×
Saravana Stores

மாநில தேர்தல் ஆணையராக ஜோதி நிர்மலாசாமி நியமனம்: 5 ஆண்டு காலம் பதவி வகிப்பார்

சென்னை: தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் வெ.பழனிகுமார் கடந்த 8ம் தேதி (வெள்ளி) பணி ஓய்வு பெற்றார். தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையராக, ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி பழனிகுமார், 2021ல் நியமனம் செய்யப்பட்டார். இரண்டு ஆண்டுகள் பணிக்கு பிறகு, கடந்த ஆண்டு மே மாதம் மீண்டும் அதே பதவியில் ஓராண்டுக்கு நியமிக்கப்பட்டார். அவரது, நீட்டிக்கப்பட்ட பணிக் காலம் வரும் மார்ச் 9ம் தேதியுடன் (சனி) நிறைவடைந்தது. சனிக்கிழமை விடுமுறை தினம் என்பதால், பணி நாளான மார்ச் 8ம் தேதி பணி நிறைவு பெற்றார். இதையடுத்து, புதிய தேர்தல் ஆணையரை நியமிக்கும் நடவடிக்கைகளை மாநில அரசு தொடங்கியது.

இந்த நிலையில், தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையராக ஜோதி நிர்மலாசாமி ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா நேற்று வெளியிட்டுள்ள உத்தரவில் கூறி உள்ளார். ஜோதி நிர்மலாசாமி கடந்த 2019 செப்டம்பர் 20ம் தேதி முதல் பத்திரப்பதிவு துறை செயலாளராக இருந்தார். தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், “பா.ஜோதி நிர்மலாசாமி மாநில தேர்தல் ஆணையாளராக அவர் பதவியேற்ற நாளில் இருந்து 5 ஆண்டுகள் அல்லது 65 வயது வரை, இதில் எது முந்தையதோ அதுவரை பதவியில் நீடிப்பார்” என்று கூறப்பட்டுள்ளது. இதையடுத்து நேற்று மாலை அவர், மாநில தேர்தல் அலுவலகம் சென்று மாநில தேர்தல் ஆணையராக பொறுப்பேற்றார்.

The post மாநில தேர்தல் ஆணையராக ஜோதி நிர்மலாசாமி நியமனம்: 5 ஆண்டு காலம் பதவி வகிப்பார் appeared first on Dinakaran.

Tags : Jyothi Nirmalasamy ,Chennai ,Tamil Nadu ,State Election Commissioner ,V Palanikumar ,Palanikumar ,IAS ,Tamil Nadu State Election Commissioner ,Jyoti Nirmalaswamy ,
× RELATED தமிழ்நாடு முழுவதும் ரேஷன் கடைகள்...