×

அருண் கோயல் திடீர் ராஜினாமா புதிய தேர்தல் ஆணையர் 15ம் தேதி தேர்வு

* தேர்தல் தேதி அறிவிப்பு தள்ளிப்போக வாய்ப்பு

* ஆணையரின் ராஜினாமாவில் சந்தேகம்

* எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

புதுடெல்லி: தேர்தல் ஆணையர் அருண் கோயல் திடீரென ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, 2 புதிய தேர்தல் ஆணையர்களை வரும் 15ம் தேதி நியமிக்க ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது. இதனால் மக்களவை தேர்தல் தேதி அறிவிப்பதில் மேலும் தாமதம் ஏற்படும். இதற்கிடையே, அருண் கோயல் ராஜினாமாவில் சந்தேகம் இருப்பதாக ஆளும் பாஜ அரசு மீது எதிர்க்கட்சிகள் சரமாரியாக குற்றம்சாட்டி உள்ளன.  மக்களவை தேர்தல் அடுத்த மாதம் தொடங்கி மே மாதம் முடிக்கப்பட உள்ளது. இதற்காக அரசியல் கட்சிகள் முழு வீச்சில் ஆயத்தமாகி வருகின்றன.

நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து, தேர்தல் ஏற்பாடுகளை ஆய்வு செய்து வரும் தேர்தல் ஆணையம், வரும் 15ம் தேதி மக்களவை தேர்தல் அட்டவணையை வெளியிடும் என எதிர்பார்க்கப்பட்டது. இதற்கிடையே, தேர்தல் ஆணையர் அருண் கோயல் நேற்று முன்தினம் இரவு திடீரென தனது பதவியை ராஜினாமா செய்தார். அவரது ராஜினாமாவுக்கான காரணம் எதுவும் வெளியிடப்படவில்லை. ஏற்கனவே கடந்த மாதம் 15ம் தேதி, மற்றொரு தேர்தல் ஆணையர் அனூப் சந்திர பாண்டே பதவிக்காலம் முடிந்து ஓய்வு பெற்றார்.

எனவே 2 தேர்தல் ஆணையர்களும் இல்லாததால், தற்போது 3 உறுப்பினர்களை கொண்ட தேர்தல் ஆணையத்தில் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் மட்டுமே எஞ்சியிருக்கிறார். இதன் காரணமாக, மக்களவை தேர்தல் தேதி குறித்து பல்வேறு சந்தேகங்கள் எழுந்தன. இந்நிலையில், மக்களவை தேர்தலை சுமூகமாக நடத்த 2 புதிய தேர்தல் ஆணையர்களை உடனடியாக தேர்வு செய்ய ஒன்றிய அரசு திட்டமிட்டிருப்பதாக நேற்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதற்காக முதலில் ஒன்றிய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் தலைமையில் உள்துறை செயலாளர் மற்றும் பணியாளர்கள், பயிற்சித் துறை செயலாளர் ஆகியோரை கொண்ட தேடல் குழு இரு தேர்தல் ஆணையர் பதவிகளுக்காக தலா 5 பேர் என 10 பேரை தேர்வு செய்யும். பின்னர், பிரதமர் மோடி தலைமையில் ஒன்றிய அமைச்சர் ஒருவரும், மக்களவை எதிர்க்கட்சி தலைவரான காங்கிரசின் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி ஆகியோரும் அடங்கிய தேர்வுக்குழு, 10 பேரில் இருந்து 2 தேர்தல் ஆணையர்களை தேர்வு செய்யும்.

பிரதமர் மோடி தலைமையிலான தேர்வுக்குழு தேர்வு செய்யும் 2 புதிய தேர்தல் ஆணையர்கள் ஜனாதிபதி திரவுபதி முர்முவால் நியமனம் செய்யப்படுவார்கள். இதுதான் தற்போதைய தேர்தல் ஆணையர்கள் நியமன நடைமுறையாக உள்ளது. இதற்காக தேர்வுக்குழு வரும் 13 அல்லது 14ம் தேதிகளில் கூடும் எனவும், வரும் 15ம் தேதி 2 புதிய தேர்தல் ஆணையர்கள் நியமனம் செய்யப்படுவார்கள் என்றும் அரசு தரப்பு வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

