×

வினை தீர்க்கும் வேலாயுதத்தைப் போற்றும் பாடல்கள்

வெற்றியை நல்கும் முருகப் பெருமானின் வேலாயுதத்தைப் போற்றி பல முருகன் அடியார்கள் தெய்வீகப்பாக்களைப் புனைந்துள்ளனர். இப்பதிகங்களை ஓதிவந்தால் நமது தீவினைகள் நீங்குவதுடன் எதிர்வரும் பகைகளையும் வென்று வாழலாம் என்பது ஆன்றோர்களின் ஆழ்ந்த நம்பிக்கையாகும். சந்தப் பாடல்கள் பாடி முருகன் அருள் பரப்பிய அருணகிரிநாத சுவாமிகள் அருளிச் செய்த வேல் வகுப்பு, வேல்வாங்கு வகுப்பு, வேல் விருத்தம் ஆகியன வேலைப் போற்றும் துதிப் பாடல்களில் குறிப்பிடத்தக்க சிறந்த பாடல்களாகும். சந்தத் தமிழ் கொஞ்சும் வேல் வகுப்பில் வேலின் வடிவழகும் வீரதீர பராக்கிரமச் செயல்களும் விரிவாக எடுத்துக் கூறப்பட்டுள்ளன. வேல்வாங்கு வகுப்பில் முருகப் பெருமானின் வேலாயுதம் விரைந்து செலுத்தப்பட்ட பொழுது நிகழும் நிகழ்ச்சிகள் தொகுத்துக் கூறப்பட்டுள்ளன. (வாங்குதல் என்பதற்குச் செலுத்துதல் என்று பொருள்).

சத்துருக்களை நாசம் செய்வதும், பயங்களை அகற்றுவதும் வேலின் குணமாதலின் அதற்குச் “சத்ரு சங்காரவேல்’’ என்பது சிறப்புப் பெயராயிற்று. அப்பெயரால் ஒரு பதிகம் ‘‘சத்ருசங்கார வேல்பதிகம்’’ என்று வழங்கி வருகிறது. இது மந்திரசக்தி கொண்டதாகும். வேலுக்குக் குந்தம் என்பது ஒருபெயராகும். பகைவர்களின் ரத்தத்தில் குளித்துச் சிவந்ததும், செம்மைசேர் குணங்களை உடையதுமான பெருமையை உடையது குந்தம்.

இதற்குச் செங்குந்த வேல், செங்குந்த வேல்படை என்பது பெயராயிற்று. இத்தகைய செங்குந்த வேலைச் சிறப்பித்துப் பாடியதே செங்குந்தவேல் பதிகம் ஆகும். பாம்பன் சுவாமிகள் வேலாயுதத்தை ஏந்திக் குழந்தையாக விளங்கும் முருகப் பெருமானை சிறப்பித்துப் பாடியது வேற்குழவி வேட்கையாகும். மேலும் பாம்பன் சுவாமிகள் தமது ‘‘சண்முகக் கவசத்தில்’’ உடலின் உறுப்புகளைக் காக்க முருகப் பெருமானையும் நமது புறத்தில் தோன்றும் பகைகளை வென்றழிக்க வேலாயுதத்தையும் வேண்டிப் பாடியுள்ளார்.

அறுபடை, வீடுகளில் உள்ள முருகப் பெருமானின் திருவேலுக்கு வணக்கம் கூறிப் பாடப்பட்ட நூல் வேல் வணக்கம் ஆகும். இதனை இயற்றியவர் வரகவி சுப்பிரமணிய பாரதியார் ஆவார். இதில் திருப்பரங்குன்றம் திருச்சீரலைவாய், திரு ஆவினன்குடி, திருஏரகம், குன்றுதோர் ஆடல், பழமுதிர்சோலை பழநி, கதிர்காமம், திருப்போரூர், திருத்தணிகை, சென்னிமலை, குமரக்கோட்டம் ஆகிய 12 திருத்தலங்களுக்குரிய பாடல்கள் இடம் பெற்றுள்ளன. இவருடைய வழியில் பின்னாளில் சேக்கிழார்தாசன் சிறுவாபுரி முருகனின் வேலைப் புகழ்ந்து வேல் வணக்கம் பாடியுள்ளார்.

மகாகவி பாரதியார் வேலைப் புகழ்ந்து பாடியுள்ளார். ‘‘ஆறு துணை’’ எனும் தலைப்பில் அவர்பாடிய பாடலில் வெற்றி வடிவேலன் அவனுடைய வீரத்தினைப் புகழ்ந்திடுவோம். சுற்றி நில்லாதே போபகையே துள்ளி வருகுது வேல் ஓம் சக்தி! ஓம்! என்று பாடுகின்றார்.

தலபுராணங்களின் தொடக்கத்தில் விநாயகர், பரமசிவம், அம்பிகை அடியவர்கள் முதலானவர்களுக்கே வணக்கம் கூறுவது வழக்கம். அபூர்வமாக செவ்வந்திப் புராணம் திருத்தணிகைப் புராணம், திருச்செந்தூர்ப் புராணம், செந்நிற்கலம்பகம் முதலியவற்றின் காப்புப் பகுதியில் மயில், சேவல், ஆகியவற்றுடன் வேலுக்கும் வணக்கம் கூறும் பாடல்கள் உள்ளன.

வேலாயுதத்தைப் பெரிய அளவில் பூஜை செய்து உலகிற்கு நன்மை புரிந்தவர் வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் ஆவர். அவர் வேலைத் துதிக்கும் வகையில் வேல்பத்து, வேல் அலங்காரம் முதலிய நூல்களை இயற்றியுள்ளார். மேலும், எண்ணில்லாதவர்கள் வேலாயுதத்தைப் புகழ்ந்து பாடியுள்ளதை அந்தந்த வட்டார இலக்கியங்களாலும், பல தனிப்பாக்களாலும் அறிய முடிகிறது.

தொகுப்பு: ராதாகிருஷ்ணன்

The post வினை தீர்க்கும் வேலாயுதத்தைப் போற்றும் பாடல்கள் appeared first on Dinakaran.

Tags : Muruga ,Lord ,Murugan ,Velayutham ,
× RELATED திருத்தணி முருகன் கோயிலில் 2ம் நாள்...