×

சென்னை விமான நிலையத்தில் சேட்டிலைட் போன் வைத்திருந்ததாக 2 பயணிகள் போலீசில் ஒப்படைப்பு: சிஐஎஸ்எப் முறையாக விசாரணை நடத்தவில்லை என குற்றச்சாட்டு

தாம்பரம்: சென்னை விமான நிலையத்தில் சேட்டிலைட் போன் வைத்திருந்ததாக ஜெர்மன் மற்றும் ஐதராபாத் பயணிகளை மத்திய பாதுகாப்பு படையினர் போலீசில் ஒப்படைத்தனர். அவர்கள் பயணத்தை ரத்து செய்து விசாரித்ததில் அது சேட்டிலைட் போன் இல்லை என தெரியவந்தது. இதனால் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் முறையான விசாரணை நடத்தவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
சென்னை விமான நிலையத்தில் இருந்து சேலம் செல்லும் இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் நேற்று முன்தினம் காலை சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து புறப்பட தயாரானது.

விமானத்தில் செல்ல வந்த பயணிகள் மற்றும் அவர்களின் உடைமைகளை மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் பரிசோதித்து அனுப்பிக் கொண்டிருந்தனர். அப்போது ஜெர்மன் மற்றும் ஐதராபாத்தை சேர்ந்த இருவர் இந்த விமானத்தில் சேலம் செல்வதற்காக வந்திருந்தனர்.
அப்போது மத்திய தொழில் பாதுகாப்பு படை அதிகாரிகள் அந்த 2 பயணிகளையும் சோதித்தபோது, அவர்கள் வைத்திருந்த செல்போன்கள் சேட்டிலைட் போன் என்று சந்தேகப்பட்டனர்.

சேட்டிலைட் போன்கள் பாதுகாப்பு காரணங்களுக்காக நமது நாட்டில் பயன்படுத்துவதற்கு தடை உள்ளதால், பயணிகள் இருவரையும் நிறுத்தி விசாரித்தனர். அவர்கள், இது சேட்டிலைட் போன் அல்ல, புவியியல் ஆராய்ச்சி வசதியுடன் கூடிய கருவி என்று கூறினர். ஆனாலும் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் அதை ஏற்றுக் கொள்ளாமல், இருவரின் பயணங்களை ரத்து செய்தனர். அதோடு அந்த 2 பேர் வைத்திருந்த செல்போன்களையும் பறிமுதல் செய்தனர். இதன் காரணமாக விமானம் அரை மணி நேரம் தாமதமாக சேலம் புறப்பட்டு சென்றது.

இதையடுத்து மத்திய தொழில் பாதுகாப்பு படையினர், ஜெர்மன் பயணி உள்பட 2 பேர் மற்றும் அவர்களிடம் பறிமுதல் செய்த சேட்டிலைட் போன்களை விமான நிலைய போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில், தாங்கள் புவியியல் ஆராய்ச்சியாளர்கள். இது அதற்கான வசதியுடன் கூடிய கருவிகள் தான். இருவரும் ப்ராஜெக்ட் சம்பந்தமாக சேலம் செல்கிறோம் என்று கூறினர். அப்போது அவர்கள் கூறுவது உண்மை எனவும், அவர்கள் வைத்திருந்தது சேட்டிலைட் போன் அல்ல என்று தெரிய வந்தது.

இதையடுத்து அவர்கள் மீதும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல், இருவரையும் விடுவித்து அனுப்பி வைத்தனர். மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் முறையாக விசாரணை நடத்தாமல், 2 பயணிகளின் பயணங்களை ரத்து செய்து ஆப்லோட் செய்ததோடு, இருவரையும் போலீசிலும் ஒப்படைத்தனர். ஆனால் போலீஸ் முழுமையாக விசாரித்து, உண்மை தெரிந்த பின்பு விடுவித்துள்ளனர்.

இதனால் அந்த பயணிகள் அவமானப்பட்டதோடு, விமானம் அரை மணி நேரம் தாமதமாக புறப்பட்டு சென்று மற்ற பயணிகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்குக் காரணம் மத்திய தொழில் பாதுகாப்பு படையினரின் குளறுபடியான சோதனை தான் என்று கூறப்படுகிறது. மேலும் மொழிப் பிரச்னையும் இதற்கு ஒரு காரணம் என்றும் கூறப்படுகிறது. பெரும்பாலான மத்திய தொழில் பாதுகாப்படையினருக்கு இந்தி மொழியை தவிர வேறு எதுவும் தெரியாததால் இதுபோன்ற பிரச்னைகள் அடிக்கடி சென்னை விமான நிலையத்தில் ஏற்படுவதாகவும் கூறப்படுகிறது.

The post சென்னை விமான நிலையத்தில் சேட்டிலைட் போன் வைத்திருந்ததாக 2 பயணிகள் போலீசில் ஒப்படைப்பு: சிஐஎஸ்எப் முறையாக விசாரணை நடத்தவில்லை என குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Tags : Chennai airport ,CISF ,Tambaram ,security ,Dinakaran ,
× RELATED சேலம் விமானசேவை நேர மாற்றம்