ராமநாதபுரம், மார்ச் 11: ராமநாதபுரம் மாவட்ட அம்மன் கோயில்களில் மாசி மாத அமாவாசையையொட்டி சிறப்பு வழிபாடுகள் நடந்தது. உத்தரகோசமங்கை வராஹி அம்மனுக்கு மஞ்சள், பால், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 18 வகை அபிஷேகம் செய்யப்பட்டு, மஞ்சள் பிரசாதம் சாற்றி சிறப்பு வழிபாடு நடந்தது. மூலவர் தங்க கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தர். நூற்றுக்கணக்கான பெண்கள் விளக்கேற்றி வழிபட்டனர்.
கடலாடி பாதாள காளியம்மனுக்கு பால், மஞ்சள், குங்குமம் உள்ளிட்ட 11 வகை அபிஷேகங்கள் நடத்தப்பட்டு, சிறப்பு தீபாராதனை நடந்தது. இதுபோன்று கடலாடி ராஜராஜேஸ்வரி அம்மன், சமத்துவபுரம் வனபேச்சியம்மன், ராக்காச்சி அம்மன், பூங்குளம் சேது மாகாளியம்மன், காணீக்கூர் பாதாள காளியம்மன் ஆகிய கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தது.
அம்மனுக்கு இளநீர், பால், தயிர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல வகை அபிஷேகங்களும், சிறப்பு தீபாராதனைகளும் நடந்தது. மேலும் மாசி அமாவாசையை முன்னிட்டு தேவிப்பட்டினம், சேதுக்கரை மற்றும் மாரியூர் கடல்களில் பொதுமக்கள் புனித தீர்த்தமாடி, முன்னோர்களுக்கு திதி மற்றும் தர்ப்பணம் கொடுத்தும், மோட்ச தீபம் ஏற்றியும் வழிபட்டனர்.
The post கோயில்களில் அமாவாசை வழிபாடு appeared first on Dinakaran.