 1 மற்றும் 2 சேர்ந்த 1,277 கோயில் பணியாளர்கள் பயன்பெறும் வகையில் நடத்தப்படும் முழு உடற்பரிசோதனை திட்டத்தில் முழு ரத்த பரிசோதனைகள், கண் பரிசோதனை, எக்ஸ்ரே, இ.சி.ஜி., எக்ஃகோ, அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் ஆகிய பரிசோதனைகளும், சிறப்பு மருத்துவர்களின் ஆலோசனைகளும் வழங்கப்படுகிறது. இம்முகாம் மூன்று நாட்கள் நடைபெறும். கோயில் பணியாளர்களுக்கான முழு உடற்பரிசோதனை முகாம் சென்னை மண்டலத்தை தொடர்ந்து 6 மாத காலத்திற்குள் அனைத்து மாவட்டங்களிலும் நடத்தப்பட்டு பணியாளர்களின் நலன் காக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். இந்நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் முரளீதரன், கூடுதல் ஆணையர்கள் சங்கர், திருமகள், ஹரிப்ரியா மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post பழனியில் ஜூன் அல்லது ஜூலையில் 2 நாள் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு: அமைச்சர் பி.கே.சேகர்பாபு தகவல் appeared first on Dinakaran.

Tags : 2-day International Muttamil Murugan Conference ,Palani ,Minister ,B. K. Sekarpapu ,Chennai ,International Muttamil Murugan Conference ,HINDU RELIGIOUS INSTITUTE OF CHENNAI ,2 Day ,B. K. ,Sekarbaba ,Dinakaran ,
× RELATED வயல்வெளி பள்ளியின் நன்மை வேளாண் துறை அட்வைஸ்