×

தனியார் விடுதியில் பிறந்த சில நிமிடங்களில் பச்சிளம் ஆண் குழந்தையை குப்பையில் வீசிய 17 வயது சிறுமி: பார்வையற்ற தம்பதியின் மகளை ஏமாற்றிய டிரைவர் மீது போக்சோ சட்டம் பாய்ந்தது

சோழிங்கநல்லூர்: திருவல்லிக்கேணி தனியார் விடுதியில் பிறந்த பச்சிளம் ஆண் குழந்தையை, சில நிமிடங்களில், அருகே உள்ள குப்பை தொட்டியில் 17 வயது சிறுமி வீசி சென்றார். இந்த சம்பவம் தொடர்பாக ஆட்டோ டிரைவரை கைது செய்ய தனிப்படை மதுரை விரைந்துள்ளது. சென்னை திருவல்லிக்கேணி குலாம் மிர்சா சாலையில் உள்ள தனியார் விடுதி அருகே நேற்று முன்தினம், பிறந்த சில நிமிடங்களே ஆன ஆண் குழந்தை ஒன்று ரத்தத்தோடு கிடந்தது.

குழந்தையின் அழுகை சத்தம் கேட்டு அங்கு சென்று பார்த்த விடுதி ஊழியர்கள், இதுபற்றி உடனே திருவல்லிக்கேணி போலீசாருக்கு தகவல் அளித்தனர். அதன்பேரில், விரைந்து வந்த போலீசார், பச்சிளம் குழந்தையை மீட்டு திருவல்லிக்கேணியில் உள்ள கஸ்தூரிபா காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு குழந்தைக்கு, டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். பின்னர், குழந்தையை வீசி சென்ற நபர் குறித்து போலீசார் அந்த விடுதி அருகே உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை பெற்று விசாரணை நடத்தினர்.

அப்போது, மதுரையை சேர்ந்த பார்வையற்ற மாற்றுத்திறனாளி தம்பதி மற்றும் அவர்களது 17 வயது மகள் ஆகியோர் 2 நாட்களுக்கு முன்பு விடுதியில் அறை எடுத்து தங்கியதும், சிறுமிக்கு விடுதியிலேயே யாருக்கும் தெரியாமல் ஆண் குழந்தை பிறந்ததும், குழந்தையை வளர்க்க முடியாததால், அந்த சிறுமி குழந்தையை குப்பை தொட்டியில் வீசி சென்றதும் தெரியவந்தது.

பின்னர், சிறுமியை பிடித்து போலீசார் விசாரணை நடத்தியபோது, மதுரையை சேர்ந்த ஆட்டோ டிரைவர் ராஜ்குமார் என்பவர் தன்னை காதலித்து திருமணம் செய்துகொள்வதாக ஆசை வார்த்தைகூறி, பலமுறை பலாத்காரம் செய்ததும், அதனால் குழந்தை உண்டானதும், பின்னர் ஆட்டோ டிரைவர் தன்னை திருமணம் செய்யாமல் ஏமாற்றியதாக தெரிவித்துள்ளார். மேலும், தனது பெற்றோர் பார்வையற்றவர்கள் என்பதால், ஆட்டோ டிரைவருக்கு எதிராக போராட முடியாமல், வேறு வழியின்றி சென்னைக்கு தனது பார்வையற்ற பெற்றோருடன் வந்த சிறுமி, விடுதியில் அறை எடுத்து குழந்தையை பெற்று, குப்பை தொட்டியில் வீசியதும் தெரியவந்தது.

அதைதொடர்ந்து சிறுமி அளித்த வாக்குமூலத்தின்படி திருவல்லிக்கேணி போலீசார் சிறுமியை காதலித்து திருமணம் செய்துகொள்வதாக ஏமாற்றி கர்ப்பமாக்கிய ஆட்டோ டிரைவர் ராஜ்குமார் மீது போக்சோ உள்ளிட்ட சட்டப் பிரிவுகளின் கீழ், வழக்கு பதிவு செய்தனர். மேலும், தனிப்படை ஒன்று ஆட்டோ டிரைவரை கைது செய்ய மதுரைக்கு விரைந்துள்ளது. குப்பை தொட்டியில் தனக்கு பிறந்த குழந்தையை 17 வயது சிறுமி வீசி சென்ற சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

The post தனியார் விடுதியில் பிறந்த சில நிமிடங்களில் பச்சிளம் ஆண் குழந்தையை குப்பையில் வீசிய 17 வயது சிறுமி: பார்வையற்ற தம்பதியின் மகளை ஏமாற்றிய டிரைவர் மீது போக்சோ சட்டம் பாய்ந்தது appeared first on Dinakaran.

Tags : Chozhinganallur ,Thiruvallikkeni ,Madurai ,Chennai ,
× RELATED கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம்...