×

அதிமுகவுக்கு ஆதரவு; கதிரவனுக்கு எதிர்ப்பு

அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் மாநிலத் தலைவராக உசிலம்பட்டி தொகுதி முன்னாள் எம்எல்ஏ கதிரவன் உள்ளார். இக்கட்சியின் மாநில பொதுச்செயலாளராக கர்ணன் உள்ளார். சமீபத்தில் கதிரவன் தலைமையில் அக்கட்சியின் நிர்வாகிகள் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து அதிமுகவுக்கு ஆதரவு தெரிவித்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த கர்ணன், இந்தியா கூட்டணியில் அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சி அங்கம் வகிக்கும் நிலையில் கதிரவன் தன்னிச்சையாக எடப்பாடி பழனிசாமியை சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளதாகவும், தொடர்ந்து அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சி இந்தியா கூட்டணியையும், திமுகவையும் ஆதரிப்பதாகவும் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இந்நிலையில், அதிமுக கூட்டணியில் தேனியில் கதிரவன் போட்டியிட போவதாக கூறப்படுகிறது. இதற்காக தேனி நகரில் உள்ள தனியார் மண்டபத்தில் நேற்று மாலை கதிரவன் தலைமையில் நாடாளுமன்றத் தேர்தல் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்காக கதிரவனை வரவேற்கும் வகையில் தேனி நகரில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன.
நேற்று மாலை கூட்டம் துவங்குவதற்கு சுமார் 2 மணிநேரத்துக்கு முன்பாக அந்த கட்சியின் தேனி மாவட்டச் செயலாளர் சக்கரவர்த்தி தலைமையில் சுமார் 50 பேர், கூட்டம் நடைபெற உள்ள மண்டபத்திற்கு திரண்டு வந்தனர். ‘அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சி இந்தியா கூட்டணியில் தான் உள்ளது. திமுகவைத் தான் ஆதரிக்கிறது. கட்சியின் பெயரை தன்னிச்சையாக பயன்படுத்தி இங்கு கூட்டம் நடத்த அனுமதிக்க கூடாது’ என எதிர்ப்பு தெரிவித்து தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதைத் தொடர்ந்து பாதுகாப்புக்கு இருந்த தேனி டிஎஸ்பி பார்த்திபன் மற்றும் தேனி இன்ஸ்பெக்டர் உதயகுமார் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் சமரசம் ஏற்படாத நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்வதாக போலீசார் தெரிவித்தனர்.இதையடுத்து அங்கிருந்த சக்கரவர்த்தி ஆதரவாளர்கள் போலீசாருக்கு எதிராக குரல் எழுப்பினர். இதனால் போலீசாருக்கும் கட்சியினருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது கட்சியினர் சிலர் நிகழ்ச்சிக்காக மண்டபத்தின் அருகே கதிரவனை வரவேற்று வைக்கப்பட்டிருந்த பிளக்ஸ் பேனர்களை அடித்து கிழித்து எறிந்தனர். இதற்கு கதிரவன் அணியினர் எதிர்ப்பு தெரிவித்ததால் கலவர சூழல் ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் சக்கரவர்த்தி மற்றும் அவரது ஆதரவாளர்கள் 32 பேரை கைது செய்தனர். இதனால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

The post அதிமுகவுக்கு ஆதரவு; கதிரவனுக்கு எதிர்ப்பு appeared first on Dinakaran.

Tags : AIADMK ,Katiravan ,Kathiravan ,MLA ,Usilambatti ,All India Forward Bloc Party ,Karnan ,General Secretary ,Edappadi Palaniswami ,Dinakaran ,
× RELATED அதிமுக தேர்தல் பிரசாரத்தின்போது வாகன...