×

கையெழுத்தை வைத்து ஒருவரின் ஜாதகத்தை கணிக்க முடியுமா?

?தென்மேற்குப் பகுதியினை கன்னி மூலை என்று சொல்கிறார்களே, அப்படி என்றால் என்ன?
– ஆர்.எஸ்.ஜெயசுதா,
கோபிசெட்டிபாளையம்.

ஜாதகக் கட்டத்தினை வரைந்து அதனை திசைகளின் மேல் பொருத்திப் பார்க்கும்போது, தென்மேற்கு மூலையின் மீது கன்னி ராசியின் கட்டம் என்பது சரியாகச் சென்று பொருந்தும். அதனால் அந்த மூலையினை கன்னி மூலை என்று அழைக்கும் பழக்கம் உண்டானது. கன்னிமூலை என்பதை நீங்கள் கீழ்க்கண்ட ஒரு வார்த்தையின் மூலம்கூட நினைவில் கொள்ளலாம். `கன்னிமூலை கணபதியே… சரணம் ஐயப்பா…’ என்ற ஐயப்ப பக்தர்களின் கோஷத்தினைக் கேட்டிருப்பீர்கள். கன்னிமூலை கணபதியின் சந்நதி என்பது சபரிமலையில் பம்பை நதிக்கரையில் இருந்து மேலே ஏறத்தொடங்கும் இடத்தில் அமைந்திருக்கும். கேரளா என்கிற மாநிலமே இந்தியாவின் தென்மேற்கு மூலையில்தானே அமைந்திருக்கிறது. இதனை நினைவில்கொண்டு கன்னி மூலை என்றால் தென்மேற்கு மூலைதான் என்பதைப் புரிந்துகொள்ள முடியும்.

?கையெழுத்தை வைத்து ஒருவரின் ஜாதகத்தை கணிக்க முடியுமா?
– ராஜாராமன், திருச்சி.

முடியாது. கையெழுத்தினைக் கொண்டு ஒருவரின் ஜாதகத்தை நிச்சயமாக கணிக்க முடியாது. ஆனால், ஒருவரது கையெழுத்தினைக் கொண்டு அந்த மனிதரின் குணாதிசயத்தை கணிக்க முடியும். வார்த்தைகளுக்கு இடையில் குறைந்த இடைவெளி விட்டு எழுதுவது, அதிக இடைவெளி விடுவது, சீரான இடைவெளியில் எழுதுவது, அழுத்தமாக எழுதுவது, இயல்பைவிட பெரியதாக எழுதுவது, சாய்வாக எழுதுவது, அச்சில் வார்த்தால் போல் ஒரே சீராக எழுதுவது, நேராக எழுதுவது என்று பல வகைகளிலும் ஆய்வு செய்து கையெழுத்தினைக் கொண்டு ஒரு மனிதரின் குணாதிசயத்தை கணிப்பதற்கான வழிமுறைகள் உள்ளன. ஆனால், இதனை மட்டும் வைத்துக் கொண்டு நிச்சயமாக ஜாதகத்தை கணிக்க இயலாது.

?திருவிழாவிற்கு முன்பு கோயிலில் காப்பு கட்டுவதன் தாத்பரியம் என்ன?
– டி.பானுமதி, சேலம்.

இந்த காப்பு கட்டுதலை `கங்கணம் கட்டுதல்’ என்றும் சொல்வார்கள். அதே போல, இதற்கு `ரக்ஷாபந்தனம்’ என்ற பெயரும் உண்டு. இந்த காப்பு, கங்கணம், ரக்ஷாபந்தனம் ஆகிய பெயர்களில் இருந்தே இதற்கான தாத்பரியத்தை புரிந்துகொள்ள முடியும். திருவிழா நல்லபடியாக நடந்தேற வேண்டும், இடையில் எந்தவிதமான தடையும் உண்டாகக் கூடாது, இந்த விழாவினை முன்னின்று நடத்துபவர்களுக்கும் இதில் பங்கேற்பவர்களுக்கும் எந்தவிதமான சிரமமும் உண்டாகாமல் அவர்கள் காக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தில் கட்டப்படுவதே இந்த காப்பு. இந்த காப்பு கட்டியவுடன் ஊர் மக்கள் யாவரும் கட்டுக் கோப்புடன் அதாவது கட்டுப் பாட்டுடன் இருக்க வேண்டும் என்பதையும் இந்த நிகழ்வு வலியுறுத்தும். இதன் மூலம் கங்கணம் கட்டிக் கொண்டு செயல்படுவது அதாவது திருவிழா வெகுசிறப்பான முறையில் நடந்தேற வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் எல்லோரும் ஒன்றிணைந்து செயல்படுவது என்ற உறுதிமொழி எடுக்கப்படுகிறது. அதேபோல, `பந்தனம்’ என்றால் கட்டுதல், `ரக்ஷா’ என்றால் பாதுகாத்தல் என்று பொருள் காண வேண்டும். திருவிழா முடியும் வரை இந்த ஊர்ப்பொதுமக்கள் எல்லோரும் பாதுகாப்பாக ஒரு கட்டுப்பாட்டிற்குள் இருக்கிறார்கள் என்பதை உறுதிசெய்யும் விதமாக இந்த நிகழ்வு நடைபெறுகிறது. இந்த காப்பு கட்டுதல் என்கிற நிகழ்வு கோயில் திருவிழாக்கள் மட்டுமல்லாது, திருமணம் முதலான சடங்குகளில் நடத்தப்படுவதற்கான காரணமும் இதுவே ஆகும்.

