×

புதுக்கோட்டையில் ஜல்லிக்கட்டு போட்டி 971 காளைகள் ஆக்ரோஷ பாய்ச்சல்

*மாடுகள் முட்டி 19 பேர் காயம்

புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டத்தில் நடந்த ஜல்லிக்கட்டு போட்டியில் 971 காளைகள் ஆக்ரோசமாக பாய்ந்ததில் 19 பேர் படுகாயம் அடைந்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம் மாத்தூர் அருகே அருகே உள்ள செங்களாக்குடி ஜல்லிக்கட்டு நேற்று நடைபெற்றது. ஜல்லிக்கட்டை டிஆர்ஓ செல்வி தொடங்கி வைத்தார். முதலில் கோவில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. இதனை மாடுபிடி வீரர்கள் யாரும் பிடிக்கவில்லை.

இதனைதொடர்ந்து மற்ற காளைகள் ஒன்றன் பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட்டன. ஜல்லிக்கட்டில் புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சாவூர் உள்பட பல மாவட்டங்களில் இருந்து காளைகளை அதன் உரிமையாளர்கள் அழைத்து வந்திருந்தனர். மொத்தம் 754 காளைகள் பங்கேற்றன. காளைகளை அடக்க மாடுபிடி வீரர்கள் 200 பேர் களம் கண்டனர். ஜல்லிக்கட்டை காண சுற்றியுள்ள கிராமத்தில் இருந்தும், வெளி மாவட்டங்களில் இருந்தும் பார்வையாளர்கள் அதிகம் பேர் வந்திருந்தனர்.

காளைகளை அடக்கியதில் மாடு பிடி வீரர்கள் 12 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்களுக்கு அங்கேயே சிகிச்சை அளிக்க வசதி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. இதில் 3 பேர் மேல் சிகிச்சைக்காக திருச்சி மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஜல்லிகட்டுல் 150 க்கும் மேற்பட்ட போலீஸ்சார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

திருமயம்: திருமயம் அருகே உள்ள நெய்வாசல் கிராமத்தில் திட்டாணி அய்யனார் கோயில் தேர் திருவிழா நேற்று முன்தினம் நடைபெற்றது. இங்கு ஆண்டுதோறும் சிவராத்திரியை முன்னிட்டு மூன்று நாட்கள் திருவிழா நடத்துவது வழக்கம். இதனிடையே தேர் திருவிழாவை முன்னிட்டு நேற்று நெய்வாசல் செட்டி கண்மாய் திடலில் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. காலை 10 மணி அளவில் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி தொடங்கியது. நிகழ்ச்சியில் கலந்து கொள்ள திருமயம், காரைக்குடி, திருப்பத்தூர், குன்றக்குடி, ஆத்தங்குடி சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து 217 காளைகள் வந்திருந்தன.

முதலாவதாக வாடி வாசலில் இருந்து ஊர் கோயில் காளை அவிழ்த்து விடப்பட்ட நிலையில் தொடர்ந்து வெளியூரில் இருந்து வந்திருந்த காளைகள் ஒவ்வொன்றாக அவிழ்த்து விடப்பட்டன. அப்போது மாடுபிடி வீரர்கள் போட்டி போட்டுக் கொண்டு மாடுகளை அடக்கினர். நிகழ்ச்சியில் சிறந்த மாடுபிடி வீரர்கள், மாடுகளுக்கு சிறப்பு பரிசு வழங்கப்பட்டது. அதேசமயம் மாடுபிடி வீரர், பார்வையாளர்கள் உள்ளிட்ட 7 பேர் லேசான காயமடைந்தனர். காயமடைந்தவர்களுக்கு ஜல்லிக்கட்டு திடல் அருகே அமைக்கப்பட்டிருந்த மருத்துவ குழுவினர் முதலுதவி சிகிச்சை அளித்தனர். முன்னதாக நிகழ்ச்சியினை ஆர்டிஓ ஐஸ்வர்யா, முன்னாள் எம்எல்ஏ சுப்புராம், நெய்வாசல் ஊராட்சி தலைவர் கரிகாலன் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் தொடங்கி வைத்தனர்.

The post புதுக்கோட்டையில் ஜல்லிக்கட்டு போட்டி 971 காளைகள் ஆக்ரோஷ பாய்ச்சல் appeared first on Dinakaran.

Tags : Jallikattu ,Pudukottai 971 ,Pudukottai ,jallikattu competition ,Pudukottai district ,Pudukottai Jallikattu ,Mathur ,Dinakaran ,
× RELATED ஜல்லிக்கட்டு வீரர் அடித்துக்கொலை