×

அறந்தாங்கி வீரமாகாளியம்மன் கோயில் குளம் பொலிவு பெறுமா?

*பக்தர்கள் எதிர்பார்ப்பு

அறந்தாங்கி : புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி மக்களின் காவல் தெய்வமாக வீரமாகாளி அம்மன் கோயில் உள்ளது.சுயம்புவாக தோன்றிய அம்மன் என்பதால் அறந்தாங்கி மட்டும் இல்லாமல் அறந்தாங்கி சுற்றியுள்ள 16 கிராமங்களின் காவல்தெய்வமாக இந்த கோயில் திகழ்கிறது.சுமார் 300 ஆண்டுகளுக்கு முன் திருவுருவ சிலை செய்யும் எண்ணம் கிராம மக்களுக்கு ஏற்பட்டது. அப்போது உருவான சிலையை நான்கு கரங்களுடன் செய்து முடித்தனர். ஆனால், அந்த சிலையின் வலது மேல் கரத்தில் ஒரு விரலில், சேதம் ஏற்பட்டு விட்டது. இதனால் ஊர் மக்கள் மனவருத்தம் அடைந்தனர். அன்றைய தினம் கோயில் அர்ச்சகரின் கனவில் தோன்றிய அம்மன், நான் வெளிப்படும் நேரம் வந்துவிட்டது.

என் ஆலயத்தில் இருந்து ஒரு ஆட்டை நடக்க விடுங்கள். அது எங்கு சென்று அமர்ந்து கொள்கிறதோ அங்கே தோண்டுங்கள். என் வடிவம் கிடைக்கும்’ என்று கூறியதும் அர்ச்சகர் கனவு கலைந்து எழுந்தார். தன்னுடைய கனவைப் பற்றி ஊர் மக்களிடம் கூறினார். அனைவரும் அவ்வாறே ஆட்டை நடக்கவிட்டனர். அது ஓரிடம் சென்று அமர்ந்தது. அங்கே மண்ணைத் தோண்டியபோது, சில அடி ஆழத்தில் அம்மனின் பிரமாண்ட கற்சிலை கிடைத்தது. அந்த சிலை 8 கரங்கள் கொண்டு, அசுரனை அழுத்திய கோலத்தில் இருந்தது. அதில் ஒரு அதிசயம் தென்பட்டது. அதன் வலது மேல்கரத்தில் ஒருவிரல் பின்னப்பட்டு இருந்தது.

எனவே ஊர் மக்களுக்கு இதை வைத்து வழிபாடு செய்யலாமா? என்ற ஐயம் ஏற்பட்டது. அதன்பின் அன்றிரவும் அர்ச்சகரின் கனவில் தோன்றிய அன்னை, உங்கள் வீட்டில் ஒருவருக்கு ஊனம் என்றால் அவரை தூக்கி வீசிவிடுவீர்களா, நான் உங்களை காக்க வந்த அன்னை. என்னை தயக்கம் இன்றி நிறுவி வழிபடுங்கள்’ என்றாள். இதையடுத்து அந்த பிரம்மாண்ட சிலையை கோயிலில் பிரதிஷ்டை செய்யது வடக்கு நோக்கி அருள்பாலித்து வருகிறது வீரமாகாளியம்மன்இந்த கோவிலில் வழிபாடு நடத்தினால் திருமணம் கைகூடும்.

திருமணம் நிச்சயமான பிறகு அல்லது திருமணம் முடிந்தபிறகு, பொட்டு கட்டிய தங்கத் தாலியை அம்மனுக்குக் காணிக்கையாக செலுத்தி, பக்தர்கள் நேர்த்திக் கடனை செலுத்துகின்றனர். ஆண்டுதோறும் ஆடி மாதம் 30நாளும் திருவிழா நடைபெறும். இப்படி சிறப்பு வாய்ந்த இந்த கோவிலின் அருகே உள்ள தெப்பகுளம் தாமரை இலைகலால் மூடி குளத்திற்கு உள்ளே செல்ல முடியாத நிலையில் உள்ளது.

இதனால் கோவிலுக்கு வந்து முடி காணிக்கை செலுத்தும் பக்தர்கள் தெப்பகுளத்தில் குளிக்க வழி இல்லாத நிலை உள்ளது.இதனால் அறந்தாங்கி வீரமாகாளியம்மன் கோயில் தெப்பகுளத்தில் உள்ள தாமரை இலைகளை அப்புறப்படுத்தி தெப்பகுளத்தை பராமரிக்க வேண்டும் என அறந்தாங்கி சுற்றுவட்ட பக்தர்கள் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post அறந்தாங்கி வீரமாகாளியம்மன் கோயில் குளம் பொலிவு பெறுமா? appeared first on Dinakaran.

Tags : Aranthangi ,Veeramakaliamman ,Arantangi ,Pudukottai ,Veeramakali Amman ,Arantangi Veeramakaliamman ,
× RELATED அறந்தாங்கி சட்டமன்ற தொகுதியில் 68.80 சதவீதம் வாக்கு பதிவு