×

குடியுரிமை திருத்தச் சட்டத்தை ஒருபோதும் ஏற்க முடியாது: CAA அமல்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தேமுதிக கண்டனம்!

சென்னை: குடியுரிமை திருத்தச் சட்டத்தை ஒருபோதும் ஏற்க முடியாது, CAA அமல்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தேமுதிக கண்டன அறிக்கையை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்ததாவது; குடியுரிமை (திருத்தம்) சட்டம், 2019 தேமுதிக ஒரு போதும் ஏற்றுக்கொள்ளாது. மதத்தால், மொழியால் ஜாதியால், உணர்வால் நாம் அனைவரும் சகோதர சகோதரிகளாக, ஒற்றுமையாக இணைந்து, உலகிலயே கலாச்சாரம் நிறைந்த நாடாக மற்ற நாடுகளுக்கு எடுத்துக்காட்டாகத் திகழும், நமது இந்திய நாட்டின் குடியுரிமைச் சட்டம் என்கிற சட்டத்தின் மூலம் மக்களைப் பிளவுபடுத்துவதையோ, பிரிவினையை ஏற்படுத்துவதையோ, தேசிய முற்போக்கு திராவிட கழகம் என்றைக்கும் ஏற்காது.

இங்கு வாழும் அனைத்து மக்களுக்கும் சம உரிமையையும் பாதுகாப்பையும் ஏற்படுத்துவது மிக மிக முக்கியமான ஒன்று. எனவே இந்தச் சட்டத்தின் முழு விவரத்தையும், அனைத்து மக்களுக்கும் எளிதாகப் புரியும் வண்ணம், இந்தச் சட்டம் நிச்சயம் பாதுகாப்பாக இருக்கும் என்கின்ற உத்திரவாதத்தை மத்திய அரசு கொடுக்க வேண்டும். தேர்தல் நெருங்கும் இந்த நேரத்தில், அனைத்து மக்களிடையே இந்தக் குடியுரிமைச் திருத்தச் சட்டம் மிகப்பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

மேலும் இந்தக் குடியுரிமை திருத்தச் சட்டத்தில் உள்ள தன்மை மற்றும் வழிமுறைகளையும், எப்படிப்பட்ட சட்டங்களை அறிவிக்கப் போகிறார்கள் என்றும், அதை எப்போது அமல்படுத்தப் போகிறார்கள் என்றும், இந்தச் சட்டம் மக்களுக்குப் பாதுகாப்பாக இருக்குமா? என்றும் வெளிப்படையாக, வெள்ளை அறிக்கையாக மத்திய அரசு விளக்கம் தர வேண்டும். அப்போது தான் இந்தச் சட்டம் ஏற்புடையதா, இல்லையா என்று தெரிந்து கொள்ள முடியும். அதுவரை இந்தச் சட்டத்தைத் தேமுதிக ஒரு போதும் ஏற்றுக்கொள்ளாது. என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

 

The post குடியுரிமை திருத்தச் சட்டத்தை ஒருபோதும் ஏற்க முடியாது: CAA அமல்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தேமுதிக கண்டனம்! appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,DMK ,General Secretary of National Progressive Dravida Kazhagam ,Premalatha Vijayakanth ,Dinakaran ,
× RELATED சிறந்த மதசார்பற்ற பிரதமரை...