×

நாட்றம்பள்ளி அருகே பழையூர் வட்டத்தில் பொதுவழி சிமெண்ட் சாலையை முள்வேலியால் அடைத்த காவலர்

*நடவடிக்கை எடுக்க கலெக்டரிடம் ஊர் மக்கள் மனு

திருப்பத்தூர் : நாட்றம்பள்ளி அருகே பழையூர் வட்டத்தில் பொதுவழி சிமெண்ட் சாலையை முள்வேலி அமைத்து அடைத்த காவலர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறைதீர்வு கூட்டத்தில் ஊர் மக்கள் புகார் மனு அளித்தனர். திருப்பத்தூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு கூட்டம் கலெக்டர் தர்ப்பகராஜ் தலைமையில் நேற்று நடந்தது. தனித்துணை கலெக்டர் பெலிக்ஸ்ராஜா, மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் ஜெயகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த குறைதீர்வு கூட்டத்தில் வீட்டுமனை பட்டா, இலவச வீடு, குடிநீர் வசதி, சாலை வசதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்களிடம் இருந்து 325 மனுக்கள் பெறப்பட்டது.

மேலும் முதல்வரின் முகவரி உள்ளிட்ட பல்வேறு திட்ட மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைத்து துறை அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
நாட்றம்பள்ளி அடுத்த கல்நார்சாம்பட்டி பகுதியைச் சேர்ந்த ஊர் பொதுமக்கள் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது: பழையூர் வட்டத்தில் அரசு புறம்போக்கு இடத்தில் சுமார் 100 ஆண்டுகளுக்கு மேலாக 20க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. அதேபோல் ஆதிதிராவிட குடும்பத்தினரும் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் அங்கிருந்து வீட்டிற்கு செல்ல ஊராட்சியில் இருந்து 20 வருடங்களுக்கு முன்பு சிமெண்ட் சாலை அமைக்கப்பட்டது.

அதனை தற்போது காவல்துறையில் பணிபுரிந்து வரும் காவலர் ஊராட்சியில் அமைக்கப்பட்ட சிமெண்ட் சாலை என்னுடைய பட்டாவில் உள்ளது என்று கூறி சிமெண்ட் சாலை முழுவதும் வேலி அமைத்து அடைத்துவிட்டார். மேலும் அப்பகுதி மக்களை அவதூறாகவும் பேசி வருகிறார். எனவே வழிபாதையை ஏற்படுத்தி தர வேண்டும். இதுதொடர்பாக அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது.

ஜோலார்பேட்டை அருகே தாமலேரிமுத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் சுதா இளங்கோ கொடுத்த மனுவில், ‘சாலை நகர் முதல் கே.பி.வட்டம் வரை சாலை விரிவாக்கப்பணிகளுக்காக அங்கிருந்த தெரு மின்கம்பங்கள் அகற்றப்பட்டன. சாலை விரிவாக்கப்பணிகள் முடிந்ததும், புதிய மின்கம்பங்கள் அமைக்கப்படவில்லை. எனவே, பழைய மின் கம்பங்களில் இருந்து அகற்றப்பட்ட மின் அளவீடு கருவிகளை புதிய மின் கம்பத்தில் பொருத்தி, 50 மின் கம்பங்களை அமைக்க வேண்டும்’ என கூறப்பட்டிருந்தது.

நாட்றம்பள்ளி அருகே மல்லப்பள்ளி ஊராட்சியைச் சேர்ந்த பொதுமக்கள் அளித்துள்ள மனுவில், ‘மல்லப்பள்ளி ஊராட்சி 6வது வார்டு பிஞ்சுகான் வட்டம் பகுதியில் ஏற்கனவே 2 செல்போன் டவர்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் தற்போது கூடுதலாக புதிய செல்போன் டவர் அமைப்பதற்கான முயற்சிகள் பிஞ்சுகான் வட்டத்தில் நடந்து வருகிறது. இதை தடுத்து நிறுத்த வேண்டும்’ என குறிப்பிடப்பட்டிருந்தது.

நாட்றம்பள்ளி அடுத்த கேத்தாண்டப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் அளித்த மனுவில், ‘கேத்தாண்டப்பட்டி, கூத்தாண்டகுப்பம் போன்ற பகுதிகளில் 20 ஆண்டுகளுக்கு முன்பு சாலை அமைக்கப்பட்டது. இந்த சாலைகள் தற்போது குண்டும், குழியுமாக இருப்பதால் சாலைகளை சீரமைக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது.

பின்னர் இக்கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 6 மாற்றுத்திறனாளிகளுக்கு ₹72 ஆயிரத்து 500 மதிப்பிலான செயற்கை கால், செயற்கை கை, ஸ்மார்ட் போன், ஊன்றுகோல்கள் ஆகிய அரசு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் தர்ப்பகராஜ் வழங்கினார்.

The post நாட்றம்பள்ளி அருகே பழையூர் வட்டத்தில் பொதுவழி சிமெண்ட் சாலையை முள்வேலியால் அடைத்த காவலர் appeared first on Dinakaran.

Tags : Palayur circle ,Nadrampalli ,Tirupathur ,Palayoor ,
× RELATED பாஜ கவுன்சிலர் கைது