×

எம்.பி. தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேர்காணல்: அதிமுக தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி நேர்காணல்

சென்னை: நாடாளுமன்ற தேர்தல் தேதி இந்த வாரத்தில் அறிவிக்கப்பட உள்ளநிலையில், திமுகவில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களுக்கான நேர்காணல் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று காலை தொடங்கியது. முதல்வர் மு.க.ஸ்டாலின் நேர்காணலை நடத்தி வருகிறார். அப்போது தொகுதி நிலவரம், வெற்றி வாய்ப்பு பற்றி கேட்டறிந்தார்.

நாடாளுமன்ற தேர்தல் தேதி இந்த வாரத்தில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி திமுக தனது கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு, அமைச்சர்கள் கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம், துணை பொது செயலாளர்கள் பொன்முடி, ஆ.ராசா, கொள்கை பரப்பு செயலாளர் திருச்சி சிவா ஆகியோர் அடங்கிய தொகுதி பங்கீட்டு குழுவினர், திமுக கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர்.

இதில் சுமூக உடன்பாடு ஏற்பட்டு காங்கிரஸ் கட்சிக்கு தமிழகத்தில் 9 நாடாளுமன்ற தொகுதிகள், புதுச்சேரியில் ஒரு தொகுதி என 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தலா 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. மதிமுகவுக்கு ஒரு தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. இவை எந்தெந்த தொகுதிகள் என்ற விவரம் ஓரிரு நாளில் வெளியாக உள்ளது. அதே போல விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு விழுப்புரம்(தனி), சிதம்பரம்(தனி) ஆகிய 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்திய யூனியன் முஸ்லிம் கட்சிக்கு ராமநாதபுரம் தொகுதியும், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு நாமக்கல் தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் புதிதாக திமுக கூட்டணியில் மக்கள் நீதி மய்யம் இணைந்துள்ளது. அந்த கட்சிக்கு வருகிற 2025ம் ஆண்டு நடைபெற உள்ள மாநிலங்களவை(ராஜ்யசபா) தேர்தலில் ஒரு இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கூட்டணி கட்சிகளுக்கு போக தமிழகத்தில் மீதமுள்ள 21 நாடாளுமன்ற தொகுதிகளில் திமுக போட்டியிடுகிறது.

இந்த நிலையில் திமுக சார்பில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட விரும்புவோருக்கான விண்ணப்பப் படிவங்கள் வினியோகம் கடந்த மாதம் 19ம் தேதி தொடங்கியது. ஏராளமானோர் ஆர்வமுடன் விண்ணப்பங்களை வாங்கினர். தொடர்ந்து கடந்த 1ம் தேதி முதல் சென்னை அண்ணா அறிவாலயத்தில் விருப்ப மனுக்கள் பெறப்பட்டு வந்தது. போட்டியிட விரும்புவோர் ரூ.50,000 கட்டணத்தை செலுத்தி விருப்ப மனுக்களை அளித்து வந்தனர். மார்ச் 7ம் தேதி வரை விருப்ப மனுக்கள் பெறப்பட்டது. 2984 பேர் விருப்ப மனு தாக்கல் செய்திருந்தனர். விருப்பமனு அளித்தவர்களிடம் மார்ச் 10ம் தேதி நேர்காணல் நடைபெறும் என்று திமுக தலைமை கழகம் அறிவித்திருந்தது.

அதன்படி இன்று காலையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள திமுக அலுவலகத்தில் நேர்காணல் நடந்தது. தமிழ்நாடு முதல்வர், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் நேர்காணலை நடத்தினார். அப்போது பொதுசெயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மை செயலாளர் கே.என்.நேரு உடன் இருந்தனர். முதலில் கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதிக்கான நேர்காணல் நடைபெற்றது. இதில் அந்த தொகுதியில் விருப்ப மனு அளித்தவர்கள், மேலும் அந்தந்த நாடாளுமன்ற தொகுதிக்கான மாவட்ட செயலாளர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். பரிந்துரையாளர்கள், ஆதரவாளர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை.

நேர்காணலின் போது தொகுதி நிலவரம், வெற்றி வாய்ப்பு எவ்வாறு உள்ளது என்பது போன்ற பல்வேறு நிலவரம் குறித்து வேட்பாளர்களிடம் முதல்வர் கேட்டறிந்தார். வேட்பாளரிடம் தற்போது வசிக்கும் தொகுதி, எந்த ஆண்டு முதல் கட்சியில் இருந்து வருகிறீர்கள், கட்சியில் வகித்த பதவிகள், உள்ளாட்சி மற்றும் வேற்று அமைப்புகளில் பொறுப்பு வகித்துள்ளீர்களா, கட்சி நடத்திய போராட்டங்களில் பங்கேற்றுள்ளீர்களா? என்ற விவரங்கள் கேட்கப்பட்டது. நீங்கள் போட்டியிட விரும்பும் தொகுதியை தோழமை கட்சிகளுக்கு ஒதுக்கும்பட்சத்தில், அதை திமுக தொகுதியாக நினைத்து தேர்தல் வெற்றிக்காக உழைக்க வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார். தொடர்ந்து தர்மபுரி, கடலூர், ஈரோடு நாடாளுமன்ற தொகுதிக்கான நேர்காணல் நடைபெற்றது. தொடர்ந்து ஒவ்வொரு தொகுதிக்கான நேர்காணல் நடைபெற்று வருகிறது.

