சென்னை: நடிகரும் இயக்குனருமான மாஸ்டர் சுரேஷ் என்கிற சூரியகிரண் (49) மாரடைப்பால் காலமானார். தமிழ், தெலுங்கில் குழந்தை நட்சத்திரமாக 200 படங்களில் நடித்தவர் மாஸ்டர் சுரேஷ். இவர், ‘முந்தானை முடிச்சு’, ‘பூவிழி வாசலிலே’ உள்பட பல படங்களில் நடித்த பேபி சுஜிதாவின் சகோதரர். பாக்யராஜ், சரிதா நடித்த ‘மவுன கீதங்கள்’ உள்பட பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார் சுரேஷ். பிறகு தனது பெயரை சூரியகிரண் என மாற்றிக்கொண்டு தெலுங்கில் படங்களை இயக்கினார். நாகார்ஜுனா தயாரிப்பில் ‘சத்யம்’ என்ற படத்தை முதலில் இயக்கினார். தொடர்ந்து ‘பிரம்மாஸ்திரம்’, ‘ராஜு பாய்’ ஆகிய தெலுங்கு படங்களையும் இயக்கினார். 2010ம் ஆண்டு ‘காசி’, ‘சமுத்திரம்’ உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகை காவேரியை காதல் திருமணம் செய்தார். கருத்து வேறுபாட்டால் இவர்கள் பிரிந்தனர். இப்போது வரலட்சுமி நடிப்பில் ‘அரசி’ என்ற படத்தை இயக்கி வந்தார். இந்நிலையில் மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்ட சூரியகிரண், சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். திடீரென மாரடைப்பு ஏற்பட்டு நேற்று இறந்தார். சென்னையில் இன்று இறுதிச்சடங்கு நடக்கிறது.
The post நடிகர் சூரியகிரண் மரணம் appeared first on Dinakaran.