×

திருவண்ணாமலை கலெக்டர் அலுவலக குறைதீர்வு கூட்டத்தில் மனுக்களுக்கு உடனடி தீர்வு

*ஒவ்வொரு வாரமும் குவியும் பொதுமக்கள்

திருவண்ணாமலை : திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் நடக்கும் குறைதீர்வு கூட்டத்தில் அளிக்கப்படும் மனுக்களுக்கு உடனடி தீர்வு கிடைப்பதால் ஒவ்வொரு வாரமும் மக்கள் வருகை அதிகரித்து வருகிறது.திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில், வாராந்திர மக்கள் குறைதீர்வு கூட்டம் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமையில் நேற்று நடந்தது. அதில், டிஆர்ஓ பிரியதர்ஷினி, ஆர்டிஓ மந்தாகினி உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள், பட்டா மாற்றம், சுயதொழில் கடனுதவி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 974 பேர் மனு அளித்தனர். அதன் மீது, நேரடி விசாரணை நடத்திய கலெக்டர், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.இந்நிலையில், கட்டணமின்றி மனுக்கள் எழுதி தர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் நேரடியாக ஆய்வு செய்தார். அப்போது, மனுக்கள் எழுதும்போது, கோரிக்கையையும், எந்த துறையின் மூலம் தீர்வு காண வேண்டும் என்பதையும் தெளிவாக குறிப்பிட வேண்டும் என அலுவலர்ளுக்கு தெரிவித்தார்.

அதைத்தொடர்ந்து, குழந்தைகளுடன் வரும் தாய்மார்களுக்கு பால் வழங்கும் திட்டத்தை பார்வையிட்டார். பின்னர், மனு அளிக்க வந்திருந்த பொதுமக்கள், வரிசையில் நீண்ட நேரம் நிற்பதை தவிர்க்க இருக்கை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதா என நேரில் பார்வையிட்டார்.பின்னர், கலெக்டர் அலுவலக தரைதளத்தில் செயல்படும் இ- சேவை மையத்தில் கூட்டம் அலைமோதியதை கண்ட கலெக்டர், அங்கு நேரில் சென்று விசாரித்தார். ஆதார் விபரங்களில் உள்ள பிழை திருத்தம், விரல் ரேகை பதிவு உள்ளிட்டவைகளுக்காக பொதுமக்கள் அதிக அளவில் வந்திருந்தது தெரியவந்தது.

எனவே, அங்கும் பொதுமக்கள் அமருவதற்கான இருக்கை வசதிகளை கலெக்டர் ஏற்பாடு செய்தார். மேலும், அனைவருக்கும் டோக்கன் வழங்கும் முறையை நடைமுறைப்படுத்தி, விரைந்து பணிகளை முடிக்க நடவடிக்கை எடுத்தார். அதனால், அங்கு நீண்ட நேரம் காத்திருந்தவர்கள் நன்றி தெரிவித்தனர்.

இந்நிலையில், பாலானந்தல் ஊராட்சிக்கு சாலை வசதி செய்து தரக்கோரி, கவனத்தை ஈர்க்கும் வகையில் நெற்றியில் நாமம் போட்டபடி ஊராட்சி மன்றத் தலைவர் மனு அளித்தார். அதேபோல், நூறு நாள் வேலையை முறையாக வழங்கக்கோரி விவசாயி ஒருவர் மனு மண்வெட்டியுடன் வந்து மனு அளித்தார்.

நாடகம், நாட்டுப்புற கலைஞர்கள் மனு

குறைதீர்வு கூட்டத்தில் தமிழ்நாடு நாடகம் மற்றும் நாட்டுப்புற கலைஞர்கள் சங்கம் சார்பில் அளித்த கோரிக்கை மனுவில் தெரிவித்திருப்பதாவது: திருவண்ணாமலை மாவட்டத்தில் நாடக மற்றும் நாட்டுப்புற கலைகளை சார்ந்த 500க்கும் மேற்பட்ட கலைஞர்கள் உள்ளனர். இந்த கலைகள் சமீபகாலமாக நலிவடைந்து வரும் நிலையில் அதை நம்பியுள்ள நாடகம் மற்றும் நாட்டுப்புற கலைஞர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

ஆனாலும், இந்த பாரம்பரிய கலைகள் அழிந்து விடக்கூடாது என்ற நோக்கத்துடன் நாட்டுப்புற மற்றும் நாடக கலைஞர்கள் அதில் ஈடுபட்டு வருகின்றனர். எனவே, நலிந்த நிலையில் உள்ள நாடகம் மற்றும் நாட்டுப்புற கலைஞர்களுக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் வழங்கப்படும் இலவச வீட்டுமனை பட்டாவை திருவண்ணாமலை மாவட்டத்தில் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

குறைதீர்வு கூட்டத்தில் அதிரடி மாற்றங்கள்

கலெக்டர் அலுவலகத்தில் திங்கள்கிழமையன்று நடைபெறும் மக்கள் குறைதீர்வு கூட்டத்தில், பொதுமக்கள் அளிக்கும் மனுக்களை கூட்ட அரங்கத்தில் அமர்ந்தபடி கலெக்டர் பெறுவதும், துறை அதிகாரிகளிடம் அளித்து தீர்வு காண உத்தரவிடுவதும் வழக்கமான நடைமுறையாக இருந்தது.ஆனால், கலெக்டர் பாஸ்கர பாண்டியன் பொறுப்பேற்ற பிறகு, மனுக்களை பெறுவதில் அதிரடி மாற்றங்களை கொண்டு வந்திருக்கிறார். மனுக்களை அளிக்க வரிசையில் காத்திருக்கும் மக்களை, நேரடியாக சென்று கலெக்டர் குறைகளை கேட்பதும், முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள், நலிவுற்றோரின் மனுக்களை பெற்று அதே இடத்தில் முடிந்தவரை தீர்வு காண்பதை புதிய நடைமுறையாக மாற்றியிருக்கிறார்.

அதோடு, மனு அளிக்க காத்திருக்கும் பொதுமக்களை தேடிச் சென்று கலெக்டர் கோரிக்கைகளை கேட்பது, மக்களிடம் நம்பிக்கையை அதிகரித்திருக்கிறது. அதனால், செய்யாறு, ஆரணி ஆகிய இடங்களில் கோட்ட அளவில் நடைெபறும் குறைதீர்வு கூட்டங்களை தவிர்த்துவிட்டு, அந்த பகுதி பொதுமக்களும் தற்போது கலெக்டர் அலுவலகம் நோக்கி வர தொடங்கியுள்ளனர். எனவே, ஒவ்வொரு வாரமும் மனுக்களின் எண்ணிக்கை உயர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

The post திருவண்ணாமலை கலெக்டர் அலுவலக குறைதீர்வு கூட்டத்தில் மனுக்களுக்கு உடனடி தீர்வு appeared first on Dinakaran.

Tags : Tiruvannamalai Collector ,Thiruvannamalai ,Thiruvannamalai Collector ,Dinakaran ,
× RELATED ‘என் கல்லூரி கனவு’ உயர்கல்விக்கான...