×

பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றாத ஒன்றிய அரசை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் விவசாயிகள் ரயில் மறியல்: நூற்றுக்கணக்கானோர் கைது

சென்னை: குறைந்தபட்ச ஆதார விலை உட்பட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றாத ஒன்றிய அரசை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் ரயில் மறியல் போராட்டம் நடத்தி நூற்றுக்கணக்கான விவசாயிகள் கைது செய்யப்பட்டனர்.வேளாண் விலை பொருட்களுக்கு லாபகரமான விலை வழங்க வேண்டும், எம்.எஸ்.சுவாமிநாதன் குழு பரிந்துரை நிறைவேற்ற முன்வர வேண்டும், குறைந்தபட்ச ஆதார விலைக்கு நிரந்தர சட்டம் கொண்டு வரவேண்டும், வேளாண்மைக்கான இலவச மின்சாரத்தை ரத்து செய்யும் மின்சார ஒழுங்குமுறை சட்டத்தை திரும்பபெற வேண்டும் உள்ளிட்ட 13 கோரிக்கைகள் வலியுறுத்தியும், தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற தவறிய ஒன்றிய மோடி அரசை கண்டித்தும் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த கோரிக்கைகளை வென்றெடுக்கும் நோக்கில் பஞ்சாப்பில் இருந்து கடந்த மாதம் 13ம்தேதி டெல்லி நோக்கி பேரணியாக புறப்பட்ட விவசாயிகள் அரியானா எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்டனர். விவசாயிகள் தொடர்ந்து முன்னேற முடியாமல் பல்வேறு வகைகளில் போலீசார் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதுவரை 5க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்து உள்ளனர். இதனால் டெல்லி எல்லையில் தங்கியிருந்து போராட்டத்தை விவசாயிகள் தொடர்ந்து வருகின்றனர். அதேநேரம் இந்த போராட்டத்தை தீவிரப்படுத்த திட்டமிட்டு உள்ள அவர்கள், இதற்காக 10ம்தேதி (நேற்று) நாடுமுழுவதும் ரயில் மறியலுக்கு அழைப்பு விடுத்திருந்தனர். அதன்படி நாடு முழுவதும் நேற்று ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு முழுவதுமும் விவசாய சங்கம் சார்பில் மறியல் போராட்டம் நடந்தது.

சென்னை எழும்பூரில் தமிழ்நாடு அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு மாநில தலைவர் பி.ஆர்.பாண்டியன் தலைமையில் ரயில் மறியல் போராட்டம் நடந்தது. திருச்சியில் தேசிய தென்னந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யக்காண்ணு தலைமையிலான விவசாயிகள் நேற்று மதியம் கோட்ைட ரயில் நிலையம் தண்டவாளத்திலேயே மாரிஸ்தியேட்டர் பாலம் வரை 1 கிலோமீட்டர் தூரம் ஒன்றிய மோடி அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பியவாறு நடந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் விவசாயிகள் தண்டவாளத்தின் குறுக்கே படுத்தும், அமர்ந்தும் கோஷங்கள் எழுப்பினர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 100 பேரை போலீசார் கைது செய்தனர்.

நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூரில் தமிழக காவிரி விவசாய சங்க மாநில அமைப்பு செயலாளர் ஸ்ரீதர் தலைமையிலான விவசாயிகள் நேற்று காலை 11 மணியளவில் கீழ்வேளூர் ரயில் நிலையத்தில் எர்ணாகுளம் – காரைக்கால் எக்ஸ்பிரஸ் ரயிலை மறிக்க கூடினர். அப்போது போலீசார் விவசாயிகளை தடுத்து நிறுத்தினர். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தமிழ்நாடு ஐக்கிய விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் வைத்தியநாதன் தலைமையிலான விவசாயிகள் சீர்காழி ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த திருச்சி- சென்னை சோழன் எக்ஸ்பிரஸ் ரயிலை மறிக்க வந்த போது போலீசார் தடுத்து நிறுத்தினர்.

திருவாரூரில் தமிழக காவிரி விவசாயிகள் சங்க மாவட்ட பொருளாளர் செல்வராஜ் தலைமையில் ரயில் மறியல் போராட்டம் நடத்த திருவாரூர் ரயில் நிலையம் வந்தனர். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரயிலை மறித்து போராட்டம் நடத்த வந்தவர்களை ரயில் நிலைய வாயிலிலேயே போலீசார் தடுத்து நிறுத்தினர். இதில் 11 பேரை போலீசார் கைது செய்தனர். நீடாமங்கலத்தில் தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட கவுரவ தலைவர் நீலன் அசோகன் தலைமையில் நிர்வாகிகள் காலை 9.30 மணியளவில் எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரயில் முன் மறியல் போராட்டம் நடத்த ஊர்வலமாக வந்தனர். ரயில் நிலையம் வந்த அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி 30 பேரை கைது செய்தனர்.

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் தமிழ்நாடு காவிரி பாதுகாப்பு விவசாயிகள் சங்க தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் வீரப்பன் தலைமையிலான விவசாயிகள் ரயில் மறியல் போராட்டம் நடத்த ரயில் நிலையம் வந்தனர். அவர்களை ரயில் நிலையம் முன் போலீசார் தடுத்து நிறுத்தினர். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் காவிரி – வைகை – கிருதுமால் – குண்டாறு விவசாயிகள் கூட்டமைப்பு சார்பில் விவசாயிகள் ரயில் மறியலில் ஈடுபட முயன்றனர். ஆனால் அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் ரயில் நிலைய நுழைவாயிலில் கோஷமிட்டு விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை போலீசார் கைது செய்தனர். சிவகங்கை ரயில்வே ஸ்டேஷனில் ஐக்கிய விவசாயிகள் சங்கம் சார்பில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்ற 20 விவசாயிகளை சிவகங்கை நகர் போலீசார் கைது செய்தனர்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் முருகசாமி தலைமையில் விவசாயிகள் விழுப்புரத்திலிருந்து மதுரை செல்லும் ரயில் முன்பு அமர்ந்தும், ரயில்வே இருப்புப்பாதையிலும் மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து போராட்டத்தில் 100க்கும் மேற்பட்ட 60 பேரை போலீசார் கைது செய்தனர்.சிதம்பரத்தில் அகில இந்திய விவசாய சங்கங்களின் சார்பில், ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது. இதையடுத்து போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் 25 பேரை கைது செய்தனர்.சேலம் ரயில் நிலையத்தில் மறியலில் ஈடுபட முயன்ற தமிழ்நாடு இயற்கை விவசாயிகள் முன்னேற்ற சங்கத்தினர் போலீசார் தடுத்ததால் ரயில்வே ஸ்டேஷன் முன்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதேபோல், கோவில்பட்டி, கன்னியாகுமார் ரயில் நிலையத்தில் மறியலில் ஈடுபட முயன்ற 42 பெண்கள் உள்பட 70 பேரை போலீசார் கைது செய்தனர். இதேபோல், தமிழ்நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் விவசாய சங்கம் மறியல், ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

The post பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றாத ஒன்றிய அரசை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் விவசாயிகள் ரயில் மறியல்: நூற்றுக்கணக்கானோர் கைது appeared first on Dinakaran.

Tags : Nadu ,Union government ,Chennai ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED “இதுவரை தமிழக அரசு கேட்ட நிதியை ஒன்றிய...