×

திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு வருகைதரும் பக்தர்களின் வாகனங்கள் வீடுகளின் முன்பு நிறுத்தப்படுவதால் போக்குவரத்து நெருக்கடி

*குடியிருப்புவாசிகள் கடும் அவதி

திருச்செந்தூர் : திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு வருகைதரும் பக்தர்களின் வாகனங்கள் தெருக்களில் வீடுகளின் முன்பாக வரிசையாக நிறுத்தப்படுவதால் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. இதனால் குடியிருப்புவாசிகள் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2ம் படைவீடாகத் திகழும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. திருவிழாக்காலங்கள் போல் தற்போது வார விடுமுறை நாட்களிலும் பக்தர்கள் அதிகளவில் வருகை தருகின்றனர். இதனால் சனி, ஞாயிற்றுக்கிழமை வந்துவிட்டாலே திருச்செந்தூரில் பக்தர்கள் கூட்டமும், வாகன அணிவகுப்பும் தொடர்கதையாகி விட்டது.

திருச்செந்தூர் கோயிலில் தற்போது பெருந்திட்ட வளாகப்பணிகள் நடைபெற்று வருவதால் கோயில் வளாகத்தில் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான வாகனங்கள் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்படுகிறது. இதனால் நகர்ப்பகுதியில் ரத வீதிகளிலும், கோயில் செல்லும் வழியில் உள்ள புளியடித்தெரு, வீரராகவபுரம் தெருக்களிலும் பக்தர்கள் வாகனங்களை நிறுத்திவிட்டு கோயிலுக்கு செல்வதால் பெரும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது.

போலீசார் கூட்ட நேரங்களில் அதிகாலை முதல் நள்ளிரவு வரை பணியில் இருந்தாலும், போலீசார் பணி முடிந்து சென்ற பிறகு வரும் வாகனங்கள் அனைத்தும் கோயில் செல்லும் தெருக்களில் கிடைக்கும் இடத்தில் எல்லாம் பக்தர்கள் நிறுத்திவிட்டு கோயிலுக்கு செல்வதால் காலையில் பணிக்கு வந்த பிறகு காவல் துறையினரால் அந்த வாகனங்களை வெளியேற்ற முடியாமலும், கட்டுப்படுத்த முடியாமலும் திணறி வருகின்றனர். இதனால் அவசரத்திற்கு நகரை விட்டு வெளியே வர முடியாமல் மருத்துவ அவசர ஊர்தி கூட அவ்வப்போது திணறுகிறது.

குறிப்பாக திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு இரவில் வரும் பக்தர்கள் தங்கள் வாகனங்களை வீடுகளின் முன்பாக நிறுத்தி செல்கின்றனர். இதனால் மறுநாள் காலை எழுந்து பார்க்கும் போது வீட்டில் உள்ளவர்கள் தங்கள் இருசக்கர வாகனத்தை கூட வெளியே எடுக்க முடியாமல், மருத்துவமனைக்கு செல்வதற்கு கூட அவசரத்திற்கு வெளியே வர முடியாமல் கடும் அவதிக்கு உள்ளாகின்றனர். மேலும் காலை எழுந்தவுடன் தங்கள் வீடு வாசல்களை சுத்தம் செய்து, தண்ணீர் தெளித்து, கோலமிட முடியாமல் பெண்கள் சிரமப்படுகின்றனர்.

திருச்செந்தூர் புளியடித்தெருவில் சுமார் 200 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இத்தெருவில் பக்தர்களின் வாகனங்கள் வீடுகளின் முன்பு வரிசையாக நிறுத்தப்படுவதால் அவ்வப்போது குடியிருப்புவாசிகளுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் தகராறு ஏற்படுவது தொடர் கதையாகி வருகிறது. எனவே உரிய நடவடிக்கை எடுக்குமாறு துறை அதிகாரிகளுக்கு மனுவும் அனுப்பியுள்ளனர்.
இதுகுறித்து ஆட்டோ டிரைவர் கல்யாணி கூறுகையில் ‘‘வாரந்தோறும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வீட்டு வாசலை அடைத்து வாகனங்கள் தான் நிற்கிறது. இதனால் ஒரு அவசரத்துக்கு கூட வெளியே வர முடியவில்லை. இரவு நிறுத்தப்படும் வாகனங்கள் மறுநாள் மதியம் வரை அங்கேயே நிற்பதால் கடைக்கு செல்ல முடியாமல் அவதியடைகிறோம்’’ என்றார்.

‘‘எல்லையிலேயே நிறுத்த வேண்டும்”

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் பகுதியில் பெரும்பாலான வீடுகள் விடுதிகளாக மாறி வருகின்றன. இதனால் விடுதிக்கு வரும் பக்தர்களின் வாகனங்கள் ஒரு சில விடுதிகளின் பார்க்கிங்களில் நிறுத்தப்படுகிறது. ஆனால் பார்க்கிங் இல்லாத விடுதிகளுக்கு வரும் வாகனங்கள் வீதியிலேயே நிறுத்தப்படுகின்றன. எனவே திருவிழா காலங்களைப் போல வார விடுமுறை நாட்களிலும் கூடுதலான போலீசாரை பணியில் ஈடுபடுத்தி நகரின் எல்லையிலே வாகனங்களை நிறுத்தி அங்கிருந்து பக்தர்கள் வசதிக்காக மினி பஸ்களை இயக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு வருகைதரும் பக்தர்களின் வாகனங்கள் வீடுகளின் முன்பு நிறுத்தப்படுவதால் போக்குவரத்து நெருக்கடி appeared first on Dinakaran.

Tags : Thiruchendur ,Murugan ,Temple ,Tiruchendur ,Subramania Swamy ,Lord ,Muruga ,
× RELATED திருச்செந்தூர் முருகனுக்கு மாலை அணிந்து விரதம் துவங்கிய மக்கள்