×

நாகர்கோவில் ரயில் நிலையத்தில் 4 கிலோ கஞ்சா பறிமுதல் பார்சலை வீசி விட்டு கும்பல் தப்பி ஓட்டம்

நாகர்கோவில், மார்ச் 12: தமிழ்நாட்டிற்கு வட மாநிலங்களில் இருந்து ரயில் மற்றும் கடலோர பகுதிகள் வழியாக கஞ்சா மற்றும் போதை பொருட்கள் கடத்தப்பட்டு வருவதாக வந்த தகவலின் பேரில் தற்போது காவல்துறை சார்பில் தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்தநிலையில் நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையத்தில் நேற்று முன் தினம் போதை பொருள் நுண்ணறிவு பிரிவு மற்றும் ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் இணைந்து ரயில்களில் சோதனை நடத்தினர். அப்போது நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையத்தின் முதல் பிளாட்பாரத்தில் கேட்பாரின்றி பார்சல் ஒன்று கிடந்தது. அதில் அனுப்புனர் மற்றும் பெறுநர் எந்த முகவரியும் இல்லை. எனவே சந்தேகத்தின் பேரில் அதை சோதனை செய்த போது அதில் கஞ்சா இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்தப் பார்சலை போதை பொருள் நுண்ணறிவு பிரிவு போலீசார் கைப்பற்றி கொண்டு சென்றனர். மொத்தம் 4 கிலோ கஞ்சா இருந்தது தெரிய வந்தது. இவை வட மாநிலத்தில் இருந்து ரயிலில் கடத்திக் கொண்டு வரப்பட்டு இருக்கலாம் என்றும், போலீசார் ரயில் நிலையத்தில் சோதனை நடத்திய நிலையில் அந்த பார்சலை அப்படியே பிளாட்பாரத்தில் வீசி விட்டு சென்று இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இது தொடர்பாக போதை பொருள் நுண்ணறிவு பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

The post நாகர்கோவில் ரயில் நிலையத்தில் 4 கிலோ கஞ்சா பறிமுதல் பார்சலை வீசி விட்டு கும்பல் தப்பி ஓட்டம் appeared first on Dinakaran.

Tags : Nagercoil ,Tamil Nadu ,Nagercoil railway station ,Dinakaran ,
× RELATED சாலை சீரமைப்பு பணியை விரைந்து முடிக்க...