×
Saravana Stores

மிளகாய் விலை வீழ்ச்சி… கலவரமாக மாறிய விவசாயிகள் போராட்டம்: அரசு அலுவலகங்கள் மீதும் தாக்குதல்; வாகனங்களுக்கு தீ வைப்பு!!

ஹாவேரி : மிளகாய் விலை வீழ்ச்சியை கண்டித்து விவசாயிகள் நடத்திய போராட்டம் கலவரமாக மாறியுள்ளது. போராட்டத்தில் கார். ஜீப்களை விவசாயிகள் தீ வைத்து எரித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கர்நாடக மாநிலம் ஹாவேரி மாவட்டத்தில் உள்ள பேடகி காய்ந்த மிளகாய் சந்தை சர்வதேச அளவிலான சந்தையாகும். இந்த மார்க்கெட்டுக்கு மாநிலத்தின் மூலை முடுக்கு மட்டுமின்றி ஆந்திரா, மகாராஷ்டிரா மாநிலங்களில் இருந்தும் கொண்டு வரப்பட்டு விற்பனை செய் யப்படுகிறது. இந்நிலையில் நேற்று நடைபெற்ற சந்தையில், மிளகாய் விலை திடீரென ரூ.3 ஆயிரம், ரூ. 5 ஆயிரம் ரூ. 8,000 என குறைந்து வந்தது. இதனால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்தனர். 50% விலை வீழ்ச்சி அடைந்ததால் ஏமாற்றம் அடைந்த மிளகாய் விவசாயிகள், ஹாவேரியில் திடீர் போராட்டம் நடத்தினர்.

அவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்த முற்பட்ட போது, போராட்டம் வன்முறையாக உருவெடுத்தது. காவல்துறையினரை தாக்கி விரட்டிய விவசாயிகள், அவர்களின் வாகனங்களையும் தீயிட்டு கொளுத்தியதால் பதற்றம் நிலவியது. அருகில் இருந்த அரசு அலுவலகங்களுக்குள் புகுந்த போராட்டக்காரர்கள் வாகனங்களை கற்களை வீசி சேதப்படுத்தினர். இதனையடுத்து நிகழ்விடத்திற்கு விரைந்த கலவர தடுப்பு காவல்துறையினர், போராட்டக்காரர்களை தடியடி நடத்தி விரட்டி அடித்தனர். அசம்பாவிதங்களை தவிர்க்க ஹாவேரி முழுவதும் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் சந்தேகத்தின் அடிப்படையில் 10க்கும் மேற்பட்ட விவசாயிகளை பிடித்து விசாரணை செய்து வரும் காவல்துறையினர், ஹாவேரியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.

The post மிளகாய் விலை வீழ்ச்சி… கலவரமாக மாறிய விவசாயிகள் போராட்டம்: அரசு அலுவலகங்கள் மீதும் தாக்குதல்; வாகனங்களுக்கு தீ வைப்பு!! appeared first on Dinakaran.

Tags : Chilli price ,Haveri ,Padaki Dry Chilli Market ,Karnataka ,Haveri District International ,Chilli ,Dinakaran ,
× RELATED தொடர் மழையால் சுவர் இடிந்து குழந்தைகள் உள்பட 3 பேர் பலி