×

கூடலூர் அருகே தொழிலாளி வீட்டை சூறையாடிய காட்டு யானை

கூடலூர்: கூடலூர் வனகோட்டத்தில் கோடை காலம் துவங்கியது முதல் கடும் வறட்சி நிலவுகிறது. இதனால், வனவிலங்குகள் தண்ணீர், உணவு தேடி குடியிருப்பு பகுதிக்கு படையெடுத்து வருகிறது. இதன்காரணமா, வனவிலங்கு-மனித மோதல் சம்பவம் நடந்து வருகிறது. இருப்பினும், வனத்துறையினர் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டாலும் வனவிலங்குகள் அழையா விருந்தாளியாக வந்த வண்ணம்தான் உள்ளன.கடந்த 2 நாட்களுக்கு முன்பு கூடலூரை அடுத்த தேவர் சோலை மற்றும் மாயார் ஆகிய பகுதிகளில் காட்டு யானை தாக்கி 2 பேர் பலியான சம்பவம் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்த சுவடுகள் மறைவதற்குள்ளாகவே நேற்று அதிகாலை வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு யானை ஒன்று ஓவேலி பேரூராட்சி திருவள்ளுவர் நகர் பகுதியை சேர்ந்த கணபதி என்பவரது வீட்டை உணவு தேடி தாக்கி சேதப்படுத்தி உள்ளது.

இதனை தொடர்ந்து யானை வீட்டின் அருகில் உள்ள பாக்கு மரங்களையும் உடைத்து சேதப்படுத்தியது. வீட்டில் உள்ளவர்கள் வெளியே சென்றிருந்ததால் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை. அதேபோல், நேற்று முன்தினம் இரவு மச்சிகொல்லி பகுதிக்கு வந்த காட்டு யானை ஊர்காவல் படைவீரர் சுரேஷ் என்பவரது வீட்டு தோட்டத்தில் உள்ள தென்னை, பாக்கு மரங்களை சேதப்படுத்தி உள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் கடும் அச்சத்தில் உள்ளனர்.
அருகிலுள்ள கிளன்வன்ஸ் பகுதியில் பகல் நேரத்தில் ஓய்வெடுக்கும் யானை இரவு நேரத்தில் குடியிருப்பு பகுதிகளுக்குள் நடமாடுகிறது. இப்பகுதியில் சுமார் 4க்கும் மேற்பட்ட வீடுகளை இந்த யானை உடைத்து சேதப்படுத்தி விட்டதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். யானையை வனப்பகுதிக்குள் விரட்டும் நடவடிக்கையில் வனத்துறையினர் ஈடுபட்டு வரும் நிலையிலும் யானைகள் குடியிருப்பு பகுதிகளுக்குள் வருவது தொடர் கதையாகவே உள்ளது.

The post கூடலூர் அருகே தொழிலாளி வீட்டை சூறையாடிய காட்டு யானை appeared first on Dinakaran.

Tags : Kudalur ,Kudalur Vanakottam ,
× RELATED நீலகிரி கூடலூர் அருகே யானை...