×

கலைத்துறையில் சாதனை படைத்த 30 கலைஞர்களுக்கு விருது: மாவட்ட ஆட்சியர் வழங்கினார்

சென்னை: கலைத்துறையில் சாதனைப்படைத்த சென்னை மாவட்டத்தை சேர்ந்த 30 கலைஞர்களுக்கு கலை பண்பாட்டுத்துறையின் விருதுகளை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே வழங்கினார். மாவட்ட ஆட்சியர் தலைமையில் செயல்படும் மாவட்ட கலை மன்றங்களின் வாயிலாக ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆண்டுதோறும் சிறந்த கலைஞர்களுக்கு கலை பண்பாட்டுத்துறை வாயிலாக விருதுகள் வழங்கிட ஆணையிடப்பட்டுள்ளது. அதன்படி, இந்த ஆண்டு சென்னை மாவட்டத்தில் 30 கலைஞர்கள் இவ்விருதுக்கு தேர்வு செய்யப்பட்டனர். இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில் மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே விருதுகளை நேற்று வழங்கினார்.

65 வயதுக்கு மேற்பட்ட கலைஞர்களுக்கான கலை முதுமணி விருது மற்றும் தலா ரூ.20 ஆயிரத்திற்கான காசோலை ஆர்.கே.சித்தன் (நாடகம்), ராதா கல்யாணராமன் (குரலிசை), ஜெயசந்தர் (ஓவியம்), எம்.வேதமூர்த்தி (தமிழிசை), வெ.லோககுரு (ஓவியம்), என்.வி.சுந்தரம் (நாதஸ்வரம்), ஆகியோருக்கும் வழங்கப்பட்டது. இதேபோல், 51 வயது முதல் 65 வயதுக்குட்பட்ட கலைஞர்களுக்கான கலை நன்மணி விருது மற்றும் தலா ரூ.15 ஆயிரம் காசோலை லதா அரவிந்தன் (நாட்டிய ஆசிரியர்), டி.ஆர்.சேதுராமன் (தவில்), ஜி.கே.ரகுராமன் (நாதஸ்வரம்), எம்.என்.ஹரிஹரன் (மிருதங்கம்), சக்தி வேல் முருகானந்தம் (பரதநாட்டிய மிருதங்கம்), ஜெ.ராம்தாஸ் (கடம்) ஆகியோருக்கும் வழங்கப்பட்டது.

36 வயது முதல் 50 வயதுக்குட்பட்ட கலைஞர்களுக்கான கலைச்சுடர்மணி விருது மற்றும் தலா ரூ.10 ஆயிரம், காசோலை ஜெயலலிதா (வீதி நாடகம்), நாகநந்தினி (பரதநாட்டிய ஆசிரியர்), அய்யாதுரை (கிராமிய பாடகர்), ரா.பிரசன்னா ராம்குமார் (நவீன நாடகம்), நியூட்டன் நவீன் பால் (துடும்பாட்டம்), மாம்பலம் எஸ்.சிவக்குமார் (நாதஸ்வரம்) ஆகியோருக்கும் வழங்கப்பட்டது. 19 வயது முதல் 35 வயதுக்குட்பட்டவர்களுக்கான கலை வளர்மணி விருது மற்றும் தலா ரூ.6 ஆயிரம் காசோலை, பா.கிரிதர பிரசாத் (கஞ்சிரா), செ.நாமதேவன் (பரதநாட்டியம்), டி.கலைமகன் (வில்லிசைப் பாடகர்), ஜனனி ராஜன் (குரலிசை), மு.வினோதா (புரவியாட்டம்), வி.மனோஜ் (ஓவியம்) ஆகியோருக்கு வழங்கப்பட்டது.

18 வயதுக்குட்பட்ட கலைஞர்களுக்கான கலை இளமணி விருது மற்றும் தலா ரூ.4 ஆயிரம் காசோலை, சாருலதா சந்திரசேகர் (வீணை), தேவி ஹம்சிகா ( ஓவியம்), கா.பி.அத (பரதநாட்டியம்), நிதிஷ் (சின்னத்திரை) வர்ஷினிஸ்ரீ (சிலம்பம்), வைபவ் மகேஷ் (கதா காலட்சேபம்) ஆகியோருக்கு வழங்கப்பட்டது. இளம் கலைஞர்களுக்கு நடத்தப்பட்ட போட்டியில் வெற்றி பெற்ற சென்னை மாவட்டக்கலைஞர்கள் 15 நபர்களுக்கும் பரிசுகளும் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் கலை பண்பாட்டுத்துறை துணை இயக்குநர் ஹேமநாதன், தமிழ்நாடு அரசு இசைக்கல்லூரி முதல்வர் சாய்ராம், ஆகியோரும் கலந்துக் கொண்டனர்.

The post கலைத்துறையில் சாதனை படைத்த 30 கலைஞர்களுக்கு விருது: மாவட்ட ஆட்சியர் வழங்கினார் appeared first on Dinakaran.

Tags : Collector ,CHENNAI ,Rashmi Siddharth Jagade ,Arts and Culture Department ,District Art Councils ,District Collector ,
× RELATED சமுதாய வளர்ச்சிக்கு சிறப்பாக...