×

முதல்வர் வருகையையொட்டி தர்மபுரி விழாக்கோலம் பூண்டது

*போக்குவரத்து மாற்றம்; ட்ரோன்கள் பறக்க தடை

தர்மபுரி : தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி, தர்மபுரி விழாக்கோலம் பூண்டுள்ளது. இதையொட்டி, நகரில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும், ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. விழா நடக்கம் இடத்தை சுற்றிலும் 26 கிலோ மீட்டருக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம் மாவட்டங்களை சேர்ந்த பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, தர்மபுரி அரசு கலைக்கல்லூரி மைதானத்தில் இன்று (11ம் தேதி) காலை 10 மணிக்கு நடக்கிறது.

விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம் மாவட்டத்தில் ரூ.560 கோடி மதிப்பீட்டில் 75 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், 993 நிறைவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்தும், 8736 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கியும் பேசுகிறார்.

விழாவில், தர்மபுரி மாவட்ட கலெக்டர் சாந்தி வரவேற்று பேசுகிறார். முன்னதாக, தமிழக முதல்வருக்கு தர்மபுரி மாவட்ட எல்லையான தொப்பூரில், ஒருங்கிணைந்த மாவட்ட திமுக சார்பில், வேளாண்துறை அமைச்சர் எம்ஆர்கே.பன்னீர்செல்வம் தலைமையில், மாவட்ட செயலாளர்கள் தடங்கம் சுப்ரமணி, பழனியப்பன் மற்றும் கட்சியினர் உற்சாக வரவேற்பு அளிக்கின்றனர். ஒட்டப்பட்டி முதல் விழா நடைபெறும் அரசு கலைக்கல்லூரி வரை, பாரம்பரிய கிராம கலைகளான ஒயிலாட்டம், மயிலாட்டம், பொய்க்கால் குதிரையாட்டம், கரகாட்டம் உள்ளிட்ட கிராமிய ஆட்டங்கள் மூலம், தமிழக முதல்வருக்கு வரவேற்பு அளிக்கப்படுகிறது.

மேலும், திமுக கட்சியின் கருப்பு, சிவப்பு நிறத்தில் பலூன் கையில் வைத்துக்கொண்டு முதல்வருக்கு வரவேற்பு அளிக்கப்படுகிறது. தமிழக அரசின் திட்டங்கள் பதாகைகளில் பொறித்து, மக்கள் கையில் வைத்துக் கொண்டு முதல்வருக்கு வரவேற்பு அளிக்கின்றனர். விழா நடக்கும் தர்மபுரி அரசு கலைக்கல்லூரியின் முன்பு, சாலையின் சென்டர் மீடியனில் வாழை மரக்கன்று தோரணங்கள் கட்டப்பட்டுள்ளது. கட்சி கொடி தோரணங்கள் அமைக்கப்பட்டுள்ளது. விழா நடக்கும் நுழைவாயில் தென்னைமரக்கீற்றுகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. அரசு திட்டங்கள் பேனர்கள் மட்டும் விழா பந்தல் மேடைகளை சுற்றி வைக்கப்பட்டுள்ளது. விழா நடைபெறும் இடத்திலும், வெளியேயும் கட்சி பேனர்கள் எதுவும் வைக்கவில்லை.

தொப்பூர் முதல் தர்மபுரியில் விழா நடைபெறும் இடம் வரை, 26 கிலோ மீட்டர் தூரத்திற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. விழா மேடை மற்றும் பந்தல் அமைக்கப்பட்டுள்ள இடங்கள், கல்லூரி வளாகம் முழுவதும் காவல்துறையின் முழு கட்டுப்பாட்டில் நேற்று மாலை முதல் கொண்டு வரப்பட்டது. அறிமுகம் இல்லாத நபர்கள் உள்ளே செல்ல அனுமதிக்கப்படவில்லை.

விழா நடக்கும் இடத்தை சுற்றி ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல், ஈரோடு, திருப்பூர் ஆகிய 6 மாட்டத்தை சேர்ந்த 1300 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் விஜயகுமாரி தலைமையில், கோவை சரக டிஐஜி சரவணசுந்தர், 6 மாவட்ட எஸ்பிக்கள் தர்மபுரியில் முகாமிட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

முதல்வர் விழாவிற்கு வருகையையொட்டி, நேதாஜி பை-பாஸ் சாலை, சேலம் மெயின்ரோட்டில் புறநகர் பஸ்கள், லாரிகள் இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. பிளஸ்2 பொதுத்தேர்வு இன்று நடைபெற இருப்பதால், டவுன் பஸ் மட்டும் இயக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. புறநகர் பஸ்கள் மட்டும், போக்குவரத்து மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

தர்மபுரியில் இருந்த வரும் புறநகர் பஸ்கள், நான்கு ரோடு வழியாக, பென்னாகரம் சாலையின் வழியாக நான்குவழி சாலை வழியாக சேலம் மார்க்கமாகவும், சேலத்தில் இருந்து தர்மபுரி மார்க்கமாகவும் செல்லும் வகையில் போக்குவரத்து மாற்றி அமைக்கப்பட்டுள்ளது என போக்குவரத்து போலீசார் தெரிவித்தனர்.

The post முதல்வர் வருகையையொட்டி தர்மபுரி விழாக்கோலம் பூண்டது appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,Dharmapuri Festival Kolam ,Dharmapuri ,Tamil Nadu ,M.K.Stal ,
× RELATED ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர்...