×

தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் 1607 பேருக்கு கைக்கணினி வழங்கல் பிள்ளைகளை கவனித்துக் கொண்டே இருக்க வேண்டும்

*ஆசிரியர்களுக்கு முதல்வர் ரங்கசாமி அறிவுரை

புதுச்சேரி : பிள்ளைகள் நல்ல முறையில் வளர்வதற்கு அடித்தளமாக இருப்பது கல்வி. அதோடு நல்ல மனநிலையும் இருக்க வேண்டும். எனவே, பிள்ளைகளை ஆசிரியர்கள் கவனித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்று முதல்வர் ரங்கசாமி கூறினார். புதுச்சேரி பள்ளிக் கல்வி துறை மற்றும் சமக்ர சிக்‌ஷா திட்டம் தகவல் தொழில்நுட்ப வளத்தொகுப்பின் கீழ் அரசு தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கு இலவச கைக்கணினி வழங்கும் விழா நேற்று மாலை காராமணிக்குப்பத்தில் உள்ள ஜீவானந்தம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது.

கல்வி அமைச்சர் நமச்சிவாயம் தலைமை தாங்கினார். சபாநாயகர் செல்வம், துணை சபாநாயகர் ராஜவேலு ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினர்களாக கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், முதல்வர் ரங்கசாமி ஆகியோர் கலந்து கொண்டு 1,607 ஆசிரியர்களுக்கு கைக்கணினி வழங்கினர்.

இவ்விழாவில் முதல்வர் ரங்கசாமி பேசியதாவது:நம்முடைய நாடு எதிர்காலத்தில் வளர்ச்சிமிக்க நாடாக வர பல நல்ல திட்டங்களை பிரதமர் செயல்படுத்தி வருகிறார். நிறைய திட்டங்களின் பெயர் இந்தியில் வரும். அதை என்னால் சொல்ல முடியாது. ஆனால், அந்த திட்டங்களின் பெயர்களை கவர்னர் சொல்வார். அதனடிப்படையில் தற்போது தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு சமக்ர சிக்‌ஷா திட்டத்தின் தகவல் தொழில்நுட்ப வளத்தொகுப்பின் கீழ் கைக்கணினி வழங்கப்பட்டுள்ளது. தகவல் தொழில்நுட்பம் மூலம் தற்கால ஆசிரியர்களின் அறிவுத்திறனை மேம்படுத்தும் வகையில் கைக்கணினிகள் வழங்கப்படுகின்றன. அதன்மூலம் ஆசிரியர்கள் புதிய கற்றல் திட்டத்தை செயல்படுத்தலாம்.

ஆசிரியர்கள் அப்டேட்டாக இருக்க வேண்டும். பிள்ளைகள் கேட்கும் கேள்விக்கு பதில் சொல்ல வேண்டும். இல்லையென்றால் எனக்கு தெரிந்தது கூட ஆசிரியருக்கு தெரியவில்லை. மக்கு ஆசிரியர் என கூறிவிடுவார்கள். புதிய தொழில்நுட்பத்தின் வாயிலாக செய்திகளை விரைவாக தெரிந்து கொள்ளும் வாய்ப்புள்ளது. அதற்கேற்றவாறு நம்மை நாமே தயார்படுத்திக் கொள்ள வேண்டும்.

கற்பித்தல் மூலமாக மாணவர்கள் விரும்பி கற்கும் நிலை வர வேண்டும். இதற்காக நாம் சொல்லி தரும் முறை மாணவர்கள் விரும்பி படிக்கும் வகையில் இருக்க வேண்டும். ஆசிரியர் வந்தால் வகுப்பில் இருக்க வேண்டும் என்று பிள்ளைகள் நினைக்க வேண்டும். சில ஆசிரியர்கள் வந்தால் வகுப்பில் இருந்து ஓடி விட வேண்டும் என்று பிள்ளைகள் நினைக்காத வகையில் கற்பிக்க வேண்டும்.

மாலையில் அரசு பள்ளி குழந்தைகளுக்கு சிறுதானிய உணவு தருகிறோம். அதனுடன் மாலையில் சுண்டல் சாப்பிடுவது குழந்தைகளுக்கு நல்லது. முன்பு பள்ளிகளில் தந்தோம். சிறுதானிய உணவுடன் சுண்டல் மீண்டும் தரும் எண்ணம் உள்ளது. காலையில் பால் காய்ச்சும் பணியாளர்கள் மூலம் சுண்டல் தரலாம் என கூறியுள்ளேன்.புதுவை மாநில அரசு பள்ளி மாணவர்களுக்கு பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். ஆனால், தனியார் பள்ளியில் ஏழை குழந்தைகளைச் சேர்ப்பது மாயை போல உள்ளது.

அரசு பள்ளியில் என்ன குறை உள்ளது. அரசு பள்ளியில் திறமையான ஆசிரியர்கள் இருந்தும், உள்கட்டமைப்பு இருந்தும் தனியார் பள்ளியில் சேர்த்து ஏழைகள் சிரமப்படுவது தேவையற்றது. எங்கு படித்தாலும் வீட்டில் இருப்போர் கவனம் செலுத்தினால்தான் பிள்ளைகள் நன்றாக படிக்கும். பிள்ளைகள் நல்ல முறையில் வளர்வதற்கு அடித்தளமாக இருப்பது கல்வி. அதோடு நல்ல மனநிலையும் இருக்க வேண்டும்.

எனவே, பிள்ளைகளை ஆசிரியர்கள் கவனித்துக் கொண்டே இருக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.விழாவில் கல்வித்துறை செயலர் ஆஷிஷ் மாதவ்ராவ் மோரே, பள்ளிக்கல்வி இயக்குநர் பிரியதர்ஷனி, துறை அதிகாரிகள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

146 தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் விரைவில் தேர்வு

முதல்வர் பேசுகையில், தனியார் பள்ளி குழந்தைகள் மீது பெற்றோர் காட்டும் அக்கறையை அரசு பள்ளி குழந்தைகளுக்கு பெற்றோர் செலுத்துவதில்லை. அரசு பள்ளியை குறை சொல்லாமல் வீட்டில் இருப்போரும் தங்கள் குழந்தைகள் மீது கவனம் செலுத்துவது அவசியம்.தற்போது தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் கைக்கணினிகளை அனைத்து ஆசிரியர்களுக்கும் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இன்னும் 1,800 தேவைப்படும். அதற்கான நிதி ஒதுக்கப்படும். ஆசிரியர்கள் சிறப்பாக பணியாற்ற வேண்டும்.

146 தொடக்கப்பள்ளி ஆசிரியர் பணியிடத்துக்கு தகுதியானவர்கள் விரைவில் தேர்வு செய்யப்பட்டு பணி ஆணை கொடுக்கப்படும். புதிய ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டதும் காரைக்காலில் பணியாற்றும் ஆசிரியர்கள் புதுச்சேரிக்கு விரைவில் வந்துவிடுவார்கள் என்றார்.

The post தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் 1607 பேருக்கு கைக்கணினி வழங்கல் பிள்ளைகளை கவனித்துக் கொண்டே இருக்க வேண்டும் appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,Rangasamy ,Puducherry ,Principal ,Puducherry… ,Dinakaran ,
× RELATED ஹெல்மெட் போடாமல் பைக்கில் வந்து வாக்களித்த புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி