×

ஹமாசுக்கு ஆதரவாக செயல்படும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது அமெரிக்கா வான்வழி தாக்குதல்

ஏடன்: ஹமாசுக்கு ஆதரவாக செயல்படும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது அமெரிக்கா வான்வழி தாக்குதலை நடத்தியது. இஸ்ரேல்-ஹமாஸ் இடையே போர் நீடித்து வருகிறது. இந்த போரில் ஏமனை சேர்ந்த ஹவுதி கிளர்ச்சியாளர்கள், ஹமாசுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகின்றனர். அவர்கள், ‘காசா மீதான தாக்குதலை இஸ்ரேல் நிறுத்தாவிடில் செங்கடல் வழியாக செல்லும் இஸ்ரேலுடன் தொடர்புடைய அனைத்து சரக்கு கப்பல்களையும் தாக்குவோம்’ என எச்சரித்தனர். அதன்படி கடந்தாண்டு நவம்பர் மாதம் முதல் செங்கடல் மற்றும் ஏடன் வளைகுடா பகுதி வழியாக பயணிக்கும் சரக்கு கப்பல்கள் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணைகள் மற்றும் டிரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

இதனிடையே செங்கடல் மற்றும் ஏடன் வளைகுடா பகுதியில் பாதுகாப்பான கப்பல் போக்குவரத்தை உறுதி செய்ய அமெரிக்கா தலைமையில் இங்கிலாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட பல நாடுகளின் கூட்டுப்படை உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படை, ஏமனில் ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக அவ்வப்போது வான்வழி தாக்குதலை நடத்தி வருகிறது. நேற்று ஏமனில் ஹவுதி கிளர்ச்சியாளர்களின் நிலைகளை குறிவைத்து அமெரிக்கா வான்வழி தாக்குதலை நடத்தியது. கப்பல்கள் எதிர்ப்பு ஏவுகணைகளை ஏற்றி சென்ற லாரி மீது குண்டு வீசப்பட்டதாகவும், அதில் 2 கிளர்ச்சியாளர்களும், எண்ணற்ற ஏவுகணைகளும் அழிக்கப்பட்டதாகவும் அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது.

கடந்த 2 தினங்களுக்கு முன்பு ஏடன் வளைகுடா பகுதியில் ரோந்து பணிக்காக நிறுத்தப்பட்டுள்ள அமெரிக்க போர்க்கப்பல் மீது தாக்குதல் நடத்துவதற்காக ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணைகளை வீசினர். அதை அமெரிக்க போர்க்கப்பல் சுட்டு வீழ்த்தியது. போர்க்கப்பலை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பதிலடியாகவே அமெரிக்கா ஏமனில் வான்வழி தாக்குதலை நடத்தியதாக கூறப்படுகிறது. இதற்கிடையில் செங்கடலை நோக்கி ஹவுதி கிளர்ச்சியாளர்கள் வெடிகுண்டுகளுடன் அனுப்பிய 15 டிரோன்களை அமெரிக்க போர்க்கப்பல் மற்றும் போர் விமானம் சுட்டு வீழ்த்தியதாக அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது.

The post ஹமாசுக்கு ஆதரவாக செயல்படும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது அமெரிக்கா வான்வழி தாக்குதல் appeared first on Dinakaran.

Tags : United States ,Houthi ,Hamas ,Aden ,Israel ,Yemen ,Gaza ,Dinakaran ,
× RELATED அமெரிக்காவில் ரோபோ நாய் அறிமுகம்…!!