×

ஊட்டி கோல்கிரைன் பண்ணையில் 30 டன் குப்ரி ஹிமாலினி ரக விதை கிழங்குகள் விற்பனைக்கு தயார்

*தோட்டக்கலைத்துறை தகவல்

ஊட்டி : ஊட்டி கோல்கிரைன் தோட்டக்கலை பண்ணையில் உற்பத்தி செய்யப்பட்ட 30 டன் குப்ரி ஹிமாலினி ரக விதை கிழங்கு விற்பனைக்கு தயாராக உள்ளது. தேவைப்படும் விவசாயிகள் வாங்கி பயன் பெறலாம் என தோட்டக்கலைத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தின் நீலகிரி மாவட்டம் ஒரு பிரதான தோட்டக்கலை மாவட்டமாகும். பயிர்சாகுபடியிலும், சீதோசண நிலையிலும் அண்டைய மாவட்டங்களைக் காட்டிலும் பெருமளவு வேறுபட்டது.

நீலகிரி மாவட்டத்தில் நிலவக்கூடிய தட்பவெட்பநிலை பல்வேறு பயிர்கள் சாகுபடிக்கு உகந்ததாக உள்ளது. முறையே காய்கறிகள், பழங்கள், வாசனைதிரவிய பயிர்கள், மலர்கள், மருத்துவ பயிர்கள் மற்றும் மலைத்தோட்டப்பயிர்கள் ஆகியவை படிமட்டங்கள் மற்றும் சில கிரமங்களில் குறுகிய சரிவான பரப்பில் சாகுபடி செய்யப்படுகின்றன. ஊட்டி, குன்னூர், கோத்தகிரி பகுதிகளில் உருளைக்கிழங்கு, முட்டை கோஸ், கேரட், பீன்ஸ், பிளம், பீச், பேரி மற்றும் இதர வகை பயிர்கள் சாகுபடி செய்யப்படுகிறது.

கூடலூர், பந்தலூர் போன்ற குறைந்த உயரப்பகுதிகளில் கிராம்பு, ஜாதிக்காய், மிளகு, இஞ்சி மற்றும் துரியன், லிச்சி, ரம்பூட்டான், மங்குஸ்தான் போன்ற பழங்கள் பயிரிடப்பட்டு வருகின்றன. தோட்டக்கலை பயிரான மலை காய்கறிகள் நீலகிரி மாவட்டத்தில் ஆண்டிற்கு நீர்போகம், கார்போகம் மற்றும் கடை போகம் என மூன்று பருவங்களாக சாகுபடி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மாவட்டம் முழுவதும் 55 ஆயிரம் ஹெக்டர் பரப்பளவில் தேயிலை விவசாயம் ேமற்கொள்ளப்படுகிறது.

இதற்கு அடுத்தபடியாக மலை காய்கறி பயிர்கள் 7 ஆயிரம் ஹெக்டர் பரப்பளவில் பயிாிப்படுகிறது. நீலகிரி மாவட்டத்தில் தோட்டக்கலைத்துறை கட்டுபாட்டில் உள்ள பண்ணைகளில் இருந்து சில்வர் ஓக் நாற்றுகள், தேயிலை நாற்றுகள், விதை கிழங்கு, முட்டைகோஸ் நாற்றுகள், சைனீஸ் காய்கறி நாற்றுகள், இயற்கை உரங்கள், மண்புழு உரங்கள் போன்றவைகள் உற்பத்தி செய்யப்பட்டு விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகின்றன.

இதனிடையே நஞ்சநாடு அருகே கோல்கிரைன் தோட்டக்கலை பண்ணையில் உற்பத்தி செய்யப்பட்டு 30 டன் தரமான குப்ரி ஹிமாலினி ரக விதை கிழங்கு இருப்பில் உள்ளது. கிலோ ஒன்றுக்கு ரூ.40க்கு விவசாயிகள் பெற்று கொள்ளலாம் என தோட்டக்கலைத்துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தோட்டக்கலைத்துறையினர் கூறுகையில், ‘‘ ஊட்டி கோல்கிரைன் தோட்டக்கலை பண்ணையில் உற்பத்தி செய்யப்பட்டு தற்போது 30 டன் விதை கிழங்கு இருப்பில் உள்ளது. தேவைப்படும் விவசாயிகள் கிலோ ரூ.40க்கு பெற்று கொள்ளலாம்’’ என்றனர்.

The post ஊட்டி கோல்கிரைன் பண்ணையில் 30 டன் குப்ரி ஹிமாலினி ரக விதை கிழங்குகள் விற்பனைக்கு தயார் appeared first on Dinakaran.

Tags : Ooty Kolgrain ,Ooty ,Colgrain Horticulture Farm ,Tamil Nadu ,Ooty Kolgrain farm ,Dinakaran ,
× RELATED கோடை சீசனை முன்னிட்டு...