×

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் 22 பேர் கைது: இலங்கை கடற்படை அட்டூழியம்

அறந்தாங்கி: எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கோடியக்கரை அருகே தமிழக மீனவர்கள் 22 பேரை சிறைபிடித்த இலங்கை கடற்படையினர் அவர்களிடம் இருந்து 3 விசைப்படகுகளை பறிமுதல் செய்தனர். தமிழக மீனவர்கள் கடலில் மீன்பிடிக்க செல்லும்போது அவர்கள் எல்லை தாண்டி வந்ததாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்யும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. சமீபத்தில் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் மீனவர் 3 பேருக்கு சிறை தண்டனையுன், 18 பேருக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறை தண்டனையும் வழங்கப்பட்டது. இதை கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் தொடர் வேலை நிறுத்ததில் ஈடுபட்டனர். இந்நிலையில், நேற்று அதிகாலை புதுக்கோட்டை, காரைக்காலை சேர்ந்த 22 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்ேகாட்டை மாவட்டம் அறந்தாங்கி அடுத்த ஜெகதாப்பட்டினத்தை சேர்ந்த பத்மநாதனுக்கு சொந்தமான விசைப்படகில் காளியப்பன்(53), அசிலன்(18), கோடிமாரி(65), ஷேக் அப்துல்லா(35), தங்கராஜ்(54), ஜெயராமன்(40) ஆகிய 6 பேர் ஜெகதாப்பட்டினம் மீன்பிடி தளத்தில் இருந்து கடந்த 9ம்தேதி மீன் பிடிக்க சென்றனர். இதேபோல் ஜெகதாப்பட்டினத்தை சேர்ந்த செல்வராஜ் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் சரவணன்(24) என்பவர் மீன் பிடிக்க சென்றார்.

இந்நிலையில் நேற்று அதிகாலை கோடியக்கரைக்கு தென்கிழக்கே நடுக்கடலில் 7 மீனவர்கள் மீன் பிடித்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர், 2 விசைப்படகையும் சுற்றி வளைத்தனர். பின்னர், எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி 7 மீனவர்களை சிறைபிடித்தனர். மேலும் 2 விசைப்படகுகளையும் பறிமுதல் செய்து இலங்கை காங்கேசன் துறைமுகத்துக்கு கொண்டு சென்றனர்.

இதேபோல் காரைக்கால் மீன்பிடி தளத்தில் இருந்து கடந்த 6ம்தேதி கிளிஞ்சல்மேட்டை சேர்ந்த சுதன் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் காரைக்கால்மேடு கந்தசாமி(43), கிளிஞ்சல்மேடு சுந்தரமூர்த்தி (44), மயிலாடுதுறை மாவட்டம் கூழையாறை சேர்ந்த காளிதாஸ்(34), ஸ்ரீராம்(24), தரங்கம்பாடியை சேர்ந்த ஆனந்தபால்(54), பெருமாள்பேட்டையை சேர்ந்த புலவேந்திரன்(42), கவியரசன்(34), சிங்காரம்(33), புதுப்பேட்டையை சேர்ந்த மதன்(25), அன்புராஜ்(39), ராஜ்குமார்(23), கிசோர்(29), நாகை செந்தில்(35), நாகை செருதூர் நவீன்குமார்(18), பொன்னான்திட்டு நவீன்(22) ஆகிய 15 பேர் மீன் பிடிக்க சென்றனர்.

நேற்று அதிகாலை கோடியக்கரை தென்கிழக்கே மீன் பிடித்து கொண்டிருந்தபோது அந்த வழியாக ரோந்து வந்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி கந்தசாமி உள்ளிட்ட 15 பேரையும் சிறைபிடித்தனர். மேலும் விசைப்படகு மற்றும் மீன்பிடி உபகரணங்களை பறிமுதல் செய்தனர். இதையடுத்து காங்கேசன் துறைமுகத்துக்கு அழைத்து சென்று 15 மீனவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இலங்கை கடற்படையின் அட்டூழியத்தால் புதுக்கோட்டை, காரைக்கால் மீனவ கிராமங்களில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

The post எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் 22 பேர் கைது: இலங்கை கடற்படை அட்டூழியம் appeared first on Dinakaran.

Tags : Sri Lanka Navy ,Aranthangi ,Marines ,Kodiakara ,
× RELATED அறந்தாங்கி சட்டமன்ற தொகுதியில் 68.80 சதவீதம் வாக்கு பதிவு