*நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
சேத்தியாத்தோப்பு : சேத்தியாத்தோப்பு குறுக்குரோடு பகுதியில் சென்னை – கும்பகோணம் சாலையை இணைக்கும் விதமாக உள்ள 25 கண்மாய் பாலம் வலுவிழந்து வருவதால் விரைந்து சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு குறுக்குரோடு பகுதியில் அமைந்துள்ளது 25 கண்மாய் பாலம்.
நூற்றாண்டை கடந்த இந்த பாலம் கன மழை, வெள்ள காலங்களில் வெள்ளாற்றின் உபரி நீரையும், மேற்கு பகுதி கிராமங்களான பு.ஆதனூர், தட்டானோடை, ஆனைவாரி, எறும்பூர் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து வெளியேறும் மழை வெள்ள நீரும் பெருக்கெடுத்து வந்து வடக்கு ராஜன் வாய்க்காலில் கலந்து பின்னர் 25கண்மாய் பாலத்தில் அமைக்கப்பட்டுள்ள வடிகால் ஷட்டர்கள் மூலம் திறந்து விடப்பட்டு வெள்ளாற்றுக்கு சென்றடையும் விதமாக உள்ளது. மேலும் சென்னை – கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையை இணைக்கும் விதமாக உள்ளது.
பல மாவட்டங்களை இணைக்கும் விதமாகவும் அமைந்துள்ளதால் தினந்தோறும் காலை, மாலை, இரவு நேரங்களில் தொடர்ச்சியாக ஆயிரக்கணக்கான பேருந்துகள், கார்கள், கனரக வாகனங்கள், பள்ளி, கல்லூரி வாகனங்கள் உள்ளிட்ட வாகனங்கள் சென்று வருகின்றன. இதனை தவிர இப்பகுதியின் அருகே அமைந்துள்ள எம்.ஆர்.கே. கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு கரும்பு அரவை காலங்களில் தினந்தோறும் நூற்றுக்கு மேற்பட்ட டிராக்டர்களில் கரும்பு ஏற்றி கொண்டு இந்த பாலத்தை கடந்து தான் செல்ல வேண்டும்.
இந்நிலையில் 25 கண்மாய் பாலத்தின் இரு புறங்களிலும், அடையாளம் தெரியாத கனரக வாகனங்கள் மோதியதில் பலத்த சேதமடைந்துள்ளது. பாலத்தின் கிழக்கு பகுதியில் உள்ள பக்கவாட்டு தடுப்பு சுவர் நெடுகிலும் விரிசல் விட்டு இடிந்து விழும் நிலையில் உள்ளது.
எனவே மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழக அரசு ஏதேனும் அசம்பாவிதம் ஏற்படும் முன்பு பாலத்தின் தடுப்பு சுவரை விரைந்து சீரமைக்க வேண்டும் என்றும், விரைந்து போர்க்கால அடிப்படையில் புதிய பாலம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.
The post அச்சத்துடன் பயணிக்கும் வாகன ஓட்டிகள் சேத்தியாத்தோப்பில் வலுவிழந்து வரும் 25 கண்மாய் பாலம் appeared first on Dinakaran.