×

திருவட்டார் காவல் நிலையத்தில் வக்கீல்கள் போராட்டம்

குலசேகரம் : திருவட்டார் அருகே சிராயன்குழி பகுதியை சேர்ந்தவர் சீனு செல்லதுரை (30). ராமநாதபுரம் மாவட்டம் கமுதி பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் டாக்டராக பணி புரிந்து வருகிறார். திருவட்டார் அருகே இரவிபுதூர் கடை ஈச்சன்விளை பகுதியில் இவருக்கு சொந்தமாக 11.5 ஏக்கர் இடம் உள்ளது. இதில் அவரது தந்தை கிரஷர் நடத்தி வந்தார். தற்போது மூடப்பட்டு அந்த இடம் காலியாக மைதானம் போன்று உள்ளது.

இந்த இடத்தை சுற்றிலும் காம்பவுண்டு சுவர் கட்டப்பட்டுள்ளது. இந்த இடத்தில் சிலர் காம்பவுண்டு சுவர் ஏறி குதித்து மது அருந்துவதும், கிரிக்கெட் விளையாடுவதும் வாடிக்கையாக நடந்து வந்தது. மணலிக்கரை பகுதியை சேர்ந்தவர் ஜெபினோ (31). வக்கீல். இவரும், சீனு செல்லதுரையும் உறவினர்கள். இந்த நிலையில் விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்திருந்த சீனு செல்லதுரை, ஜெபினோவுடன் சேர்ந்து தனது இடத்தை பார்க்க சென்றார்.

அப்போது அங்கு இளைஞர்கள் சிலர் அத்துமீறி உள்ளே நுழைந்து கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனே அங்கு சென்ற இருவரும், இளைஞர்களை அங்கிருந்து வெளியேறக்கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டார்கள்.இதில் இருதரப்புக்கும் இடையே கைகலப்பானது. இளைஞர்கள் சேர்ந்து ஜெபினோவை சரமாரி தாக்கியதாக கூறப்படுகிறது. காயமடைந்த ஜெபினொ குழித்துறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இது குறித்து ஜெபினோ உடனடியாக திருவட்டார் காவல் நிலையத்துக்கு சென்று புகார் அளித்தார்.

ஆனால் விசாரணை நடத்திய பிறகே வழக்குப்பதிவு செய்யப்படும் என போலீசார் கூறினர். இதனால் ஜெபினோ அங்கேயே காத்திருந்தார். இரவு 9.30 மணிக்கு பிறகும் வழக்குப்பதிவு செய்யவில்லை. இதையடுத்து ஜெபினோ மற்றும் அவர் அளித்த தகவலின்பேரில் 15க்கும் மேற்பட்ட வக்கீல்கள் திடீரென திருவட்டார் காவல் நிலையத்துக்கு வந்தனர். அவர்கள் காவல் நிலையம் முன் அமர்ந்து போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. விரைவாக விசாரணை நடத்தப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்படும் என இன்ஸ்பெக்டர் சீதாலெட்சுமி உறுதியளித்தார். இதையடுத்து இரவு 10.30 மணியளவில் வக்கீல்கள் கலைந்து சென்றனர்.

வக்கீல் ஜெபினோவை தாக்கியது தொடர்பாக காட்டாத்துறையை சேர்ந்த மோகன் சி (30), அஜித், ஜெபின், ஷிஜூ வின்ஸ் மற்றும் கண்டால் தெரியும் 11 பேர் மீது திருவட்டார் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அதேபோல் விளையாடிக்கொண்டிருந்தபோது தங்களை தடுத்து நிறுத்தி தாக்கியதாக காஞ்சிரக்கோடு சிராயன்குழி பகுதியை சேர்ந்த மோன்சி ஜோசப் (29) கொடுத்த புகாரின்பேரில் சீனு செல்லதுரை, ஜெபினோ ஆகியோர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதேபோல் திருவட்டார் காவல் நிலையத்தில் அலுவல் பணிகளுக்கு இடையூறாக போராட்டம் நடத்தியதாக ஜெபினோ உள்பட 17 வக்கீல்கள் மீது திருவட்டார் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

The post திருவட்டார் காவல் நிலையத்தில் வக்கீல்கள் போராட்டம் appeared first on Dinakaran.

Tags : Tiruvattar police station ,Kulasekaram ,Seenu Chelaturai ,Sirayankuzhi ,Thiruvatar ,Kamudi ,Ramanathapuram district ,Ichanvilai ,Raviphudur ,Tiruvattar ,
× RELATED குமரியில் வாட்டி வதைக்கும்...