எனவே, 15ம் தேதிதான் புதிய தேர்தல் ஆணையர்கள் நியமிக்கப்படுவார்கள் என்பதால் அன்றைய தினமே மக்களவை தேர்தல் தேதி வெளியாக வாய்ப்பில்லை என கருதப்படுகிறது. அதோடு, தேர்தல் அட்டவணை வெளியாவது மேலும் தள்ளிப் போக வாய்ப்பிருப்பதாகவும் அரசியல் கட்சிகள் கருத்து தெரிவித்துள்ளன. இதற்கிடையே, அருண் கோயல் ராஜினாமா செய்ததில் பல்வேறு சந்தேகங்கள் இருப்பதாக எதிர்க்கட்சி தலைவர்கள் நேற்று குற்றம்சாட்டி உள்ளனர்.

காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது டிவிட்டரில், ‘‘அருண் கோயில் பதவி விலக, தலைமைத் தேர்தல் ஆணையர் உடனான கருத்து வேறுபாடு காரணமா அல்லது சுதந்திரமாக செயல்படும் அரசியல் அமைப்புகளை கபளீகரம் செய்யும் மோடி அரசின் நெருக்கடிகள் காரணமா அல்லது தனிப்பட்ட காரணங்களுக்காக ராஜினாமா செய்தாரா? அல்லது கடந்த சில நாட்களுக்கு முன் கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதி போல அருண் கோயலும் பாஜவில் சேர்ந்து அரசியலுக்கு வரப் போகிறாரா? மோடியின் ஆட்சியில் ஒவ்வொரு நாளும் ஜனநாயக அமைப்புகளுக்கு அடிமேல் அடி விழுகிறது’’ என கூறி உள்ளார்.

உத்தவ் தாக்கரே பிரிவு சிவசேனா தலைவர் சஞ்சய் ராவத் அளித்த பேட்டியில், ‘‘டி.என்.சேஷன் காலத்தில் தேர்தல் ஆணையம் பாரபட்சமின்றி செயல்பட்டது. அப்படிப்பட்ட தேர்தல் ஆணையம் இப்போது இல்லை. கடந்த 10 ஆண்டுகளில் தேர்தல் ஆணையம் பாஜவின் கிளையாக மாறிவிட்டது. உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம், கவர்னர் மாளிகை போன்றவற்றில் பாஜவினர் நியமனம் செய்யப்பட்டதைப் போலவே, இனி தேர்தல் ஆணையர்களாக 2 பாஜவினரை நியமிப்பார்கள்’’ என்றார்.

ஏஐஎம்ஐஎம் தலைவர் அசாதுதீன் ஓவைசி கூறுகையில், ‘‘மக்களவை தேர்தலுக்கு முன்பாக அருண் கோயல் ராஜினாமா செய்ததற்கான காரணத்தை அவரோ, அரசாங்கமோ தெளிவுபடுத்தினால் நல்லது’’ என்றார்.மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ‘‘மக்களவை தேர்தல் தொடர்பாக பாஜ தலைவர்கள் மற்றும் அவர்களது உயர்மட்ட முதலாளிகளின் அழுத்தங்களுக்கு அடிபணியாததற்காக அருண் கோயலுக்கு வணக்கம் செலுத்துகிறேன். தேர்தல் என்ற பெயரில் பாஜ அரசு என்ன செய்ய விரும்புகிது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. வாக்குகளை கொள்ளையடிக்க நினைக்கிறார்கள்’’ என்றார்.

முன்னாள் ஒன்றிய அமைச்சரும், சுயேச்சை எம்பியுமான கபில் சிபல் தனது டிவிட்டரில், ‘‘மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் திடீரென இப்படி ராஜினாமா செய்வது நாம் கவலைப்பட வேண்டிய ஒன்று. ஏனென்றால், பொதுவாக இது நடக்காது. தனிப்பட்ட காரணங்களுக்காக, அவர் ராஜினாமா செய்வதற்கு சாத்தியமில்லை. அவருக்கும் தலைமைத் தேர்தல் ஆணையருக்கும் இடையே சில கருத்து வேறுபாடுகள் இருந்திருக்க வாய்ப்பு உள்ளது.

