×

டெல்லியில் இருந்து தலைமை தேர்தல் ஆணையர் தலைமையில் தேர்தல் பார்வையாளர்கள் ஆலோசனை கூட்டம்: சென்னையில் 100 ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் பங்கேற்பு

சென்னை:  நாடாளுமன்ற தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், தேர்தல் பார்வையாளர்கள் ஆலோசனை கூட்டம், டெல்லியில் இருந்து இந்திய தலைமை தேர்தல் ஆணையர் தலைமையில் காணொலி வாயிலாக நடந்தது. சென்னையில் நடந்த கூட்டத்தில் 100 ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஆர்எஸ் அதிகாரிகள் பங்கேற்றனர். நாடாளுமன்ற தேர்தலுக்கான தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. தமிழகத்தில் மொத்தமுள்ள 39 தொகுதிகளுக்கான தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலின்போது ஒவ்வொரு தொகுதிக்கும் ஒரு பொது பார்வையாளர், ஒரு செலவின பார்வையாளர் நியமிக்கப்படுவது வழக்கம். அதன்படி, பொது பார்வையாளர்கள் அந்தந்த தொகுதிகளில் நடைபெறும் தேர்தல் ஏற்பாடுகளை கண்காணித்து நடவடிக்கை எடுப்பார்கள். செலவின பார்வையாளர்கள் ஒவ்வொரு வேட்பாளர்களும் எவ்வளவு செலவு செய்கிறார்கள் என்பது தொடர்பாக ஆய்வு செய்து தகவல் சேகரிப்பார்கள். அதேநேரம், பதற்றமான வாக்குச்சாவடிகளில் போலீஸ் பார்வையாளர்களும் நியமிக்கப்படுவார்கள்.

தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் தொடங்கும்போது பார்வையாளர்கள் வெளிமாநிலங்களில் இருந்து தமிழ்நாடு வருவார்கள். பொது பார்வையாளர்களாக ஐஏஎஸ் அதிகாரிகளே நியமிக்கப்படுவார்கள். செலவின பார்வையாளர்களாக ஐஆர்எஸ் (இந்திய வருவாய் துறை) அதிகாரிகளும், போலீஸ் பார்வையாளர்களாக ஐபிஎஸ் அதிகாரிகளும் நியமிக்கப்படுவார்கள். இந்தியா முழுவதும் உள்ள தேர்தல் பார்வையாளர்களுக்கான பயிற்சி கூட்டம் நேற்று இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் தலைமையில் காலை 10 மணிக்கு தொடங்கியது. தமிழ்நாட்டை பொறுத்தவரை, சென்னை, தலைமை செயலகத்தின், நாமக்கல் கவிஞர் மாளிகை 10வது மாடியில் உள்ள கூட்ட அரங்கில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு மேற்பார்வையில் காணொலிக்காட்சி வாயிலாக இந்த கூட்டம் நடைபெற்றது. இதில் 100க்கும் மேற்பட்ட ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஆர்எஸ் அதிகாரிகள் பங்கேற்றனர். டெல்லியில் இருந்தபடி, இந்திய தலைமை தேர்தல் தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் தலைமையில் இந்த கூட்டம் நடைபெற்றது.

இதில், நாடாளுமன்ற தேர்தலின்போது பார்வையாளர்களாக நியமிக்கப்படும் அதிகாரிகள் என்னென்ன பணிகளை மேற்கொள்ள வேண்டும், வேட்பாளர்கள் செலவுகளை எவ்வாறு கண்காணிக்க வேண்டும், சட்டம்-ஒழுங்கு பிரச்னைகள் ஏற்படாமல் தடுப்பது, வாக்காளர்கள் பாதுகாப்பாக வாக்களிப்பது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும், டெல்லியில் இருந்து இந்திய தலைமை தேர்தல் ஆணையர் பேசும்போது, பதற்றமான வாக்குச்சாவடிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள், பணப்பட்டுவாடாவை தடுப்பது, வாக்காளர்களுக்கு பரிசு பொருட்கள் வழங்குவதை தடுப்பது குறித்து விரிவாக ஆலோசனை நடத்தினார். பதற்றமான தொகுதிகளில் பொது பார்வையாளர்கள், 2 செலவின பார்வையாளர்களை நியமிப்பது குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

 

The post டெல்லியில் இருந்து தலைமை தேர்தல் ஆணையர் தலைமையில் தேர்தல் பார்வையாளர்கள் ஆலோசனை கூட்டம்: சென்னையில் 100 ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் பங்கேற்பு appeared first on Dinakaran.

Tags : Chief Election Commissioner ,Delhi ,IAS ,IPS ,Chennai ,India ,IRS ,Visitor ,Meeting ,Dinakaran ,
× RELATED தேர்தல் நேரத்தில் ஒன்றிய அரசு...