×

புதுகையில் பைக் மீது ஆம்னி பஸ் மோதல் தந்தை, 4வயது மகள் தலை நசுங்கி பலி

*கோயிலுக்கு சென்று திரும்பிய போது சோகம்

புதுக்கோட்டை : கோயிலுக்கு சென்று திரும்பிய போது பைக் மீது ஆம்னி பஸ் மோதியதில் தந்தை, 4 வயது மகள் தலைநசுங்கி பரிதாபமாக இறந்தனர்.புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை தேரடி கிழக்கு வீதியை சேர்ந்த கண்ணையா மகன் சுப்பிரமணி (35). புதுக்கோட்டை பெரியார் நகரில் தங்கி அங்குள்ள தனியார் நிதிநிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.

இவரது மனைவி சுஸ்மித்ரா (27). இவர்களது மகள் ஹரிணி(4). இந்நிலையில் நேற்றுமுன்தினம் இரவு சுப்பிரமணி, பைக்கில் தனது மனைவி மற்றும் மகளுடன் புதுகை அருகே திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயில் மாசித்திருவிழாவிற்கு சென்று சாமிதரிசனம் செய்து விட்டு மீண்டும் வீடு திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது இரவு 11 மணியளவில் புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகம் அருகே வந்தபோது எதிரே ‌புதுக்கோட்டையிலிருந்து சென்னை நோக்கி சென்ற ஆம்னி பஸ், பைக் மீது மோதியது.

இந்த விபத்தில் சுப்ரமணி, ஹரிணி ஆகியோர் பஸ்சின் சக்கரத்தில் சிக்கி தலைநசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதில் படுகாயம் அடைந்த சுஸ்மித்ரா, உயிருக்கு ஆபத்தான நிலையில் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த திருக்கோகர்ணம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர் போலீசார், விபத்தில் பலியான 2 பேரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்தை ஏற்படுத்திய ஆம்னி பஸ்சில் சென்னை செல்ல இருந்த 42பயணிகள் மாற்று பஸ்களில் செல்லும்படி போலீசாரால் அறிவுறுத்தப்பட்டனர்.

இதுகுறித்து திருக்கோகர்ணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆம்னி பஸ் டிரைவர் சரவணனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கோயிலுக்கு சென்று திரும்பியபோது தந்தை, மகள் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விதிமீறிய ஆம்னி பஸ்

திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு புதுக்கோட்டை பிஎல்ஏ ரவுண்டானாவிலிருந்து மாவட்ட கலெக்டர் அலுவலகம் சாலையில் வாகன போக்குவரத்தை தடுக்க போலீசார் தடுப்புகள் அமைத்திருந்தனர். ஆனால் தடுப்புகளை மீறி ஆம்னி பஸ் சென்றுள்ளது. விதி மீறலால் தான் இந்த விபத்து நடந்துள்ளது என போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

பஸ் சாவி இல்லாததால் 3 மணி நேரம் தவிப்பு

விபத்து நடந்தபோது அந்த வழியாக சென்றவர்கள், தந்தை, மகள் இறப்புக்கு காரணமான ஆம்னிபஸ்சின் கண்ணாடிகளை உடைத்து சேதப்படுத்தினர். இதனையடுத்து போலீசார், அவர்களை அங்கிருந்து விரட்டியடித்தபோது அந்த நேரத்தில் யாரோ ஒருவர், பஸ்சின் சாவியை எடுத்து சென்று விட்டார். இதனால் விபத்துக்கான பஸ்சை சாலையில் இருந்து அப்புறப்படுத்த முடியாமல் மூன்று மணி நேரமாக போலீசார் தவித்தனர்.பின்னர் அந்த பகுதியில் உள்ள மெக்கானிக் வரவழைக்கப்பட்டு சென்சாரை உடைத்து பஸ்சை போலீசார் அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.

The post புதுகையில் பைக் மீது ஆம்னி பஸ் மோதல் தந்தை, 4வயது மகள் தலை நசுங்கி பலி appeared first on Dinakaran.

Tags : omni ,bus ,Puducherry ,Pudukottai ,Kannaiya ,Viralimalai Theradi East Road ,
× RELATED உளுந்தூர்பேட்டை அருகே பேருந்து தலைகீழாக கவிழ்ந்ததில் 15 பேர் படுகாயம்