×

ராணிப்பேட்டை மாவட்டத்தில் மயானக்கொள்ளை திருவிழா கோலாகலம்

* சிறப்பு அலங்காரத்தில் அங்காளம்மன் வீதியுலா

* பல்வேறு வேடமணிந்து பக்தர்கள் நேர்த்திக்கடன்

ராணிப்பேட்டை : ராணிப்பேட்டை மாவட்டத்தில் நேற்று மயானக்கொள்ளை திருவிழா கோலாகலமாக நடந்தது. இதையொட்டி சிறப்பு அலங்காரத்தில் அங்காளம்மன் வீதியுலா வந்து அருள்பாலித்தார்.ஆற்காடு மற்றும் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் மயானக்கொள்ளை விழா நேற்று மிக சிறப்பாக நடந்தது. நகரின் பல்வேறு இடங்களில் உள்ள அம்மன் கோயில்களில் அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கு பல்வேறு மங்கள பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, அலங்காரம் மற்றும் ஆராதனை செய்யப்பட்டன. பின்னர், அம்மனுக்கு ஆடு, கோழி பலியிட்டு நேர்த்திக்கடன் செலுத்தினர். அப்போது, பக்தர்கள் பக்தி பரவசத்துடன் அருள் வந்து ஆடினர்.

தொடர்ந்து கோயிலில் இருந்து அலங்கரிக்கப்பட்ட அம்மன் ஊர்வலம் நடந்தது. இதில் பக்தர்கள் முதுகில் அலகு குத்தி அந்தரத்தில் பறந்து வந்து சுவாமிக்கு மாலை அணிவித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். மேலும், விரதமிருந்து காப்பு கட்டிய பக்தர்கள் கரகம் மற்றும் தீச்சட்டி ஏந்தி ஊர்வலமாக வந்தனர். அதேபோல், உடலில் எலுமிச்சை பழம் குத்தியும், அலகு குத்தியும் வேன், கார் ஆகியவற்றை இழுத்துச் சென்றனர். சுவாமி ஊர்வலம் தாரை தப்பட்டை முழங்க முக்கிய வீதிகள் வழியாக சென்று பாலாற்றை அடைந்தது. அங்கு எலுமிச்சை, கொழுக்கட்டை, சுண்டல், உப்பு, மிளகு மற்றும் நவதானியங்களை அம்மனுக்கு சூறையிட்டு நேர்த்திக்கடன் செலுத்தினர்.

ஊர்வலத்தில் காளி உள்ளிட்ட பல்வேறு வேடங்கள் அணிந்து பக்தர்கள் வந்தனர். மேலும், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பாலாற்றில் அம்மனுக்கு பூஜை செய்த பிறகு மீண்டும் ஊர்வலமாக சென்று கோயிலை அடைந்தது. அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாமல் இருக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. பாதுகாப்பு பணிகளை ராணிப்பேட்டை எஸ்பி கிரண் ஸ்ருதி, டிஎஸ்பி பிரபு ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

மேலும், 3 இடங்களில் கண்காணிப்பு கோபுரம் அமைக்கப்பட்டு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். போக்குவரத்து நெரிசலை தவிர்க்க அரசு மற்றும் தனியார் பஸ்கள் பைபாஸ் சாலை வழியாக திருப்பி விடப்பட்டன. மேலும், சுவாமி ஊர்வலம் செல்லும் போது பாதிப்பு ஏற்படாமல் இருப்பதற்காக அடிக்கடி மின்சாரம் தடை செய்யப்பட்டது.ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை அம்மன் கோயில் தெருவில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் மயானக்கொள்ளை திருவிழா நேற்று நடந்தது.

திருவிழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் காரை பொன்னியம்மன் கோயிலில் பொங்கல் வைத்து கரகாட்டம், உப்பிலியாட்டம், நையாண்டி மேளத்துடன் ஊர்வலமாக அம்மன் கோயில் வந்தடைந்தது. தொடர்ந்து, நேற்று பக்தர்கள் ஆணி செருப்பணிந்து கைக்குழந்தைகளுடன் நேர்த்திக்கடன் செலுத்தினர். ஆடு, கோழியை கடித்தவாறு கோயிலை சுற்றி வந்தனர். மேலும், விரதமிருந்த பக்தர்கள் தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

இதுதவிர பக்தர்கள் அலகு குத்தியும், குழந்தைகளை சுமந்து கொண்டும், லாரி, ஜேசிபி, வேன், கார் போன்ற வாகனங்களை இழுத்தும், ஜேசிபி, கிரேன் வாகனங்களில் தொங்கிக்கொண்டும் அம்மன்களுக்கு மாலை அணிவித்தபடி பாலாற்றங்கரைக்கு சென்று மயானக்கொள்ளை நடந்தது.இதேபோல், ராணிப்பேட்டை நகரின் பல்வேறு இடங்களில் இருந்து அலங்கரிக்கப்பட்ட தேர்களில் அங்காள பரமேஸ்வரி அம்மனை ஊர்வலமாக பாலாற்றுக்கு எடுத்து வந்து சிறப்பு பூஜைகள் செய்தனர். தொடர்ந்து, மயானத்தில் சூறை விடும் நிகழ்ச்சி நடந்தது.

கலவை: திமிரி அடுத்த மேல்நாயக்கன்பாளையம் கிராமத்தில் உள்ள எல்லை காளியம்மன் கோயிலில் நேற்று மயானக்கொள்ளை திருவிழாவை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் ஆராதனை நடந்தது.

தொடர்ந்து, உற்சவர் அம்மனுக்கு 75 ஆயிரம் ருத்ராட்சங்களை கொண்டு சிறப்பு அலங்காரம் செய்து, தேரில் அமர வைத்து பம்பை உடுக்கை, மேளதளங்கள் முழங்க ஊர்வலமாக மயானத்திற்கு கொண்டு சென்று, அங்கு சூறைவிடும் நிகழ்ச்சி நடந்தது. முன்னதாக ஊர்வலத்தில் பல்வேறு அம்மன் வேடமணிந்தும், அலகு குத்தி பல்வேறு வாகனங்களை இழுத்து சென்றும் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

இதேபோல், நெமிலி மற்றும் பனப்பாக்கம், அரக்கோணம் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் ேகாயிலில் சிறப்பு பூஜைகளுக்கு பிறகு, அம்மன் ஊர்வலமாக மயானத்தை அடைந்ததும் அங்கு சூறைவிடும் நிகழ்ச்சி நடந்தது. ஊர்வலத்தில் பக்தர்கள் சிவன், பார்வதி, பத்ரகாளி உட்பட பல்வேறு வேடமணிந்து கலந்து கொண்டனர். ேமலும், கோயிலில் நடந்த தீமிதி விழாவில் தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

The post ராணிப்பேட்டை மாவட்டத்தில் மயானக்கொள்ளை திருவிழா கோலாகலம் appeared first on Dinakaran.

Tags : Mayanakkai festival ,Ranipet district ,Angalamman ,Veethiula ,Ranipettai ,Ranipettai district ,Angalamman Veethiula ,Arcot ,
× RELATED வேலூர், ராணிப்பேட்டை மாவட்ட...