×
Saravana Stores

பாரம்பரியத்தை மறக்காமல் மகா சிவராத்திரி விழாவுக்கு மாட்டுவண்டி பயணம்

நிலக்கோட்டை: நிலக்கோட்டையைச் சேர்ந்த பொதுமக்கள் மாசி மகா சிவராத்திரி விழாவுக்கு 7 ஆண்டுகளுக்கு ஒருமுறை பாரம்பரிய முறைப்படி மாட்டுவண்டியில் பயணம் செய்து சாமி தரிசனம் செய்தனர். திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டையில் உள்ள கிழக்குதெரு பொதுமக்களுக்கு சொந்தமான குலதெய்வ வாலகுருநாதன் கோயில், மதுரை மாவட்டம், உசிலம்பட்டி தாலுகா திடியன் மலை அடிவாரத்தில் உள்ளது. இங்கு மாசி மகா சிவாரத்திரி இரவில் சிறப்பு வழிபாடு செய்வர். இதற்காக மாட்டுவண்டி கட்டி செல்வர்.

இதன்படி, கிழக்குத் தெரு பங்காளிகள் அனைவரும் நேற்று முன் தினம் நிலக்கோட்டையில் இருந்து குலதெய்வக் கோயிலுக்கு மாட்டுவண்டி கட்டி புறப்பட்டு சென்றனர். முன்னதாக வாணவேடிக்கையுடன் மேளதாளம் முழங்க, சாமி பெட்டி அழைத்து வந்தனர். நகரில் உள்ள மெயின்பஜார், அணைப்பட்டி ரோடு பகுதிகளில் ஊர்வலமாக வந்து கருப்புசாமி கோயில் சிறப்பு அபிஷேகம் செய்தனர். அங்கு வழிபாடு செய்து மாட்டுவண்டிகளில் நேற்று இரவு புறப்பட்டு, வாலகுருநாதன் கோயிலில் சாமி தரிசனம் செய்தனர்.

இது குறித்து கிழக்குத் தெரு பொதுமக்கள் கூறுகையில், ‘7 ஆண்டுகளுக்கு ஒருமுறை மாட்டுவண்டி மூலமாக குடும்பம் குடும்பமாக மகாசிவராத்திரி அன்று, எங்கள் குலதெய்வமான சுவாமியின் தரிசனம் பெற்று வழக்கமாகக் கொண்டுள்ளோம். இன்றைய நாகரீக உலகத்திலும் பழமையை மறக்காமல் அனைவரும் ஒன்றாக மாட்டு வண்டியில் செல்வோம்’ என்றார்.

The post பாரம்பரியத்தை மறக்காமல் மகா சிவராத்திரி விழாவுக்கு மாட்டுவண்டி பயணம் appeared first on Dinakaran.

Tags : Maha Shivratri festival ,Nilakottai ,Sami ,Masi Maha Shivratri festival ,Dindigul District ,East Street Community ,Kulatheiva Valagrunathan Temple ,Madurai ,
× RELATED நோய் தாக்குதலில் இருந்து வாழையை காக்க ஆலோசனை