?வாஸ்து சில்ப சாஸ்திரம் என்றால் என்ன?
– தேவராஜ், ராமநாதபுரம்.

வாஸ்து சாஸ்திரம் என்பதே சில்பசாஸ்திரத்தின் ஒரு அங்கம்தான். வாஸ்து சாஸ்திரம் பற்றிய அடிப்படை உண்மைகளை சில்ப சாஸ்திரம் எனப்படும் சிற்ப சாஸ்திரம் தெளிவாகச் சொல்கிறது. வாஸ்து பற்றிய அறிவானது ஆலயங்கள் அமைக்கத் துவங்கும்போதுதான் நமக்கு கிடைத்தது. அறிவியல் என்ற பொதுவான பாடத்திற்குள், இயற்பியல் என்ற பிரிவும் அடங்குவது போல, சிற்பக்கலைக்குள்தான் வாஸ்து சாஸ்திரமும் இடம் பிடிக்கிறது. ஆலயங்கள் அமைக்கும்போது முக்கியத்துவம் பெற்ற வாஸ்து சம்பந்தப்பட்ட அறிவானது மெதுவாக நாம் குடியிருக்க அமைக்கும் வீடு கட்டுவதிலும் பரவத் தொடங்கியது. வாஸ்து சாஸ்திரம் என்பது புவியியல் சார்ந்த அறிவியல் என்பதை நாம் புரிந்துகொண்டால், மூடநம்பிக்கைகளுக்கு அங்கே இடமிருக்காது.

?தங்கையான என்னிடம் அண்ணன்மார்கள் பாசத்துடன் இருக்க யாரை வழிபட வேண்டும்?
– வசுந்தரா, மதுரை.

கள்ளழகர் என்றழைக்கப்படும் சுந்தரராஜப் பெருமாளை வழிபட வேண்டும். வீட்டிலேயே தினமும் கிருஷ்ண பரமாத்மாவை வழிபட்டு வர, சகோதர சகோதரிக்குள் பாசம் என்பது கூடும்.

?பரிகாரம் செய்ய முடியாத தோஷம்
உண்டா?
– சங்கர்தாஸ், சென்னை.

`பஞ்சமஹா பாதகங்கள்’ என்று சொல்வார்கள். `பிரஹ்ம ஹத்யா’, `சிசு ஹத்யா’, `சுரா பானா’, `ஸ்வர்ண ஸ்தேயா’, `குருதல்ப கமனா’ என்ற இந்த ஐந்து பாவச் செயல்களும் கடுமையான தோஷத்தினைத் தருகின்றன. கற்றறிந்த ஒழுக்க சீலர்களை வதைத்தல், கருக்கலைப்பு உட்பட குழந்தைகளைக் கொல்லுதல், மது அருந்துதல், தங்கத்தைத் திருடுதல், குருவின் மனைவியை தவறான கண்ணோட்டத்தில் பார்த்தல் ஆகிய ஐந்தும் பஞ்சமஹா பாதகங்கள் ஆகும். இந்த ஐந்து குற்றங்களைச் செய்வதால் உண்டாகும் தோஷத்திற்கு அத்தனை எளிதாக பரிகாரம் செய்துவிட முடியாது.

?வெள்ளிக் கிழமைகளில் வீட்டைக் கழுவி சுத்தம் செய்தால் லட்சுமி கடாட்சம் போய்விடும் என்கிறார்களே, உண்மையா?
– ஜெ.மணிகண்டன், வேலூர்.

உண்மையில்லை. வெள்ளிக் கிழமைகளில் காலைப் பொழுதில் கண்டிப்பாக வீட்டைக் கழுவி சுத்தம் செய்து கோலமிட வேண்டும். இதனால் நிச்சயமாக லட்சுமி கடாட்சம் பெருகும். அதே நேரத்தில், வெள்ளிக்கிழமை நாளில் ஒட்டடை அடித்து சுத்தம் செய்வதும், பூச்சிக் கொல்லி மருந்துகளை பயன்படுத்துவதும் கூடாது.

?இறந்து போனவர்கள் மீண்டும் பிறப்பது எவ்விதம் சாத்தியம்?
– யோகபிரியா, சென்னை.

`புனரபி ஜனனம் புனரபி மரணம்’ என்பதுதானே அடிப்படை விதி. இந்த உடல்தான் அழிகிறதே தவிர ஆத்மாவிற்கு அழிவில்லை என்று நம்முடைய இந்து மதம் அடித்துச் சொல்கிறது. ஓரிடத்தில் பிரிகின்ற ஜீவாத்மா, மற்றொரு இடத்தில் சென்று பிறந்துவிடுகிறது. இந்த நவீன உலகிலும், முன்ஜென்ம நினைவுடன் பிறந்த மனிதர்களைப் பற்றி பத்திரிகைகளில் நிறைய படிக்கிறோமே! இதுவே மறுபிறவி பற்றிய கருத்துக்களுக்கு ஆதாரமாக உள்ளதே! இறந்து போனவர்கள் மீண்டும் பிறப்பது சாத்தியம் என்று சொல்வதைவிட அதுதான் உண்மை என்று உறுதியாகச் சொல்லமுடியும்.

The post கையெழுத்தை வைத்து ஒருவரின் ஜாதகத்தை கணிக்க முடியுமா? appeared first on Dinakaran.

Tags : RS Jayasudha ,Gopichettipalayam ,
× RELATED அதிகார போதையில் பாஜக.. மக்களையே...