×

தேர்தல் ஆணையர் திடீர் ராஜினாமா முறைகேடாக வெற்றி பெற மோடி, அமித்ஷாவின் சூழ்ச்சி: தலைவர்கள் பரபரப்பு குற்றச்சாட்டு

சென்னை: இந்திய தேர்தல் ஆணையர் திடீர் ராஜினாமா பல சந்தேகங்களை எழுப்புவதாகவும், தேர்தலில் பாஜ வெற்றி பெற பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் சூழ்ச்சி காரணமாக இருக்கலாம் எனவும் தலைவர்கள் பரபரப்பு குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர். நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் வேளையில், தேர்தல் தேதி அறிவிக்கும் முன்பே இந்திய தேர்தல் ஆணையர் அருண் கோயல் திடீரென ராஜினாமா செய்திருப்பது பல்வேறு சர்ச்சைகளையும், சந்தேகங்களையும் ஏற்படுத்தி உள்ளது. தேர்தலில் முறைகேடாக வெற்றி பெற பாஜ போடும் திட்டமாக இருக்கலாம் என அரசியல் கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. இதுதொடர்பாக, பல்வேறு தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அதன் விவரம் வருமாறு:

மத்திய சென்னை எம்பி தயாநிதி மாறன்:

நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இந்திய தேர்தல் ஆணையர் அருண் கோயல் திடீர் ராஜினாமா செய்திருப்பது பல்வேறு சந்தேகங்களையும், கேள்விகளையும் எழுப்பியுள்ளது. இது மோடி, அமித்ஷாவின் சூழ்ச்சியாகும். ஏற்கனவே மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் செயல்பாடுகள் பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது. தேர்தல் ஆணையமே சரியில்லாத காரணத்தால், மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் நாம் தான் வெற்றி பெறுவோம். ஆனால் அதனை ஏமாற்றும் வகையில் பாஜ இறங்கி விட்டது.

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன்:

இந்திய நாடாளுமன்ற ஜனநாயகத்தின் அடித்தளமாக இருப்பது தேர்தல் முறை. சுமார் 140 கோடி மக்களின் பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்கும் நாடாளுமன்ற பொதுத்தேர்தல் நேர்மையான முறையில் நடத்தப்பட வேண்டும். அதற்கனவே மூன்று உறுப்பினர்களைக் கொண்ட தேர்தல் ஆணையம் இயங்கி வருகிறது. அது அரசமைப்புச் சட்டத்தின்படி தன்னாட்சி அதிகாரம் கொண்ட சுதந்திரமான அமைப்பாக உருவாக்கப்பட்டிருக்கிறது. ஆனால், அந்த அமைப்பை தம்முடைய கைப்பாவையாக ஆக்கிக் கொள்வதற்கு மோடி அரசு தொடர்ந்து முயற்சி செய்து வருகிறது. 3 உறுப்பினர்கள் கொண்ட தேர்தல் ஆணையத்தில் இப்போது தலைமை தேர்தல் ஆணையர் மட்டுமே இருக்கிறார். 2 உறுப்பினர் பதவிகள் காலியாக உள்ளன. அவற்றை தனது விருப்பம் போல இப்போது மோடி அரசு நிரப்பப் போகிறது. அதன் மூலம் தேர்தல் ஆணையத்தை ஒட்டுமொத்தமாக தனது பிடிக்குள் கொண்டு வரப் போகிறது. பாஜவும் அதன் ஆதரவு சக்திகளும் தேர்தல் முறையை சீரழித்து, முறைகேடான முறையில் ஆட்சியை கைப்பற்றுவதற்கு முயற்சிக்கின்றன என்பதைதான் தேர்தல் ஆணையத்தில் நடக்கும் இந்த நாடகக் காட்சிகள் உணர்த்துகின்றன. எனவே, உச்ச நீதிமன்றம் இதை வேடிக்கை பார்க்க கூடாது. தேர்தல் ஆணையர் நியமன சட்டத்தை எதிர்த்து தொடுக்கப்பட்டுள்ள வழக்கையும், வாக்குப்பதிவு இயந்திரங்கள் தொடர்பான வழக்கையும் அவசர வழக்குகளாக விசாரித்து தீர்ப்பளிக்க வேண்டும். இந்திய தலைமை நீதிபதியும் அங்கம் வகிக்கும் தேர்வுக்குழுவை நியமித்து காலியாக உள்ள 2 ஆணையர்களை நியமிக்க வேண்டும். அவர்களை கொண்டு எதிர்வரும் நாடாளுமன்ற பொதுத் தேர்தலை நேர்மையான முறையில் நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்து அரசியல் தலையீடுகளின்றி தேர்தல் நடக்கும் என்கிற நம்பிக்கையை பொதுமக்களிடையே ஏற்படுத்த வேண்டும்.

புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி: 28 மாநிலங்களில் 543 நாடாளுமன்ற தொகுதிகளில் பல கட்டங்களாக தேர்தல் நடத்த வேண்டிய மிகப் பெரிய சவால் தேர்தல் ஆணையத்திற்கு இருக்கிறது. இப்படிப்பட்ட ஒரு சூழலில் அருண் கோயல் ராஜினாமா செய்திருப்பது பல்வேறு விதமான கேள்விகளை எழுப்பி இருக்கிறது. இந்த மிக முக்கியமான காலகட்டத்தில் அவர் ராஜினாமா செய்வதற்கு உண்டான என்ன சூழல் ஏற்பட்டது என்பதை நாட்டு மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். அவருடைய ராஜினாமா பல்வேறு விதமான சந்தேகங்களையும் தவறான சமிக்ஞைகளையும் வெளிப்படுத்துவதைப் போல தோன்றுகிறது. ஒன்றிய அரசும் இதற்கு விளக்கம் கொடுக்க வேண்டும்.

ஜனநாயகத்தின் ஒரு மிக முக்கியமான அமைப்பில் மிக உயர்ந்த பொறுப்பிலிருந்த அவர் ராஜினாமா செய்ததற்கு உண்டான காரணத்தை நாட்டு மக்களுக்கு விளக்கினால் மட்டுமே அது தேவையற்ற விவாதங்களையும், சந்தேகங்களையும் நிவர்த்தி செய்யும். வலுவான தேர்தல் ஆணையம் இருந்தால் மட்டுமே நேர்மையான தேர்தல்களை எதிர்பார்க்க முடியும். அதற்கு குந்தகம் விளைவிக்கக் கூடிய எந்த செயலும் ஏற்புடையதாகாது. எனவே, அருண் கோயல் ராஜினாமா செய்ததற்கான உண்மை காரணங்களை நாட்டு மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்

The post தேர்தல் ஆணையர் திடீர் ராஜினாமா முறைகேடாக வெற்றி பெற மோடி, அமித்ஷாவின் சூழ்ச்சி: தலைவர்கள் பரபரப்பு குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Tags : Modi ,Amitsha ,Chennai ,Election Commissioner of ,India ,Interior Minister ,Dinakaran ,
× RELATED பணம் சுருட்டல், கூலி ஆட்களை வைத்து...