×

மாணவர் சேர்க்கை தொடக்கம் அரசு பள்ளிகளில் 8 நாளில் 3,860 குழந்தைகள் சேர்ப்பு

நாமக்கல் : நாமக்கல் மாவட்டத்தில், அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தொடங்கியுள்ளது. கடந்த 8 நாட்களில், 3860 குழந்தைகள் புதியதாக சேர்க்கப்பட்டுள்ளனர்.தமிழகத்தில் உள்ள அரசு துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் மாணவ, மாணவிகள் சேர்க்கையை அதிகரிக்க அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, தொடக்க கல்வித்துறை புதிய முயற்சியாக, மார்ச் மாதமே மாணவ, மாணவிகள் சேர்க்கையை துவங்கியுள்ளது.

கடந்த 1ம் தேதி முதல், தமிழகம் முழுவதும் உள்ள அரசு துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் மாணவ, மாணவிகள் சேர்க்கை நடந்து வருகிறது. நாமக்கல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி, ராசிபுரம் ஒன்றியத்தில் உள்ள அரசு பள்ளிகளில் மாணவ, மாணவிகள் சேர்க்கையை, கடந்த வாரம் தொடங்கி வைத்தார். இதை தொடர்ந்து, மாவட்டத்தில் உள்ள 15 ஒன்றியங்களிலும் உள்ள அரசு துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் மாணவ, மாணவிகள் சேர்க்கை நடைபெற்று வருகிறது. குறிப்பாக 5 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் முதல் வகுப்பில் சேர்த்து கொள்ளப்படுகிறார்கள்.

அந்தந்த ஒன்றியங்களில் உள்ள அங்கன்வாடி மையங்களில் படித்து வரும் குழந்தைகள், அருகாமையில் உள்ள துவக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் முதல் வகுப்பில் சேர்த்து கொள்ளப்படுகிறார்கள். இதற்காக ஒவ்வொரு பள்ளிகளிலும் மாணவ, மாணவிகள் சேர்க்கை விழிப்புணர்வு பேரணிகள் நடத்தப்பட்டு வருகிறது. பள்ளியில் சேரும் குழந்தைகளின் பெற்றோரும் கவுரவிக்கப்படுகிறார்கள்.

இதற்காக சிறிய அளவில் பள்ளிகள் தோறும் மாணவ, மாணவியர் சேர்க்கை விழாக்கள் நடத்தப்பட்டு வருகிறது. நாமக்கல் மாவட்டத்தில் 927 துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகள் உள்ளன. இந்த பள்ளிகளில் நடைபெறும் மாணவ, மாணவியர் சேர்க்கையை கண்காணிக்க, அந்தந்த வட்டார கல்வி அலுவலர்கள் தலைமையில் தனிக்குழு அமைக்கப்பட்டு, அவர்கள் பள்ளிகளை பார்வையிட்டு வருகிறார்கள்.

நாமக்கல் மாவட்டத்திலுள்ள அனைத்து பள்ளிகளிலும், மாணவர் சேர்க்கை விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதற்காக ஒவ்வொரு பள்ளிக்கும் தலா ₹2 ஆயிரம் அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. அனைத்து பள்ளிகளிலும் குறைந்தபட்சம் 3 குழந்தைகள் வீதம், புதியதாக சேர்த்து எமிஸ் இணையதளத்தில் பதிவு செய்யவேண்டும் என, கல்வித்துறை அதிகாரிகள் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.

மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில், கடந்த 8ம் தேதி வரை 3860 குழந்தைகள் புதியதாக சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்களில் பெரும்பாலான குழந்தைகள் முதல் வகுப்பில் சேர்க்கப்பட்டுள்ளனர்.இது குறித்து மாவட்ட கல்வி அலுவலர் (தொடக்கல்வி) பாலசுப்பிரமணியன் கூறுகையில், ‘நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில், கடந்த 1ம் தேதி முதல் மாணவ, மாணவிகள் சேர்க்கை நடந்து வருகிறது.

கோடை விடுமுறை முடிந்து, பள்ளிகள் திறக்கப்படும் வரை மாணவ, மாணவிகள் சேர்க்கை தொடர்ந்து நடைபெறும். அரசு பள்ளிகளில் தனியார் பள்ளிகளுக்கு இணையான வசதிகள் உள்ளது. எனவே, பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை அருகில் உள்ள அரசு பள்ளிகளில் சேர்க்க முன்வர வேண்டும்,’ என்றார்.

The post மாணவர் சேர்க்கை தொடக்கம் அரசு பள்ளிகளில் 8 நாளில் 3,860 குழந்தைகள் சேர்ப்பு appeared first on Dinakaran.

Tags : Namakkal ,Tamil Nadu ,
× RELATED இறைச்சி கடைகளில் நன்கு சமைத்த...