ஊட்டி, மார்ச் 11: திபெத் எழுச்சி தினத்தை முன்னிட்டு ஊட்டியில் ஏராளமான திபெத்தியர்கள் பங்கேற்ற அமைதி பேரணி நேற்று நடந்தது. திபெத்தை சீனா ஆக்கிரமித்து அதன் ஆதிக்கத்தின் கீழ் வைத்துள்ளது. சீனாவின் அடக்கு முறையால் திபெத் சீன ஆதிக்கத்தின் கீழ் வந்த பிறகு பெரும்பாலானவர்கள் திபெத்தில் இருந்து இந்தியா உள்ளிட்ட சில நாடுகளில் அகதிகளாக குடியேறினர்.
இவர்கள் இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் வசித்து வருகின்றனர். தமிழ்நாட்டில் ஊட்டி, கன்னியாகுமரி, கொடைக்கானல் போன்ற சுற்றுலா தளங்கள் நிறைந்த மாவட்டங்களில் அதிகளவு வசித்து வருகின்றனர். நீலகிரி மாவட்டத்தில் ஊட்டியில் 100க்கும் மேற்பட்ட திபெத் குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இதனிடையே திபெத்தில் சீனாவின் அத்துமீறல்களால் ஏராளமான திபெத்தியர்கள் இறந்துள்ளனர்.
திபெத்திற்கு சுதந்திரம் தர வேண்டியும் பல்வேறு போராட்டங்கள் நடத்தபட்டு வருகிறது. இந்நிலையில் ஆண்டுதோறும் ஆண்டுதோறும் மார்ச் 10ம் தேதி திபெத் எழுச்சி தினமாக கடைபிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு 100க்கும் மேற்பட்ட திபெத்தியர்கள் பங்கேற்ற அைமதி பேரணி ஊட்டியில் நேற்று நடந்தது.
இதில் பங்கேற்ற திபெத்தியர்கள் சீனாவிற்கு எதிராக போராடி உயிரிழந்த திபெத்தியர்களின் நினைவாகவும், சீனாவின் ஆக்கிரமிப்பில் இருந்து திபெத்திற்கு சுதந்திரம் கிடைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி பேரணியாக சென்றனர்.
தாவரவியல் பூங்கா அருகே துவங்கிய பேரணி எட்டின்ஸ் சாலை, ஏடிசி திடல் மற்றும் நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் பூங்கா அருகே நிறைவடைந்தது.
The post ஊட்டியில் திபெத்தியர்கள் அமைதி பேரணி appeared first on Dinakaran.