×

சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு தடை பொன்முடிக்கு விதிக்கப்பட்ட தண்டனை நிறுத்தி வைப்பு: சுப்ரீம் கோர்ட் அதிரடி

புதுடெல்லி: சொத்து குவிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு தடை விதித்த உச்ச நீதிமன்றம் அவருக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைத்தது. கடந்த 2006-11ல் உயர்கல்வி மற்றும் கனிமவள அமைச்சராக பொன்முடி பதவி வகித்தார். இதையடுத்து 2011ல் அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும், பொன்முடிக்கு எதிராக வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக அதிமுக தொடர்ந்துள்ளது என பொன்முடி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து வழக்கை விரிவாக விசாரணை நடத்திய விழுப்புரம் சிறப்பு நீதிமன்றம், பொன்முடி மற்றும் அவரது மனைவி இருவர் மீதும் எந்த ஊழல் குற்றச்சாட்டும் இல்லை எனக்கூறி விடுதலை செய்து கடந்த 2016ம் ஆண்டு ஏப்ரல் மாதம் தீர்ப்பு வழங்கியது.

இதையடுத்து சிறப்பு நீதிமன்றம் வழங்கிய உத்தரவுக்கு எதிராக 2017ல் லஞ்ச ஒழிப்புத்துறை மேல்முறையீடு செய்தது. இதையடுத்து வழக்கை எம்.பி, எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் விசாரித்து வந்த நிலையில், இந்த வழக்கில் பொன்முடி மற்றும் அவரது மனைவி இருவரும் குற்றவாளி என உத்தரவிட்டு, விழுப்புரம் சிறப்பு நீதிமன்றம் வழங்கிய உத்தரவை ரத்து செய்தார். பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி ஆகிய இருவருக்கும் மூன்று ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா ரூ.50 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்து இருந்தார். இதையடுத்து மேற்கண்ட வழக்கில் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி ஆகியோர் தரப்பில் கடந்த ஜனவரி 3ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது . வழக்கை கடந்த 29ம் தேதி விசாரித்த உச்ச நீதிமன்றம், ‘‘பொன்முடி மற்றும் அவரது மனைவி ஆகிய இருவரும் சரணடைவதில் இருந்து நான்கு வாரம் விலக்கு அளித்து உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில் மேற்கண்ட வழக்கானது உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் அபாய் எஸ் ஓஹா மற்றும் உஜ்ஜல் புயான் ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது பொன்முடி அவரது மனைவி விசாலாட்சி ஆகியோர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் அபிஷேக் மனு சிங்வி மற்றும் முகுல் ரோத்தகி ஆகியோர் வாதாடினர். இதையடுத்து நீதிபதிகள் நேற்று பிறப்பித்த உத்தரவில், ‘‘இந்த விவகாரத்தில் பொன்முடி குற்றவாளி என்று அளிக்கப்பட்ட உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு இடைக்கால தடை விதிக்கப்படுகிறது. அவருக்கு வழங்கப்பட்ட மூன்று ஆண்டு தண்டனை இடைக்காலமாக நிறுத்தி வைக்கப்படுகிறது என்று கூறினர். அப்போது பொன்முடி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் தண்டனையை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்று கோரினர். அதற்கு பதலளித்த நீதிபதிகள், தற்போது வழங்கப்பட்ட உத்தரவில் அதுபோன்று குறிப்பிட முடியாது. உங்களது கோரிக்கையை வேண்டுமானால் தனிப்பட்ட மனுவாக தாக்கல் செய்யலாம் எனக்கூறி, வழக்கின் விசாரணையை அடுத்து தேதி எதுவும் குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர். பொன்முடியின் மனைவி விசாலாட்சிக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைத்த நீதிபதிகள், அவரை குற்றவாளி என்று அறிவித்த தீர்ப்புக்கு தடை விதிக்க மறுத்துவிட்டனர்.

* முதல்வருடன் பொன்முடி சந்திப்பு

சொத்துகுவிப்பு வழக்கில் பொன்முடிக்கு உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை உச்ச நீதிமன்றம் நேற்று நிறுத்தி வைத்து உத்தரவு பிறப்பித்தது. இதையடுத்து, பொன்முடி மீண்டும் எம்எல்ஏவாக வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. தீர்ப்பு வெளியானதை தொடர்ந்து நேற்று மாலை முதல்வர் மு.க.ஸ்டாலினை சென்னை, ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் பொன்முடி சந்தித்து பேசினார். அப்போது, உச்ச நீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து இனி எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.

The post சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு தடை பொன்முடிக்கு விதிக்கப்பட்ட தண்டனை நிறுத்தி வைப்பு: சுப்ரீம் கோர்ட் அதிரடி appeared first on Dinakaran.

Tags : Madras High Court ,Ponmudi ,Supreme Court ,New Delhi ,minister ,Dinakaran ,
× RELATED கோமா நிலையில் உள்ள ஒருவரை கவனிப்பது...