திருப்புத்தூர், மார்ச் 11: திருப்புத்தூர் அருகே நெற்குப்பையில் நேற்று நடந்த மீன்பிடி திருவிழாவில் ஏராளமானவர்கள் மீன்களை பிடித்தனர். திருப்புத்தூர் அருகே நெற்குப்பை பேரூராட்சியில் கீழத்தெரு பகுதியில் அமைந்துள்ளது செட்டிஊரணி. இந்த ஊரணியில் கடந்த ஆண்டு ரோகு, விரால், கட்லா போன்ற வளர்ப்பு மீன் குஞ்சுகள் வாங்கி விடப்பட்ட நிலையில் தற்சமயம் ஊரணியில் தண்ணீர் குறையவே மீன்பிடி திருவிழா நடத்த கிராமத்தார்களால் முடிவு எடுக்கப்பட்டது.
இப்போட்டியில் பங்கேற்க நபர் ஒன்றுக்கு 300 ரூபாய் வீதம் கிராம வளர்ச்சி நிதிக்காக வாங்கப்படும் என்றும், அதில் ஊத்தா கூடைகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஊர் முக்கியஸ்தர்களால் சமூக வலைத்தளங்களில் அறிவிப்பு செய்யப்பட்டது.
அதனை அடுத்து நேற்று அதிகாலை முதலே சுற்றுவட்டார பகுதியில் இருந்து 200க்கும் மேற்பட்ட மீன்பிடி வீரர்கள் ஆர்வமுடன் மீன்பிடி போட்டியில் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து ஊர் முக்கியஸ்தர்கள் விழாவை தொடங்கி வைக்க மின்னல் வேகத்தில் ஊரணியில் இறங்கிய மீன்பிடி வீரர்கள் ஊத்தா கூடை கொண்டு குத்தி துள்ளிய மீன்களை அள்ளினர். இதில் கலந்து கொண்ட நபர்களுக்கு இரண்டு கிலோவில் இருந்து நான்கு கிலோ வரை மீன்கள் கிடைத்தது. விழாவை காண சுற்றுவட்டார பகுதியில் இருந்து திரளான பொதுமக்கள் ஊரணி கரையில் அமர்ந்து ஆர்வமுடன் கண்டு களித்தனர்.
The post திருப்புத்தூர் அருகே நெற்குப்பையில் மீன்பிடி திருவிழா appeared first on Dinakaran.