×

இறைவன் பதிவேட்டில் மறுமை

அந்தத் தெருவில் ஒரே பரபரப்பு… போலீஸ் குவிப்பு…ஒரு வீட்டில் திருடு போய்விட்டது. யார் திருடியது என்று தெரியவில்லை. காவல்துறை அதிகாரி வருகிறார். வீட்டை நோட்டமிடுகிறார். நல்லவேளையாக அந்த வீட்டில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டிருந்தது. அதிகாரியின் முகத்தில் சிறு புன்னகை. கேமரா பதிவுகளைத் திரையில் ஓடவிடுகிறார். யார் யார் வருகிறார்கள்… என்னென்ன செய்கிறார்கள்… என்பது அனைத்தும் திரையில் தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது…ஒருவர் பீரோவிலிருந்து பணத்தை அவசர அவசரமாக எடுத்து பைக்குள் திணிக்கிறார்… நைசாக நழுவுகிறார்…

அடுத்த இரண்டு நாளில் அந்தத் திருடன் பிடிபடுகிறான். தான் திருடவே இல்லை என்று சாதிக்கிறான். காவல்துறை அதிகாரி எதுவும் பேசவில்லை. ஒரு பட்டனைத் தட்டுகிறார். தொடர்புடைய காட்சிகள் திரையில் ஓடுகின்றன. உண்மையை ஏற்றுக்கொள்வதைத் தவிர திருடனுக்கு வேறு எந்த வழியும் இருக்கவில்லை. அதிர்ச்சியில் உறைந்து போய்விடுகிறான்.“காவல்துறை அதிகாரி…கேமரா…பதிவேடு” இவையெல்லாம் உண்மைதான் என்று ஒப்புக்கொள்வார்கள். ஆனால் “மறுமை, இறைவன், பதிவேடு” என்றால் மட்டும் மூடநம்பிக்கை என்று ஒதுக்குவார்கள்.

மறுமை மூட நம்பிக்கை அல்ல. உலகில் நாம் செய்யும் செயல்கள் அனைத்தையும் இறைவன் துல்லியமாய்ப் பதிவு செய்துவருகிறான். மறுமையில் நம் செயல்கள் நமக்கே போட்டுக் காட்டப்படும். யாரும் தப்ப முடியாது. எங்கேயும் ஓட முடியாது. இறைவன் கூறுகிறான்:“உங்களுக்காக வாக்களிக்கப்பட்ட எந்த ஒரு நேரத்தையும் நாம் நிர்ணயிக்கவில்லை என்றுதானே நீங்கள் கருதியிருந்தீர்கள். மேலும் பதிவேடுகள் முன்னால் வைக்கப்பட்டுவிடும். நீங்கள் பார்ப்பீர்கள். அவ்வேளை குற்றம் புரிந்தோர் தம் வாழ்க்கைப் புத்தகத்தில் உள்ளவற்றைக் கண்டு அஞ்சிக்கொண்டிருப்பார்கள். மேலும் அவர்கள் புலம்பிக்கொண்டிருப்பார்கள். ஐயகோ…எங்கள் துர்பாக்கியமே…இது என்ன பதிவேடு. எங்கள் செயல்களில் சிறிதோ பெரிதோ எதையும் பதிக்காமல் இது விட்டுவைக்கவில்லையே. தாங்கள் செய்தவை அனைத்தும் தம் முன்னால் இருப்பதை அவர்கள் காண்பார்கள். மேலும் உம் இறைவன் யாருக்கும் சிறிதும் அநீதி இழைப்பவன் அல்லன்.” (குர்ஆன் 18: 49)

அந்தப் பதிவேடுகளைப் பார்த்துச் சிலருடைய முகங்கள் ஒளிரும். சிலருடைய முகங்கள் கருகும்.“சில முகங்கள் அந்நாளில் பளிச்சிட்டுக் கொண்டிருக்கும். சிரித்துக்கொண்டும் மலர்ச்சியுடனும் இருக்கும். மேலும் அந்நாளில் வேறு சில முகங்களில் புழுதி படிந்திருக்கும். அவற்றில் இருளும் கருமையும் கப்பியிருக்கும்.” (குர்ஆன் 80: 3841)‘‘காவல்துறை அதிகாரி, கேமரா, பதிவேடு எப்படி உண்மையோ அப்படியே மறுமை, இறைவன், பதிவேடு” என்பதும் உண்மை.இறைவனுடைய அழகிய திருப்பெயர்களில் “ரகீப்” என்பதும் ஒன்று. அதன் பொருள், அனைத்தையும் துல்லியமாகக் கண்காணிப்பவன் என்பதாகும். இறைவன் நம்மை எப்போதும் கண்காணித்துக் கொண்டிருக்கிறான், நம் செயல்கள் அனைத்தும் பதிவாகின்றன எனும் உணர்வோடு வாழ்வோமாக.
– சிராஜுல்ஹஸன்

The post இறைவன் பதிவேட்டில் மறுமை appeared first on Dinakaran.

Tags : Lord ,
× RELATED வளமான வாழ்வருளும் வராஹர்