×

வட மாநில இளைஞர்களுக்கு மட்டும் வேலை வழங்கப்படுகிறது ரயில்வே பயிற்சி முடித்தவர்கள் தேர்தல் புறக்கணிக்க முடிவு

*குறைதீர்வு கூட்டத்தில் கலெக்டரிடம் மனு

ராணிப்பேட்டை : ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் கலெக்டர் வளர்மதி தலைமையில் நேற்று நடந்தது. பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடமிருந்து கோரிக்கைகளை வலியுறுத்தி மனுக்களை பெற்று குறைகளை கேட்டறிந்து விசாரணை மேற்கொண்டு, தகுதியானதாக இருப்பின் உடனடியாக நடவடிக்கை எடுக்கவும், மனு நிராகரிப்பிற்கான காரணங்களையும், மனுதாரர்களுக்கு வழங்கிட வேண்டும் என்று அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

மேலும் டிஆர்ஓ சுரேஷ், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் முரளி, கலெக்டரின் நேர்முக உதவியாளர்(பொது) விஜயராகவன், உதவி ஆணையர் கலால் வரதராஜ், மாற்றுத்திறனாளி நல அலுவலர் சரவணகுமார் ஆகியோரும் மனுக்களை விசாரணை செய்தனர். கூட்டத்தில் ஆற்காடு நரிக்குறவர் இனத்தை சேர்ந்த கடம்பன் அளித்த மனுவில், ‘ஆற்காடு பேருந்து நிலையம் காமராஜர் சிலை அருகே 28 குடும்பங்கள் 40 வருட காலமாக வசித்து வருகிறோம். தற்போது ஆற்காடு பேருந்து நிலையத்தை இடித்து புதிதாக பேருந்து நிலையம் கட்ட உள்ளதால் நாங்கள் தங்க இடம் இல்லாமல் கஷ்டப்படுகிறோம். எங்களுக்கு விரைவில் வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது.

கொண்டகுப்பம் சிலோன் காலனி பகுதியை சேர்ந்தவர் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: கீரைசாத்து செக்போஸ்ட் முதல் தகரகுப்பம் கூட்ரோடு வரை தொடர்ச்சியாக நூறு ஆண்டுகளுக்கு முன்பே பொது போக்குவரத்து சாலை இருந்துள்ளது. இந்த சாலை மூலமாக கோடியூர், ராமாபுரம், வசூர், சிலோன் காலனி, கொண்டகுப்பம், ஓட்னேரி, தகரகுப்பம், குமணந்தாங்கள் வழியாக செல்கிறது. கொண்டகுப்பம் முதல் தகரகுப்பம் இடையே சாலையின் குறுக்காக புதியதாக அமைக்கப்பட்டு வரும் 8 வழி தேசிய நெடுஞ்சாலை அமைக்கப்பட்டுள்ளதால் பழைய சாலை துண்டிக்கப்பட்டு போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

எட்டு வழி சாலை அமைப்பதற்காக பள்ளேரி ஏரியில் இருந்து தினமும் லாரிகள் மூலம் மண்ணை ஏற்றி செல்கின்றனர். இதனால் பள்ளேரி முதல் தகரகுப்பம் வரையிலான சாலை கற்கள் முழுவதும் பெயர்ந்து போக்குவரத்திற்கு பயனற்று உள்ளது.

இந்த பகுதியில் 12 சிறு தொழில் நிறுவனங்களும், பல கோழிப் பண்ணைகளும் இயங்கி வருகின்றன. பள்ளி, கல்லூரி மற்றும் தொழிற்சாலைகள் பல்வேறு வாகனங்களும் பகுதியில் உள்ள கிராமங்களில் இருந்து செல்கின்றது. சாலை முழுமையாக பாதிக்கப்பட்டும் துண்டிக்கப்பட்டும் உள்ளதால் அனைத்து தரப்பு மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. துண்டிக்கப்பட்ட சாலைக்கு பதிலாக மாற்று சாலையும் மற்றும் பழுதடைந்த சாலையை விரைவில் புதிதாக அமைத்து கொடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

ரயில்வே ஆக்ட் அப்ரண்டீஸ் பயிற்சி முடித்தவர்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் பயிற்சி முடித்த ரயில்வே துறையில் ஆர்ட் அப்ரண்டீஸ் ஆகிய எங்களுக்கு பயிற்சி முடித்து 25 ஆண்டுகள் ஆகியும் பணி நியமனம் வழங்கப்படவில்லை. ஆனால் எங்களுக்கு இணையான காலகட்டத்தில் பயிற்சி முடித்த வட மாநில இளைஞர்களுக்கு மட்டும் 2020ம் ஆண்டு வரை வேலை வழங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தை சேர்ந்ததால் மட்டுமே எங்களை புறக்கணித்தார்கள். தமிழ்நாடு முழுவதும் சுமார் 17,000 பேர் வேலை வாய்ப்பு வழங்காமல், இதுதொடர்பாக பல கட்ட போராட்டங்கள் நடத்தி உள்ளோம். ஆனால் ரயில்வே நிர்வாகம் எங்களை கண்டு கொள்ளவில்லை. நாங்கள் பயிற்சி பெற்றது தமிழ்நாடு என்ற ஒரே காரணத்தால் எங்களை புறக்கணிப்பதால் எங்கள் வாழ்வாதாரத்தை தொலைந்து நிற்கிறோம். இதனால் எங்கள் குடும்பத்தினருடன் வருகிற நாடாளுமன்றத் தேர்தலை புறக்கணிக்க உள்ளோம்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.மேலும் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பொது மக்களிடமிருந்து மொத்தம் 335 மனுக்கள் பெறப்பட்டது. கூட்டத்தில் பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post வட மாநில இளைஞர்களுக்கு மட்டும் வேலை வழங்கப்படுகிறது ரயில்வே பயிற்சி முடித்தவர்கள் தேர்தல் புறக்கணிக்க முடிவு appeared first on Dinakaran.

Tags : northern ,Collector ,Ranipet ,Ranipet Collector ,Varamathi ,Dinakaran ,
× RELATED வட மாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு...