×

முதல் மாடியில் உள்ள வீட்டிற்கு தண்ணீர் கேன் தூக்கிச்சென்ற மாணவன் திடீர் உயிரிழப்பு: போலீசார் விசாரணை

பெரம்பூர்: வியாசர்பாடியில் தண்ணீர் கேன் தூக்கிச் சென்ற 10ம் வகுப்பு மாணவன் திடீரென உயிரிழந்தார். மாரடைப்பு காரணமாக அவர் உயிரிழந்தாரா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். வியாசர்பாடி, ஏ.கல்யாணபுரம் பகுதியில் வசித்து வருபவர் கார்த்திபன் (46). ஐடி துறையில் வேலை செய்து வரும் இவருக்கு 16 வயதில் விஜய் திலீபன் என்ற மகன் இருந்தார். இவர் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் தந்தை, மகன் ஆகிய இருவரும் இரு சக்கர வாகனத்தில் 2 தண்ணீர் கேன்களை எடுத்துக்கொண்டு மதியம் 3 மணியவில் வீட்டிற்கு வந்தனர். அப்போது ஒரு தண்ணீர் கேனை தூக்கிக்கொண்டு விஜய் திலீபன் முதல் மாடிக்குச் சென்றார்.

அதன் பிறகு இரு சக்கர வாகனத்தை ஓரமாக விட்டுவிட்டு அவரது தந்தை கார்த்திபன், மற்றொரு தண்ணீர் கேனை எடுத்துக்கொண்டு மேலே சென்று பார்த்தபோது, தண்ணீர் கேன் ஓரமாக சாய்ந்து கிடந்தது. மேலும் அவரது மகன் விஜய் திலீபன் மயக்க நிலையில் இருந்துள்ளார். உடனடியாக அவரை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று காண்பித்தபோது, விஜய் திலீபனை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது தந்தை கார்த்திபன் கதறி அழுதார். மாரடைப்பு ஏற்பட்டு சிறுவன் உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இருப்பினும் முழு பிரேத பரிசோதனை அறிக்கையின் முடிவில் விஜய் திலீபன் எவ்வாறு உயிரிழந்தார் என்பது தெரியவரும் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 16 வயது சிறுவன் திடீரென உயரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

The post முதல் மாடியில் உள்ள வீட்டிற்கு தண்ணீர் கேன் தூக்கிச்சென்ற மாணவன் திடீர் உயிரிழப்பு: போலீசார் விசாரணை appeared first on Dinakaran.

Tags : Perambur ,Vyasarpadi ,Karthipan ,Vyasarpadi, A.Kalyanapuram ,Dinakaran ,
× RELATED வாலிபருக்கு கத்திக்குத்து