×

105 ரன்னில் சுருண்டது விதர்பா: மும்பை வலுவான முன்னிலை; முஷீர் – ரகானே பொறுப்பான ஆட்டம்

மும்பை: ரஞ்சி கோப்பை இறுதிப் போட்டியில், விதர்பா அணியை 105 ரன்னுக்கு சுருட்டிய மும்பை அணி வலுவான முன்னிலை பெற்றது. வாங்கடே மைதானத்தில் நடந்து வரும் இப்போட்டியில், டாஸ் வென்ற விதர்பா அணி முதலில் பந்துவீச… மும்பை அணி முதல் இன்னிங்சில் 224 ரன்னுக்கு ஆட்டமிழந்தது. ஷர்துல் தாகூர் 75, பிரித்வி ஷா 46, லால்வானி 37 ரன் எடுத்தனர். அடுத்து களமிறங்கிய விதர்பா அணி முதல் நாள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 31 ரன் எடுத்திருந்தது. அதர்வா டெய்டே (21 ரன்), ஆதித்யா தாக்கரே (0) இருவரும் நேற்று 2வது நாள் ஆட்டத்தை தொடங்கினர். அதர்வா 23, ஆதித்யா 19, யாஷ் ரத்தோட் 27, யாஷ் தாகூர் 16 ரன் எடுக்க, மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்து அணிவகுத்தனர். விதர்பா அணி முதல் இன்னிங்சில் 105 ரன் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது (45.3 ஓவர்).

மும்பை பந்துவீச்சில் தவால் குல்கர்னி, ஷாம்ஸ் முலானி, தனுஷ் கோடியன் தலா 3 விக்கெட், ஷர்துல் தாகூர் 1 விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து, 119 ரன் முன்னிலையுடன் 2வது இன்னிங்சை தொடங்கிய மும்பை அணி, 2ம் நாள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 141 ரன் எடுத்துள்ளது (50 ஓவர்). பிரித்வி ஷா 11, பூபென் லால்வானி 18 ரன் எடுத்து ஆட்டமிழந்தனர். 3வது விக்கெட்டுக்கு பொறுப்புடன் விளையாடி வரும் முஷீர் கான் 51 ரன், கேப்டன் அஜிங்க்யா ரகானே 58 ரன்னுடன் களத்தில் உள்ளனர். கை வசம் 8 விக்கெட் இருக்க, மும்பை அணி 260 ரன் முன்னிலை பெற்றுள்ளதால் விதர்பா அணி கடும் நெருக்கடியில் சிக்கியுள்ளது. இன்று நடக்கும் 3வது நாள் ஆட்டத்தில் மும்பை அணி பெரிய ஸ்கோர் அடித்து விதர்பாவுக்கு இமாலய இலக்கை நிர்ணயிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

The post 105 ரன்னில் சுருண்டது விதர்பா: மும்பை வலுவான முன்னிலை; முஷீர் – ரகானே பொறுப்பான ஆட்டம் appeared first on Dinakaran.

Tags : Vidarbha ,Mumbai ,Mushir ,Rakhine ,Ranji Trophy ,Whangade Stadium ,Dinakaran ,
× RELATED மும்பையில் பல இடங்களில் மழை நீர் தேக்கம்