நேர்காணல் நடைபெறுவதை முன்னிட்டு அண்ணா அறிவாலயம் தொண்டர்கள், நிர்வாகிகளால் களைகட்டி வருகிறது. அதேபோல், அதிமுக சார்பில் போட்டியிட விருப்பம் தெரிவிப்போருக்கான விருப்ப மனுக்கள் கடந்த மாதம் 24ம் தேதி முதல் இம்மாதம் 6ம் தேதி வரை பெறப்பட்டு வந்தன. அதன்படி, தமிழகம் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளில் அதிமுக சார்பில் 2500 விருப்ப மனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த நிலையில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் வேட்பாளர்களுக்கான நேர்காணல் இன்று நடைபெற்றது. அவ்வகையில், அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன், பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன், துணை பொதுச்செயலளர்கள் கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், தலைமை நிலைய செயலாளர் எஸ்.பி.வேலுமணி ஆகியோர் முன்னிலையில் நேர்காணல் நடைபெற்றது. இந்த நேர்காணலில் பங்கேற்றவர்களிடம் தொகுதி நிலவரம், வெற்றி வாய்ப்புகள் உள்ளிட்ட பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டதாக கூறப்படுகிறது.

முதற்கட்டமாக இன்று காலை திருவள்ளூர் (தனி), வடசென்னை, தென்சென்னை, மத்திய சென்னை,  பெரும்புதூர், காஞ்சிபுரம் (தனி), அரக்கோணம், வேலூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி ஆகிய தொகுதிகளுக்கான நேர்காணல் நடைபெற்றது. இதன் பிறகு உணவு இடைவேளைக்கு பிறகு, திருவண்ணாமலை, ஆரணி, விழுப்புரம் (தனி), கள்ளக்குறிச்சி, சேலம், நாமக்கல், ஈரோடு, திருப்பூர், நீலகிரி(தனி) மற்றும் கோவை ஆகிய தொகுதிகளுக்கு நேர்காணல் நடைபெற்றது. ஒட்டுமொத்தமாக இன்றைய தினத்தில் 20 தொகுதிகளுக்கான நேர்காணல் நடந்துள்ளது.நாளை பொள்ளாச்சி, கரூர், திண்டுக்கல், திருச்சி, பெரம்பலூர், கடலூர், சிதம்பரம் (தனி), மயிலாடுதுறை, நாகை (தனி), தஞ்சாவூர், சிவகங்கை, மதுரை, விருதுநகர், தேனி, ராமநாதபுரம், தூத்துக்குடி, தென்காசி (தனி), கன்னியாகுமர் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட தொகுதிகளுக்கு நேர்காணல் நடத்தப்படவுள்ளது.

ஓபிஎஸ் நேர்காணல்:எடப்பாடி பழனிசாமி அதிமுக சார்பில் ஒருபுறம் நேர்காணலை நடத்தி வரும் சூழ்நிலையில், ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் அதிமுக தொண்டர் உரிமை மீட்பு குழு சார்பில் இன்று காலை முதல் மயிலாப்பூரில் உள்ள தனியார் உணவு விடுதியில் அ.தொ.உ.மீ சார்பில் தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவிப்பவர்களிடம் விருப்ப மனு அளிக்கப்பட்டன. ரூ.10 ஆயிரம் செலுத்தி அதற்கான விண்ணப்பங்களை சொற்ப நபர்களே பெற்று சென்றுள்ளனர். இன்றைய தினம் தான் கடைசி நாள் என்பதால் அங்கேயே விண்ணப்பங்களை பூர்த்தி செய்து படிவங்களை சமர்ப்பித்தனர். அதன்படி, ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் இன்று மாலை 6 மணிக்கு விருப்ப மனு அளித்தவர்களிடம் நேர்காணல் நடத்தப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

The post எம்.பி. தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேர்காணல்: அதிமுக தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி நேர்காணல் appeared first on Dinakaran.

Tags : M. B. ,Chief Minister ,K. Stalin ,Edappadi Palanisamy ,Supreme Head Office ,Chennai ,Dimuq ,Anna Vidyalaya, Chennai ,Principal ,M.U. K. Stalin ,Edappadi Palanisami ,
× RELATED காலை உணவுத் திட்டம் எவ்வாறு...