×

நாடு சுதந்திரம் பெற்று முதல் முறையாக இருளர், குறும்பர் பழங்குடியின மக்கள் வசிக்க ரூ.1.50 கோடியில் கான்கிரீட் வீடு அமைகிறது

*ஊராட்சி மன்ற தலைவர், அதிகாரிகளுக்கு பாரம்பரிய நடனத்துடன் உற்சாக வரவேற்பு

கோத்தகிரி : நாடு சுதந்திரம் பெற்று முதல் முறையாக நீலகிரி எம்பி ஆ.ராசா முயற்சியால் கோத்தகிரி அருகே கடைக்கோடி எல்லையில் இருளர், குறும்பர் பழங்குடியினருக்கு ரூ.1.50 கோடியில் இலவச கான்கிரீட் வீடுகள் கட்டும் பணி துவங்கியது. இதனை முன்னிட்டு ஊராட்சி மன்ற தலைவர் உள்ளிட்ட அரசு அதிகாரிகளை பழங்குடி மக்கள் பாரம்பரிய இசை, நடனத்துடன் உற்சாகமாக வரவேற்றனர்.

மலைகளின் அரசி என அழைக்கப்படும் மலை மாவட்டமான நீலகிரி மாவட்டத்தில் இருளர், குறும்பர், காட்டு நாயக்கர், பனியர், தோடர், கோத்தர் போன்ற பழங்குடியினர் அடர்ந்த வனப்பகுதிகளில் தனித்தனி குழுக்களாக வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் இருந்து சுமார் 30 கிலோ மீட்டர் தொலைவில் அடர்ந்த வனப்பகுதியில் கடைக்கோடி எல்லையில் அமைந்துள்ள தேனாடு ஊராட்சியில் செடிக்கல் பழங்குடியினர் கிராமத்தில் இருளர் மற்றும் குரும்பர் பழங்குடியினர் வாழ்ந்து வருகின்றனர்.

இவர்களுக்கு திமுக ஆட்சி அமைந்தவுடன், நீலகிரி எம்பி ஆ. ராசா முயற்சியால் ஊராட்சி தலைவர் ஆல்வின் ஊராட்சி மூலம் நிதி ஒதுக்கி கிராமத்திற்கு செல்லும் அடர்ந்த வனப்பகுதியில் கடசோலை முதல் செடிக்கல் பழங்குடியினர் கிராமம் வரை 1.5 கிலோ மீட்டர் தூரம் கான்கிரீட் சாலை அமைத்து, ரூ.1.50 கோடி மதிப்பீட்டில் புதிய கான்கிரீட் குடியிருப்புகள் கட்ட தேனாடு ஊராட்சி மூலம் நிதி ஒதுக்கப்பட்டு இதற்கான அடிக்கல் நாட்டு விழா பழங்குடியினர் கிராமத்தில் நடைபெற்றது. இதில் ஊராட்சி மன்ற தலைவர் ஆல்வின் உட்பட அரசு அதிகாரிகளை குறும்பர் மற்றும் இருளர் பழங்குடியினர் மக்கள் தங்களது பாரம்பரிய இசை மற்றும் நடனத்துடன் உற்சாகமாக கிராமத்திற்குள் அழைத்து சென்று தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

இதைத்தொடர்ந்து புதிய குடியிருப்புகள் கட்ட பணி ஆணையை ஊராட்சி மன்ற தலைவர் ஆல்வின் பழங்குடியின மக்களிடம் வழங்கினார். மேலும் அவர் கூறுகையில், எதிர்வரும் நாட்களில் பழங்குடியினர்களுக்கு புதிய வீடுகளை கட்டித்தர அனைத்து பணிகளும் தொடங்கியது. இந்த கிராமத்திற்கு 2006-ம் ஆண்டில் கலைஞர் ஆட்சிக்காலத்தில் மின்சாரம் வழங்கி வண்ண தொலைக்காட்சி பெட்டி வழங்கியது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து, 15 ஆண்டுக்கு பிறகு புதிய வீடு கட்டித்தர திமுக ஆட்சி நடவடிக்கை எடுத்துள்ளது என பெருமிதமாக குறிப்பிட்டார். இந்நிகழ்ச்சியில் பணி மேற்பார்வையாளர் சுரேஷ், கிராம நிர்வாக அலுவலர் ஹேமா, வார்டு உறுப்பினர் நாகராஜ், பொதுக்குழு உறுப்பினர் கருப்பையா, ஒன்றிய துணை செயலாளர் நாகராஜ், ரஞ்சித் சண்முகம் அந்தோணி கர்ணன், ஊர் தலைவர் வேலன் மற்றும் கிராம மக்கள் திரளாகவும், உற்சாகமாகவும் கலந்து கொண்டனர்.

இதையடுத்து பழங்குடியின மக்கள் வாழ்வுக்கு ஒளியூட்டும் வகையில் நடவடிக்கை மேற்கொண்ட தமிழ்நாடு அரசுக்கும், முதலைமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும், நீலகிரி எம்பி ஆ.ராசாவுக்கும், ஊராட்சி மன்றத்தலைவர் ஆல்வினுக்கும் பழங்குடியின மக்கள் நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்தனர்.

The post நாடு சுதந்திரம் பெற்று முதல் முறையாக இருளர், குறும்பர் பழங்குடியின மக்கள் வசிக்க ரூ.1.50 கோடியில் கான்கிரீட் வீடு அமைகிறது appeared first on Dinakaran.

Tags : Kotagiri ,Ilurar ,Kadakodi ,Dinakaran ,
× RELATED கோத்தகிரி நேரு பூங்காவில் குவிந்த சுற்றுலா பயணிகள்