×

வேகமாக குறையும் பாபநாசம் அணை நீர்மட்டம்: கடும் வெயிலால் நீர்வரத்தும் குறைந்தது

நெல்லை: மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கடும் வெயில் நிலவுவதால், பாபநாசம் அணையின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது. நேற்றைய நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 87 அடியாக சரிந்தது. நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பாபநாசம், மணிமுத்தாறு அணைகளின் மூலமே குடிநீர் மற்றும் விவசாய தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டு வருகிறது. பாபநாசம் அணையின் மூலம் நெல்லை மாவட்டத்தில் 40 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்களும், தூத்துக்குடி மாவட்டத்தில் 46 ஆயிரத்து 107 ஏக்கர் விவசாய நிலங்களும் பாசன வசதி பெறுகின்றன. இதன் கீழ் நெல்லை மாவட்டத்தில் வடக்கு, தெற்கு கோடை மேலழகியான் கால்வாய், கன்னடியன் கால்வாய், நதியுன்னி கால்வாய், கோடகன் கால்வாய், நெல்லை கால்வாய், பாளையங்கால்வாய் என 7 கால்வாய்களும், தூத்துக்குடி மாவட்டத்தில் மருதூர் மேலக்கால், கீழக்கால், வைகுண்டம் வடகால், தென்கால் என 4 கால்வாய்களுமாக மொத்தம் 11 கால்வாய்கள் உள்ளன.

கடந்த டிசம்பர் மாதத்தில் 2 நாட்கள் பெய்த தொடர் மழையால் பாபநாசம், மணிமுத்தாறு அணைகளில் பெரு வெள்ளம் ஏற்பட்டது. இதனால் தாமிரபரணி ஆற்றில் 1 லட்சம் கன அடிக்கும் அதிகமான தண்ணீர் திறந்து விடப்பட்டது. தாமிரபரணி பாசனத்தில் உள்ள பெரும்பாலான குளங்களில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் முழுவதும் வெளியேறியது. எனினும் குளங்களில் உடைப்புகள் உடனடியாக பொதுப்பணித் துறையின் மூலம் அடைக்கப்பட்டு அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டு பாசன குளங்கள் அனைத்தும் நிரப்பப்பட்டன. இதன் காரணமாக நெல்லை மாவட்டத்தில் பிசான பருவத்தில் மட்டும் 27 ஆயிரத்து 891 எக்டேர் பரப்பில் நெல் சாகுபடி செய்யப்பட்டது. மணிமுத்தாறு பாசனத்திலும் 1, 2வது ரீச்சின் கீழ் பிசான பருவத்தில் 23,154 ஏக்கர் பாசன நிலங்களுக்கு கடந்த ஜன.10ம் தேதி முதல் தண்ணீர் திறக்கப்பட்டது. பெருமழை காரணமாக இந்த ஆண்டு நெல் சாகுபடி பணிகள் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் தீவிரமாக நடந்தன.

இந்நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கடும் வறட்சி நிலவி வருகிறது. நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் இருந்து அணைகளுக்கு நீர்வரத்து குறைந்துள்ளதால் பாபநாசம் அணையின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது. நேற்றைய நிலவரப்படி, பாபநாசம் அணையின் நீர்மட்டம் 87.80 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 237 கன அடி நீர் மட்டுமே வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து விநாடிக்கு 1,454 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 72.96 அடியாக உள்ளது. அணைக்கு நீர்வரத்து மற்றும் திறப்பு இல்லை.மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 103.65 அடியாக உள்ளது. அணைக்கு விநாடிக்கு 55 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து விநாடிக்கு 465 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

பிசான பருவ நெல் சாகுபடிக்கு மார்ச் 31 வரை தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். தற்போது பாபநாசம் அணையில் இருந்து மட்டும் விநாடிக்கு 1,500 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. ஒரு சில இடங்களில் பிசான நெல் அறுவடை முடிந்த நிலையிலும் அணையில் இருந்து அதிகப்படியான தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அடுத்து வரும் ஏப்ரல், மே மாதங்கள் கோடை காலமாகும். இந்த காலங்களில் தாமிரபரணி பாசனத்தில் முன் கார் சாகுபடி மேற்கொள்ளப்படுவது வழக்கம். இந்த ஆண்டு பெருமழை பெய்துள்ள நிலையில், அணை தண்ணீரை பாதுகாப்பதன் மூலம் முன் கார் நெல் சாகுபடியும் இந்த ஆண்டு சாத்தியப்படும் என விவசாயிகள் நம்புகின்றனர்.

The post வேகமாக குறையும் பாபநாசம் அணை நீர்மட்டம்: கடும் வெயிலால் நீர்வரத்தும் குறைந்தது appeared first on Dinakaran.

Tags : Papanasam Dam ,Nella ,Tuthukudi ,Babanasam ,Manimutharu dams ,Dinakaran ,
× RELATED இந்திய அளவில் 576வது இடம் பிடித்து...