×

மூணாறில் முதிரைப்புழை ஆற்றில் நிரம்பி வழியும் கழிவுகள்

மூணாறு : கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் புகழ் பெற்ற சுற்றுலா தளமாக விளங்கும் மூணாறில் உள்ள முதிரைப்புழை ஆற்றில் குப்பைகள் மற்றும் கழிவுகளை கொட்டுவதால் சுகாதாரக்கேடு ஏற்படும் அபாயம் உள்ளது.மூணாறின் மையப்பகுதியில் கடந்து செல்வது தான் முதிரைப்புழை ஆறு. நல்ல தண்ணி ஆறு, கன்னிமலை ஆறு, குண்டலை ஆறு ஆகிய மூன்று ஆறுகள் சங்கமிக்கும் இடம் தான் மூணாறு நகராகும். இந்த நகருக்கு, தினசரி ஆயிரக்கணக்கில் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர்.

இதனால் முதிரைப்புழை ஆற்றை சுத்தம் செய்ய மூணாறு ஊராட்சி பல லட்சம் ரூபாய் செலவு செய்து பல திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறது. இந்நிலையில், முதிரைப்புழை ஆற்றின் இருபுறமும் வணிக நிறுவனங்கள், டீ கடைகள், தங்கும் விடுதிகள் பெருகியதாலும் ஆற்றில் கட்டிடக் கழிவுகள், குப்பைகள், பிளாஸ்டிக் கழிவுகள் கொட்டப்பட்டு வருவதாலும், தற்போது முதிரைப்புழை ஆறு குப்பைகள், கழிவுகளால் நிரம்பி வழிகிறது.

தற்போது வெயில் அதிகரித்ததோடு ஆற்றில் தண்ணீரின் வரத்து குறைந்துள்ளதால் கொட்டப்பட்டுள்ள குப்பைகள் ஆற்றின் கரையோரங்களில் தேங்கி நிற்கின்றன.
இதனால் அந்தப் பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. மூணாறு முருகன் கோவில் பாலம் அருகில், காய்கறி சந்தையின் பின்பகுதியிலும் அதிக அளவில் குப்பைகள் மற்றும் கழிவு நீர் தேங்கி கிடக்கின்றன.

மேலும் நகரில் செயல்பட்டு வரும் ஹோட்டல்கள்,டீ கடைகள் மற்றும் இறைச்சி கடைகளில் உள்ள கழிவுகள் ஆற்றில் கலப்பதால் தண்ணீர் மாசடைந்து வருகிறது.
எனவே ஆற்றில் கழிவு நீர் கலக்கச் செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும், ஆற்றை சுத்தம் செய்யவும் கிராம பஞ்சாயத்து உடனடி திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post மூணாறில் முதிரைப்புழை ஆற்றில் நிரம்பி வழியும் கழிவுகள் appeared first on Dinakaran.

Tags : Mudiraiphuja river ,Munnar ,Idukki district ,Kerala ,Mudiraippuhi river ,Dinakaran ,
× RELATED மூணாறு அருகே கள்ளச்சாராய ஊறல் அழிப்பு