×

செல்வப்பெருந்தகை குற்றச்சாட்டு மோடியின் கைப்பாவையாக தேர்தல் ஆணையம் செயல்படுகிறது

சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கை: நாடாளுமன்ற தேர்தல் தேதி ஒருசில நாட்களில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், எதிர்பாராத விதமாக தேர்தல் ஆணையர் அருண் கோயல் பதவி விலகியிருப்பது நாடு முழுவதும் அதிர்ச்சி அலைகளை உருவாக்கியுள்ளது. அரசமைப்புச் சட்டப்படி இதுவரை தேர்தல் ஆணையர்களை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அல்லது ஒரு நீதிபதி, பிரதமர், எதிர்கட்சித் தலைவர் அடங்கிய குழு தான் தேர்வு செய்யும். உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக மோடி அரசு சட்டத் திருத்தம் செய்து உச்சநீதிமன்ற நீதிபதியை தேர்வுக் குழுவிலிருந்து நீக்கிவிட்டு பிரதமர், அவரது பரிந்துரைப்படி ஒரு அமைச்சர், எதிர்கட்சித் தலைவர் ஆகியோர் தேர்தல் ஆணையர்களை தேர்வு செய்கிற நிலை இன்றைக்கு ஏற்பட்டிருக்கிறது.

இதன்மூலம் பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவைக் கொண்டு பிரதமர் மோடி தேர்தல் ஆணையத்தில் இரு உறுப்பினர்களையும், அவரது பரிந்துரையின்படி விரைவில் நியமிக்க இருக்கிறார். இது 140 கோடி மக்களை கொண்ட இந்திய ஜனநாயகத்திற்கு விடப்பட்ட மிகப்பெரிய அச்சுறுத்தல். நாடாளுமன்ற தேர்தல் சுதந்திரமாக, சுயேட்சையாக நடைபெறுவதற்கு வாய்ப்புகள் மிகமிக குறைவாக உள்ளது. தேர்தல் பத்திரம் தொடர்பான பட்டியல் வெளிவந்தால் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும், பாஜவுக்கும் உள்ள ரகசிய உறவுகள் அம்பலமாகும் என்ற அச்சம் பிரதமர் மோடிக்கு ஏற்பட்டிருக்கிறது. அதன் விளைவாகத்தான் தேர்தல் ஆணையத்திலிருந்து அருண் கோயல் பதவி விலகுகிற நிலை ஏற்பட்டது.

இந்திய தேர்தல் ஆணையம் மோடியின் கைப்பாவையாக இருப்பதால் தான் வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜ 370 இடங்களையும், கூட்டணியோடு 400 இடங்களையும் கைப்பற்றும் என்று உறுதியாக கூறுகிறார். இதன்மூலம், ஒரு சர்வாதிகாரி போல தேர்தல் ஆணையத்தை தனது கைப்பிடிக்குள் வைத்துக் கொண்டு இந்திய ஜனநாயகத்தின் குரல் வளையை நெரித்துக் கொண்டிருக்கிறார்.ஜனநாயகத்தை மீட்பதற்கு இந்தியா கூட்டணியின் வெற்றியே உரிய தீர்வு.

The post செல்வப்பெருந்தகை குற்றச்சாட்டு மோடியின் கைப்பாவையாக தேர்தல் ஆணையம் செயல்படுகிறது appeared first on Dinakaran.

Tags : Election Commission ,Modi ,Chennai ,Tamil ,Nadu ,Congress ,president ,Selvaperunthagai ,Arun Goyal ,Dinakaran ,
× RELATED மதம், சாதி அடிப்படையில் பிரிவினையை...