×

குக்கர் சின்னத்தில் ஓபிஎஸ் போட்டி? : பாஜ அதிர்ச்சி

நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் அல்லது மே மாதம் நடைபெற உள்ள நிலையில் முக்கிய கட்சிகள் தொகுதி ஒதுக்கீடு குறித்து கூட்டணி கட்சிகளுடன் இறுதிகட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளன. இந்நிலையில் பாஜ கூட்டணியில் தேனி, மதுரை, தஞ்சை, சிவகங்கை, விருதுநகர் ஆகிய 5 தொகுதிகளை ஓபிஎஸ் கேட்டுள்ளாராம். இதில் தேனி, மதுரை, தஞ்சை, தொகுதிகளை அவருக்கு ஒதுக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இந்த தொகுதிகளில் போட்டியிட வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணியில் ஓபிஎஸ் ஈடுபட்டு வருகிறாராம். இதில், தேனியில் தனது மகனையும், மதுரையில் தனது ஆதரவாளரான கோபாலகிருஷ்ணனையும், தஞ்சையில் வைத்திலிங்கத்தின் ஆதரவாளர் ஒருவரை நிறுத்தவும், சிவகங்கையில் ஓபிஎஸ்சே களமிறங்கவும் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

இந்நிலையில், மதுரை மற்றும் தஞ்சை தொகுதிகளை கேட்டு பாஜ முக்கிய நிர்வாகிகள் பாஜ மேலிடத்தில் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தெரிகிறது. குறிப்பாக தஞ்சை நாடாளுமன்ற தொகுதியில் கடந்த முறை போட்டியிட்டு தோல்வி அடைந்த பாஜவின் மாநில பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம் தனக்கு இந்த முறையும் சீட் வேண்டும் என கட்சி மேலிடத்துக்கு அழுத்தம் கொடுத்து வருவதாக கூறப்படுகிறது. ஆனால் வைத்திலிங்கம் தனக்கு தஞ்சை மாவட்டத்தில் செல்வாக்கு இருப்பதால் தனது ஆதரவாளர் ஒருவரை நிறுத்தி தனது செல்வாக்கை நிரூபிக்க வேண்டும் என நினைக்கிறாராம். இதனால் பாஜ மற்றும் ஓபிஎஸ் ஆதரவாளர்களிடையே தஞ்சை தொகுதியை பிடிக்க போட்டா போட்டி நிலவுகிறது.

இன்னொரு பக்கம் வைத்திலிங்கம், கருப்பு முருகானந்தம் இடையே நிலவி வரும் பனிபோர் ஓபிஎஸ்சும், பாஜ இடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாம். அதே நேரத்தில் சிவகங்கை தொகுதியை பாஜ கூட்டணியில் உள்ள டிடிவி.தினகரனும் தான் போட்டியிட சீட் கேட்டு வருகிறார். இதனால், ஓபிஎஸ்-டிடிவி இடையே மல்லுக்கட்டு நடந்து வருகிறது. இந்த சூழலில், ஓபிஎஸ்சுக்கு கேட்கும் தொகுதிகளை ஒதுக்கினால் தாமரை சின்னத்தில்தான் போட்டியிட வேண்டும் என்று பாஜ அழுத்தம் தருவதாக கூறப்படுகிறது. ஆனால் ஓபிஎஸ் தாமரை சின்னத்தில் போட்டியிடுவதற்கு பதில் டிடிவியின் குக்கர் சின்னத்தில் போட்டியிட முடிவு செய்து உள்ளதாக கூறப்படுகிறது. இது, பாஜவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

The post குக்கர் சின்னத்தில் ஓபிஎஸ் போட்டி? : பாஜ அதிர்ச்சி appeared first on Dinakaran.

Tags : OPS ,Cooker Icon ,BJP ,Theni ,Madurai ,Thanjai ,Sivagangai ,Virudhunagar ,
× RELATED ஜூன் 4ம் தேதிக்கு பின் அதிமுக, இரட்டை...