×

முதல் இன்னிங்சில் மும்பை 224 ரன்னுக்கு ஆல் அவுட்

மும்பை: விதர்பா அணியுடனான ரஞ்சி கோப்பை இறுதிப் போட்டியில், மும்பை அணி முதல் இன்னிங்சில் 224 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. வாங்கடே மைதானத்தில் நேற்று தொடங்கிய இப்போட்டியில், டாஸ் வென்ற விதர்பா அணி கேப்டன் அக்‌ஷய் வாத்கர் முதலில் பந்துவீச முடிவு செய்தார். மும்பை தொடக்க வீரர்களாக பிரித்வி ஷா, பூபென் லால்வானி களமிறங்கினர். பொறுப்புடன் விளையாடிய இருவரும் முதல் விக்கெட்டுக்கு 20 ஓவரில் 81 ரன் சேர்த்து வலுவான அடித்தளம் அமைத்தனர்.

லால்வானி 37 ரன், பிரித்வி ஷா 46 ரன் எடுத்த நிலையில், அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்ததால் மும்பை அணி திடீர் பின்னடைவை சந்தித்தது. அதில் இருந்து மீள்வதற்கு முன்பாகவே முஷீர் கான் 6 ரன், ஷ்ரேயாஸ் அய்யர், கேப்டன் அஜிங்க்யா ரகானே தலா 7 ரன், ஹர்திக் தமோர் 5 ரன்னில் ஆட்டமிழந்து அணிவகுத்தனர்.இதனால் மும்பை அணி 38.3 ஓவரில் 111 ரன்னுக்கு 6 விக்கெட் இழந்து தடுமாறியது. ஷாம்ஸ் முலானி – ஷர்துல் தாகூர் இணைந்து 7வது விக்கெட்டுக்கு 43 ரன் சேர்த்தனர். முலானி 13 ரன், தனுஷ் கோடியன் 8 ரன் எடுத்து யாஷ் தாகூர் பந்துவீச்சில் வெளியேறினர். துஷார் தேஷ்பாண்டே பொறுப்புடன் கம்பெனி கொடுக்க, ஷர்துல் தாகூர் அரை சதத்தை நிறைவு செய்தார்.

இருவரும் 9வது விக்கெட்டுக்கு 42 ரன் சேர்க்க, மும்பை ஸ்கோர் 200 ரன்னை தாண்டியது. தேஷ்பாண்டே 14 ரன் எடுத்து ரன் அவுட்டானார். ஷர்துல் தாகூர் 75 ரன் (69 பந்து, 8 பவுண்டரி, 3 சிக்சர்) விளாசி உமேஷ் வேகத்தில் துபே வசம் பிடிபட, மும்பை அணி முதல் இன்னிங்சில் 224 ரன்னுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது (64.3 ஓவர்). தவால் குல்கர்னி (0) ஆட்டமிழக்காமல் இருந்தார். விதர்பா பந்துவீச்சில் ஹர்ஷ் துபே, யாஷ் தாகூர் தலா 3 விக்கெட், உமேஷ் யாதவ் 2, ஆதித்யா தாக்கரே 1 விக்கெட் வீழ்த்தினர்.அடுத்து களமிறங்கிய விதர்பா அணியும் அடுத்தடுத்து விக்கெட் சரிந்ததால் ரன் குவிக்க முடியாமல் திணறியது.

அமான் மோகடே 8 ரன் எடுக்க, துருவ் ஷோரி, கருண் நாயர் டக் அவுட்டாகினர். முதல் நாள் ஆட்ட நேர முடிவில் விதர்பா முதல் இன்னிங்சில் 3 விக்கெட் இழப்புக்கு 31 ரன் எடுத்துள்ளது. அதர்வா டெய்டே (21 ரன்), ஆதித்யா தாக்கரே (0) களத்தில் உள்ளனர். மும்பை பந்துவீச்சில் தவால் குல்கர்னி 2, ஷர்துல் தாகூர் 1 விக்கெட் வீழ்த்தினர்.விதர்பா அணி 193 ரன் பின்தங்கிய நிலையில் இன்று 2வது நாள் சவாலை சந்திக்கிறது.

The post முதல் இன்னிங்சில் மும்பை 224 ரன்னுக்கு ஆல் அவுட் appeared first on Dinakaran.

Tags : Mumbai ,Ranji Trophy ,Vidarbha ,Wangade Stadium ,Akshay Wadkar ,Dinakaran ,
× RELATED மும்பையில் பல இடங்களில் மழை நீர் தேக்கம்