×

“40 தொகுதிகளிலும் நாம் வெற்றிபெறுவோம்’’ தேர்தல் ஆணையர் ராஜினாமா பல சந்தேகத்தை ஏற்படுத்துகிறது: தயாநிதி மாறன் எம்பி பேச்சு

பெரம்பூர்: இந்திய தேர்தல் ஆணையரின் திடீர் ராஜினாமா பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்துகிறது என்று தயாநிதி மாறன் எம்பி கூறினார். சென்னை கிழக்கு மாவட்ட திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி சார்பில், கொளத்தூர் தொகுதியில் உள்ள திருவிக. நகர் விளையாட்டு மைதானத்தில் நடைபெறும் கால்பந்து போட்டியை அமைச்சர் பி.கே.சேகர் பாபு, தயாநிதி மாறன் எம்பி, மேயர் பிரியா ஆகியோர் துவக்கி வைத்தனர்.

இந்த விழாவில், தயாநிதி மாறன் பேசியதாவது;
இந்திய தேர்தல் ஆணையர் அருண் ஜோயல் திடீரென ராஜினாமா செய்துள்ளது பல்வேறு சந்தேகங்களையும் கேள்விகளையும் எழுப்பியுள்ளது. ஒருவர் இல்லையென்றால் தலைமை தேர்தல் ஆணையர் சர்வாதிகாரமாக செயல்படுவார். அவரை தட்டிகேட்க முடியாது. இது மோடி, அமித்ஷாவின் சூழ்ச்சியாகும். ஏற்கனவேஇவிஎம் இயந்திரத்தின் செயல்பாடுகள் பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது. தேர்தல் ஆணையமே சரியில்லாத காரணத்தால் மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். 40 தொகுதிகளிலும் நாம்தான் வெற்றி பெறுவோம். ஆனால் அதனை ஏமாற்றும் வகையில் பாஜக இறங்கிவிட்டது.இவ்வாறு தயாநிதி மாறன் கூறினார்.

அமைச்சர் பி.கே.சேகர்பாபு பேசியதாவது;
நாடாளுமன்ற தேர்தல் போர் மேகங்கள் சூழ்ந்துள்ளன. எப்போது வேண்டுமானாலும் தேர்தல் தேதி அறிவிக்கப்படலாம். மைதானத்திற்கு சுறுசுறுப்பாக வருவதுபோன்று தேர்தலுக்கு வரவேண்டும். 28 கட்சிகள் இருந்தாலும் மும்முனை போட்டிகள் இருந்தாலும் முதல் அணியாக திமுக உள்ளது. விளையாட்டு பிரிவு அணி பிரகாசமாக இருக்கிறது. இளைஞரணிக்கு இணையாக இவ்வணி செயல்படுகிறது. முதலமைச்சரின் சாதனைகளுக்கு வாக்கினை பரிசளிக்க பொதுமக்கள் காத்திருக்கின்றனர். சட்டமன்ற தேர்தலில் பெற்ற வாக்குகளைவிட கூடுதலாக நாடாளுமன்ற தேர்தலில் வாக்குகள் பெறவேண்டும். தமிழகம் தான் இந்தியாவிலேயே விளையாட்டு துறையில் முன்னோடியாக உள்ளது.இவ்வாறு பேசினார்.

முன்னதாக, சென்னை புளியந்தோப்பு 73வது வட்டம் கன்னிகாபுரம் பகுதியில், சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் நிதியில் இருந்து ரூ.15.15 கோடி மதிப்பீட்டில் கன்னிகாபுரம் விளையாட்டு திடலை மேம்படுத்தும் பணிக்கான அடிக்கல் நாட்டு விழா இன்று காலை நடந்தது. இதில் சென்னை பெருநகர வளர்ச்சி குழும அமைச்சர் பி.கே. சேகர்பாபு கலந்து கொண்டு துவக்கி வைத்தார்.

சென்னை பட்டாளம் ஸ்ட்ரான்ஸ் சாலையில் உள்ள சென்னை உயர்நிலைப் பள்ளியில், முதல்வர் மு.க.ஸ்டாலினின் 71வது பிறந்தநாளை முன்னிட்டு, திருவிக. நகர் தொகுதியில் உள்ள 2000 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. இதில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு பங்கேற்று நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சிகளில், தாயகம் கவி எம்எல்ஏ, மண்டல குழு தலைவர் சரிதா மகேஷ் குமார், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் சந்துரு, மகேஷ்குமார், பகுதி செயலாளர்கள் ஐசிஎப்.முரளி, நாகராஜன், இளைஞர் அணி அமைப்பாளர் லோகேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

The post “40 தொகுதிகளிலும் நாம் வெற்றிபெறுவோம்’’ தேர்தல் ஆணையர் ராஜினாமா பல சந்தேகத்தை ஏற்படுத்துகிறது: தயாநிதி மாறன் எம்பி பேச்சு appeared first on Dinakaran.

Tags : Dayanidhi Maran ,Perambur ,India ,Chennai East District DMK Sports Development Team ,Thiruvika ,Kolathur Constituency ,Nagar Sports Ground… ,Dinakaran ,
× RELATED பாஜ மீண்டும் ஆட்சிக்கு வந்தால்...