×

அகல ரயில் பாதை மின்மயமாக்கல் கோவையிலிருந்து பொள்ளாச்சி வழியாக கூடுதல் ரயில் இயக்க வலியுறுத்தல்

பொள்ளாச்சி : கோவை அருகே போத்தனூரிலிருந்து பொள்ளாச்சி வழியாக திண்டுக்கல் வரையிலும் இருந்த, மீட்டர் கேஜ் பாதையை, கடந்த 2008ம் ஆண்டு அகல ரயில் பாதையாக மேம்படுத்தும் பணி துவங்கப்பட்டது. இப்பணி சுமார் 7 ஆண்டுகள் நடைபெற்று, 2015 ம் ஆண்டு நிறைவடைந்த நிலையில் 2015 ஆகஸ்ட் மாதம் முதல், மீண்டும் ரயில் சேவை துவங்கப்பட்டது.

பொள்ளாச்சி வழியாக சென்னை மற்றும் தென்மாவட்ட பகுதிகளுக்கு கூடுதல் ரயில் இயக்க வசதியாக, கொரோனா ஊரடங்கில், ரயில் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்ட போது, அந்நேரத்தில் முதற்கட்டமாக கோவை போத்தனூரிலிருந்து பொள்ளாச்சி வரையிலும் உள்ள சுமார் 39 கிலோ மீட்டர் தூரத்திலான பாதையில் மின்மயமாக்கல் பணி துரிதப்படுத்தப்பட்டு நிறைவடைந்தது.

அதன்பின், பொள்ளாச்சியிலிருந்து திண்டுக்கல் மற்றும் பாலக்காடு வரையிலும் உள்ள அகல பாதையில் மின் மயமாக்கல் பணி நடைபெற்றது.அப்பணியும் சுமார் ஒரு ஆண்டுக்கு முன்பு முழுமையாக நிறைவடைந்தது. இதையடுத்து,திண்டுக்கல்லிலிருந்து பொள்ளாச்சி வழியாக, பாலக்காடு மற்றும் போத்தனூர் வரையிலும், மின்சார ரயில் மூலம், அதி வேக ரயில் சோதனையோட்டம் நடைபெற்றது.

திண்டுக்கல்லிருந்து பழனி,உடுமலை,பொள்ளாச்சி வழியாக போத்தனூர் வரையிலும் மின் மயமாக்கல் நிறைவடைந்ததுடன்,அதிவேக ரயில் சோதனையோட்டமும் வெற்றிக்கரமாக செயல்பட்டுள்ளதாகவும், திருப்தி அளித்ததாக ரயில்வே அதிகாரிகள் ஏற்கனவே தெரிவித்துள்ளனர். இத்தருணத்தில், பொள்ளாச்சியை மையமாக கொண்டு, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு கூடுதல் ரயில் சேவை ஏற்படுத்த வேண்டும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது. தற்போது பொள்ளாச்சி வழியாக, சென்னை, மதுரை, திருச்செந்தூர், பாலக்காடு, திருவனந்தபுரம் உள்ளிட்ட வழித்தடங்களில் ரயில் சேவை உள்ளது.

ஆனால், சென்னை மற்றும் தென்மாவட்ட பகுதிகளுக்கு, எக்பிரஸ் ரயில் சேவை மேற்கொள்ள இதுவரை நடவடிக்கை எடுக்காமல் இருப்பதாக கூறப்படுகிறது. பொள்ளாச்சியிலிருந்து தென்மாவட்ட பகுதிக்கும், சென்னைக்கும் கூடுதல் ரயில் சேவை இருக்கும்போது, பொள்ளாச்சி மற்றும் உடுமலை, மடத்துக்குளம் பகுதியில் வசிக்கும் ரயில் பயணிகளுக்கு, பயணம் எளிதாக இருப்பதுடன்,பல்வேறு பணிகள் நிமித்தமாக விரைந்து சென்று வர ஏதுவாக இருக்கும் என்பது எந்த விதத்திலும் சந்தேகம் கிடையாது.

எனவே, சுமார் ஒராண்டுக்கு முன்பே மின்மயமாக்கல் பணி ழுமையாக நிறைவடைந்ததுடன் சோதனையோட்டமும் வெற்றிகரமானதால்,பொள்ளாச்சி வழியாக கூடுதல் ரயில் இயக்கத்திற்கான நடவடிக்கையில்,தென்னக ரயில்வே அதிகாரிகள் ஈடுபட வேண்டும் என்பது, ரயில் பயணிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது. இதுகுறித்து, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி நகர தலைவர் சுப்பையா மற்றும் பயணிகள் பலர் கூறுகையில், பொள்ளாச்சி ரயில்வே ஸ்டேஷன் 2008ம் ஆண்டு வரை மீட்டர் கேஜ் பாதையாக இருந்தபோது. பொள்ளாச்சி வழியாக கோவையிலிருந்து கொல்லத்துக்கும், கோவை-மதுரை, பாலக்காடு-ராமேஸ்வரம், கோவை-ராமேஸ்வரம், கோவை-தூத்துக்குடி, பாலக்காடு-திண்டுக்கல், பாலக்காடு-பொள்ளாச்சி, கோவை-மதுரை செல்லும் ரயில்கள் இயக்கப்பட்டிருந்தது.

பின், அகல ரயில்பாதை பணிகள் துவங்கப்பட்டு சுமார் 7 ஆண்டுக்கு மேலாக அப்பணி நடைபெற்றது. சுமார் ஒரு ஆண்டுக்கு முன்பு,பொள்ளாச்சி வழியாக கேரள மாநிலம் பாலக்காடு,கோவை, பழனி வரையிலும் அகல பாதையில் மின்மயமாக்கல் பணி முழுமையடைந்தது.இருப்பினும், பொள்ளாச்சி வழியாக திருவனந்தபுரத்திலிருந்து மதுரைக்கும், சென்னை, கோவை, திருச்செந்தூர், பாலக்காடு உள்ளிட்ட பகுதிகளுக்கு மட்டுமே இயக்கப்படுகிறது.

எனவே, பொள்ளாச்சி மற்றும் உடுமலை பயணிகளின் நீண்டநாள் கோரிக்கையான, மீட்டர்கேஜ் இருந்த போது இயக்கப்பட்ட அனைத்து ரயில்களும் பொள்ளாச்சி வழியாக இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், கோவையிலிருந்து சென்னைக்கு இயக்கப்படும் சேரன் எக்ஸ்பிரஸ் ரயிலை,பொள்ளாச்சியிலிருந்தே சென்னைக்கு இயக்க வேண்டும்.

மேட்டுபாளையத்திலிருந்து உடுமலை வரை ரயில் இயக்க வேண்டும். பொள்ளாச்சி மற்றும் உடுமலை பகுதியில் தென்மாவட்ட பகுதி மக்கள் அதிகம் வசிப்பதால்,கோவையிலிருந்து பொள்ளாச்சி, உடுமலை வழியாக நாகர்கோவில் வரை எக்ஸ்பிரஸ் ரயில் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது, அனைத்து தரப்பு பயணிகளின் கோரிக்கையாக உள்ளது’ என்றனர்.

The post அகல ரயில் பாதை மின்மயமாக்கல் கோவையிலிருந்து பொள்ளாச்சி வழியாக கூடுதல் ரயில் இயக்க வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Coimbatore ,Pollachi ,Bothanur ,Dindigul ,Dinakaran ,
× RELATED பொள்ளாச்சி சுற்று வட்டார பகுதியில்...