கடந்த 10 ஆண்டில் இந்த நாட்டில் உள்ள அனைத்து அரசு நிறுவனங்களும் மெதுவாக அழிக்கப்படுகின்றன. தற்போது சுதந்திரமான, நியாயமான தேர்தலை உறுதி செய்ய அரசியலமைப்பு ரீதியாக கடமைப்பட்டுள்ள தேர்தல் ஆணையமும் பலியாகி உள்ளது’’ என்றார். இதே போல பல்வேறு தலைவர்கள் ஆளும் பாஜ அரசுக்கு சரமாரியாக கேள்விகளை எழுப்பி உள்ளனர்.

* மின்னணு இயந்திர சர்ச்சை
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் நம்பகத்தன்மை குறித்து பல்வேறு அரசியல் கட்சிகளும் சந்தேகங்களை எழுப்பி உள்ளன. ஆனால், இந்த விவகாரத்தில், தேர்தல் ஆணையர்கள் அவர்களது சந்தேகங்களை தீர்க்க முயற்சிக்கவில்லை. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் தில்லு முல்லு செய்ய முடியாது என்று ஒற்றை வரியில் தேர்தல் பதிலளித்து விட்டது.

இது தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர்களை சந்திக்க கூட தேர்தல் ஆணையர்கள் நேரம் ஒதுக்க மறுத்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. குறிப்பாக விவிபேட் எனப்படும் ஒப்புகை சீட்டு இயந்திர பயன்பாட்டில் இந்த தேர்தலில் தேர்தல் ஆணையம் புதிய மாற்றம் கொண்டு வந்துள்ளதற்கு அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

* பாஜ கட்சிக்காரரைபோல் அதிகாரிகளை சாடிய அருண் கோயல்
தலைமை தேர்தல் ஆணையர், தேர்தல் ஆணையர் மற்றும் அதிகாரிகள் ஒவ்வொரு மாநிலமாக சென்று மக்களவை தேர்தல் ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்தினர். இந்த கூட்டத்தில் அந்தந்த மாநில அரசு உயர் அதிகாரிகள், போலீஸ் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர். இதில், எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் மட்டும் அருண் கோயல், அதிகாரிகளை கடுமையாக சாடியதாக தெரிகிறது.

பாஜ கட்சியை சேர்ந்தவர் பொது வெளியில் எழுப்பும் கேள்விகளை தேர்தல் ஆணையர் அருண் கோயல் கேட்டது அதிகாரிகளை அதிர்ச்சியடையச் செய்தது. அண்மையில் சென்னை வந்திருந்தபோது கூட மூத்த ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகள் சிலரை அருண் கோயல் கடிந்து கொண்டதாக கூறப்படுகிறது.

தனிநபர் அதிகாரத்தை தடுக்கும் நடவடிக்கை
* இந்திய அரசியலமைப்பின் 324வது விதியின்படி, தேர்தல் ஆணையர்களின் எண்ணிக்கையை ஜனாதிபதி முடிவு செய்து கொள்ளலாம்.

* ஆரம்ப காலத்தில் தேர்தல் ஆணையம் ஒரே ஒரு தலைமை தேர்தல் ஆணையரை மட்டும் கொண்டு செயல்பட்டு வந்தது.

* கடந்த 1989 அக்டோபர் 16ம் தேதி முதல் முறையாக 2 தேர்தல் ஆணையர்கள் நியமிக்கப்பட்டனர். அவர்களின் பதவிக்காலம் ஜனவரி 1, 1990 வரை என குறுகிய காலமாக இருந்தது.

* அதைத் தொடர்ந்து, அக்டோபர் 1, 1993 அன்று 2 கூடுதல் தேர்தல் ஆணையர்கள் நியமிக்கப்பட்டனர்.

* தன்னாட்சி அமைப்பான தேர்தல் ஆணையத்தில் தனிநபரின் அதிகாரத்தை தடுக்கவும், ஜனநாயகத்தை உறுதி செய்யும் விதமாகவும், தலைமை தேர்தல் ஆணையர், 2 தேர்தல் ஆணையர்கள் என 3 உறுப்பினர்கள் முறை இருப்பது குறிப்பிடத்தக்கது.

The post அருண் கோயல் திடீர் ராஜினாமா புதிய தேர்தல் ஆணையர் 15ம் தேதி தேர்வு appeared first on Dinakaran.

Tags : Arun Goyal ,Commissioner ,New Delhi ,Dinakaran ,
× RELATED மனைவியின் சீதனம் கணவருக்கு உரிமையில்லை: உச்சநீதிமன்றம் உத்தரவு